சென்னையில் தங்கம் விலை ஏப்ரல் 17 வியாழக்கிழமை அன்று புதிய உச்சத்தை எட்டியது. ஒரு பவுன் தங்கம் விலை ரூ.71,000-ஐ கடந்துள்ளது பொதுமக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த இரு நாட்களில் மட்டும் பவுனுக்கு ரூ.1,600 அதிகரித்துள்ளது.
இந்த ஆண்டில் கடந்த ஜனவரி 29 ஆம் தேதி முதல் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது. ஒரு பவுன் விலை கடந்த மார்ச் 13 ஆம் தேதி ரூ. 64,960, மார்ச் 31 ல் ரூ.67,600, ஏப்ரல் 1 ல் ரூ.68,080 என உச்சத்தை தொட்டது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சீனப் பொருட்களுக்கு 245% வரை இறக்குமதி வரி விதித்துள்ளார், இதற்கு பதிலடியாக சீனாவும் அமெரிக்கப் பொருட்களுக்கு வரி விதிப்பை அதிகரித்து வருகிறது. இந்த வரி உயர்வு உலக பங்குச் சந்தைகளில் சரிவை ஏற்படுத்தி, முதலீட்டாளர்களை பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை நோக்கி திருப்பியுள்ளது.[
மேலும், ரஷ்யா-உக்ரைன் போர், மத்திய கிழக்கு பதற்றங்கள், இந்திய ரூபாயின் மதிப்பு ஏற்ற இறக்கம் ஆகியவை தங்கத்தின் தேவையை உயர்த்தியுள்ளன. சீனா, ரஷ்யா உள்ளிட்ட மத்திய வங்கிகள், பெருமளவு தங்கக் கொள்முதல் செய்வதும் விலை உயர்வுக்கு கூடுதல் தூண்டுதலாக அமைந்துள்ளது. உள்ளூரில், திருமண சீசன் போன்றவற்றால் நகைகளுக்கான தேவை அதிகரித்துள்ளதும் விலை உயர்வுக்கு இன்னொரு காரணமாக அமைந்துள்ளது.
கடந்த 12 ஆம் தேதி ஒரு பவுன் தங்கம் ரூ.70,160 ஆக உயர்ந்து, வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டது. இதன்பிறகு, 2 நாட்களுக்கு தங்கம் விலை சற்று குறைந்தது.
ஆனால், சென்னையில் ஆபரண தங்கம் விலை நேற்று வரலாறு காணாத புதிய உச்சத்தை பதிவு செய்தது. 22 காரட் தங்கம் நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.8,720-க்கும், ஒரு பவுன் ரூ.69,760-க்கும் விற்கப்பட்டது. நேற்று கிராமுக்கு ரூ.95 என பவுனுக்கு ரூ.760 உயர்ந்தது. இதனால், நேற்று ஒரு கிராம் ரூ.8,815-க்கும், ஒரு பவுன் ரூ.70,520-க்கும் விற்பனையானது. 24 காரட் சுத்த தங்கம் விலை நேற்று ஒரு கிராம் ரூ.9,616, ஒரு பவுன் ரூ.76,928 ஆக இருந்தது.
இந்நிலையில், இன்று தங்கத்தின் விலை புதிய வரலாற்று உச்சத்தை எட்டியது சென்னையில் 22 காரட் தங்கம் 1 கிராமுக்கு ரூ.105 உயர்ந்து ரூ.8,920-க்கும், ஒரு பவுனுக்கு ரூ.840 உயர்ந்து ரூ.71,360-க்கும் விற்கப்பட்டது.
முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்?

தற்போதைய சூழலில், தங்கத்தில் முதலீடு செய்வதில் கவனமாக முடிவெடுக்க வேண்டும் எனக் கூறும் பொருளாதார வல்லுநர்கள், “அமெரிக்கா-சீனா வர்த்தகப் போர் மற்றும் புவிசார் பதற்றங்கள் 2025-இல் தங்கம் விலையை மேலும் உயர்த்தலாம். நீண்டகால முதலீடாக தங்கம் பாதுகாப்பானது. ஆனால் குறுகிய காலத்தில் விலையில் ஏற்ற இறக்கம் இருக்கும்” என்கிறார்கள்.
சென்னை நகை வியாபாரிகள் சங்கத்தைச் சேர்ந்தவர்கள், “ அமெரிக்க – சீனா இடையேயான வர்த்தகப் போரால் தங்கம் விலை தற்காலிகமாகக் குறைய வாய்ப்பு குறைவு. உடனடி தேவை இல்லையெனில், சிறு தொகைகளில் படிப்படியாக வாங்குவது நல்லது. தங்க நாணயங்கள் அல்லது பார்கள், நகைகளை விட குறைந்த செலவில் கிடைக்கும்” என்கிறார்கள். அதே சமயம், “தங்க ETFs மற்றும் தங்கப் பத்திரங்கள் (Sovereign Gold Bonds) முதலீட்டுக்கு ஏற்றவை. ஏனெனில் இவை குறைந்த செலவில் வரி சலுகைகளை வழங்குகின்றன என்பதால் அவற்றை வாங்கலாம்” எனப் பரிந்துரைக்கிறார்கள் முதலீட்டு ஆலோசகர்கள்.