Amazing Tamilnadu – Tamil News Updates

தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரிப்பு… குறைய வாய்ப்புள்ளதா?

ங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில், நேற்றைய தினம் கிராமுக்கு 22 ரூபாய் அதிகரித்திருந்த தங்கம் விலையில் இன்று 21 ரூபாய் அதிகரித்துள்ளது.

கடந்த ஜூலை மாதம் வரை தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வந்த நிலையில், அதே மாதம் 22 ஆம் தேதியன்று மத்திய அரசு தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை குறைத்தது. இதன் பலனாக தங்கத்தின் விலை அதிரடியாக குறையத் தொடங்கியது. சவரனுக்கு ரூ.2,200 வரை குறைந்தது. அதன் தொடர்ச்சியாக விலை குறைந்து கொண்டே வந்து ஒரு சவரன் ரூ.51,000 க்கும் கீழே சென்றது. இதனால், நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் பிள்ளைகளின் திருமணத்துக்கு தயாரான குடும்பங்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

ஆனால் இந்த ஆறுதல் சில நாட்கள் மட்டுமே நீடித்தது. கடந்த மாதம் இறுதியில் இருந்து மீண்டும் தங்கம் விலை உயர ஆரம்பித்து இருக்கிறது. அதிலும் கடந்த 10 நாட்களாக தங்கம் விலை சரசரவென உயர்ந்தது.

இந்த நிலையில், சென்னையில் இன்று தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்துள்ளது. 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.21 உயர்ந்து ரூ.7,000-க்கு விற்பனையாகிறது. இதுவரை இல்லாத புதிய உச்சமாக ஒரு சவரன் தங்கம் இன்று ரூ.56,000-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.98-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

காரணம் என்ன?

அமெரிக்க மத்திய வங்கி தனது வட்டி விகிதத்தைத் தொடர்ந்து குறைக்கும் என அறிவித்துள்ள நிலையில், தங்கம் விலை மேலும் உயரவே வாய்ப்பு இருப்பதாகவும், அடுத்த 12 முதல் 18 மாதங்களில் தங்கம் விலை புதிய உச்சத்தை தொடும் என்றே நிபுணர்கள் கூறுகின்றனர்.

அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதங்களைக் குறைக்கும் போது, ​​பத்திரங்கள் மற்றும் சேமிப்புக் கணக்குகளில் போடப்பட்டுள்ள பணத்துக்கான வட்டி விகிதம் குறையும். இதனால், முதலீட்டாளர்கள் தங்களது சேமிப்பை தங்கத்தின் மீது முதலீடு செய்யவே அதிகம் விரும்புவார்கள் என்பதால், வரும் காலங்களில் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரிக்கும் என அவர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.

அத்துடன், வட்டி விகிதக் குறைப்பால் டாலர் மீதான மதிப்பு குறையும். தங்கத்தின் விலை டாலரில் இருப்பதால், மற்ற நாணயங்களை வைத்திருக்கும் முதலீட்டாளர்களுக்கு அது மலிவாகி, உலகளாவிய தேவையை அதிகரித்து, விலை உயர்வுக்கு வழிவகுப்பதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

Exit mobile version