தங்கம் ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்களின் எதிரான பாதுகாப்பு சொத்தாகவும் திடீர் செலவுகளைச் சமாளிக்க உதவும் ஏடிஎம்-ஆகவும் பார்க்கப்படுகிறது. ஆனால், தற்போது அதிகரித்து வரும் உலக பொருளாதார மந்தநிலை அச்சம் காரணமாக, தங்கத்தின் விலை உயர்வதற்கு பதிலாக சரிவை சந்தித்து வருகிறது.
தொடர்ந்து உச்சம் கண்டு வந்த தங்கத்தின் விலை, கடந்த சில தினங்களாக சரிவை சந்தித்து வருகிறது. கடந்த 3 ஆம் தேதி, ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.8, 560-க்கும், பவுன் ரூ.68,480-க்கும் விற்பனையானது. ஏப்ரல்
4 ஆம் தேதி ஒரு கிராம் தங்கம் ரூ.160 குறைந்து, ரூ.8,400-க்கும், ஒரு பவுன் ரூ.1,280 குறைந்து ரூ.67, 200-க்கும் விற்பனையானது. 5 ஆம் தேதி பவுனுக்கு ரூ.720 குறைந்து ரூ.66,480 விற்பனையானது. கிராமுக்கு ரூ.90 குறைந்து ரூ.8,310-க்கு விற்பனை செய்யப்பட்டது.
நேற்று பவுனுக்கு ரூ.200 குறைந்து, ரூ.66,280க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.25க்கு குறைந்து ரூ.8,285க்கு விற்பனையானது. இந்த நிலையில், தங்கம் விலை தொடர்ந்து சரிவை கண்டு வருகிறது. அதன்படி, இன்று ஆபரண தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.480 குறைந்து ஒரு பவுன் ரூ.65,800-க்கு விற்பனையாகிறது. கிராமுக்கு ரூ.60 குறைந்து ஒரு கிராம் ரூ.8,225-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலையில் ஏற்பட்டு வரும் இந்த சரிவு முதலீட்டாளர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பின்னால் உள்ள காரணங்கள் என்ன? எதிர்காலத்தில் தங்கம் விலையில் 38% சரிவு ஏற்படும் என்ற கணிப்பு உண்மையாகுமா என்பது குறித்து நிபுணர்கள் சொல்லும் கருத்து இங்கே…
விலை சரிவுக்கான காரணங்கள்
கடந்த ஒரு வருடமாக, பணவீக்க அச்சங்கள், பொருளாதார நெருக்கடிகள் மற்றும் மத்திய வங்கிகளின் தங்க சேமிப்பு உத்திகள் தங்க விலையை உயர்த்தின. ஆனால், தற்போதைய சரிவு ஒரு மாறுபட்ட சூழலை சுட்டிக்காட்டுகிறது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்த திடீர் இறக்குமதி வரி உயர்வு மற்றும் சீனாவின் 34% பதிலடி வரி உயர்வு போன்றவை உலக சந்தைகளில் பீதியை ஏற்படுத்தியுள்ளன. சீனா, அரிய மண் உலோகங்களின் ஏற்றுமதியை கட்டுப்படுத்தியது, இந்த பதற்றத்தை மேலும் அதிகரித்தது. இதனால், உலக பங்குச் சந்தைகள் கடந்த வாரம் 6 டிரில்லியன் டாலர்கள் அளவுக்கு இழப்பைச் சந்தித்தன; ஜப்பான் நிக்கி குறியீடு 9% சரிந்தது. இத்தகைய சூழலில் தங்கம் விலையில் தொடர் சரிவு ஏற்பட்டு வருகிறது.
நிறுவன முதலீட்டாளர்கள், பங்கு மற்றும் பிற சொத்து வகைகளில் ஏற்பட்ட இழப்புகளை சமாளிக்க தங்கத்தை விற்று பணமாக்குவதாகவும், நிதி தேவைகளைச் சந்திக்க இதை பயன்படுத்துவதாகவும் கருதப்படுகிறது. “சந்தை நிச்சயமற்ற தன்மைகளால் குழம்பியுள்ளது. அபாயமற்ற முதலீடு சிறிது ஆதரவை அளித்தாலும், லாபம் எடுப்பது குறுகிய கால பலவீனத்திற்கு காரணமாக இருக்கலாம்,” என்கிறார்கள் நிபுணர்கள்.
ஃபெடரல் ரிசர்வ் வங்கி மீதான எதிர்பார்ப்பு
அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களை குறைக்கும் என்ற எதிர்பார்ப்பு தங்க விலையில் தாக்கத்தை ஏற்படுத்துவதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். அமெரிக்க நிதி நிறுவனமான Goldman Sachs, 2025 ஆம் ஆண்டில் வட்டி விகித குறைப்பு 130 அடிப்படை புள்ளிகள் வரை இருக்கும் என மதிப்பிட்டுள்ளது. இது முந்தைய 105 புள்ளிகளை விட அதிகம். பெடரல் தலைவர் ஜெரோம் பவல் “வட்டி விகித குறைப்புக்கு அவசரமில்லை” எனக் கூறினாலும், வர்த்தகர்கள் மே மாதத்திற்குள் 54% அளவுக்கு வட்டி விகித குறைப்பு இருக்கலாம் என கணித்துள்ளனர். வட்டி விகித குறைப்பு பொதுவாக தங்கத்திற்கு ஆதரவாக இருக்கும், ஆனால் தற்போதைய சரிவு, முதலீட்டாளர்கள் அனைத்து சொத்து வகைகளிலும் திருத்தத்தை எதிர்பார்ப்பதை காட்டுகிறது.
தங்கம் விலையில் 38% சரிவு சாத்தியமா?

அமெரிக்க நிதி ஆய்வு நிறுவனமான Morningstar நிபுணர் ஜான் மில்ஸ், தங்கம் ஒரு அவுன்ஸ் 1,820 டாலர் ஆக சரியும் என கணித்துள்ளது. இது தற்போதைய விலையான 3,000 டாலரிலிருந்து 38% குறைவு ஆகும். “பணவீக்க எதிர்பார்ப்புகள் தணிந்து, வர்த்தக சீரமைப்பு ஏற்பட்டால், தங்கம் அதன் விலையில் பெரிய திருத்தத்தை சந்திக்கும்,” என அந்த நிறுவனம் கூறுகிறது. இது நீண்டகால கணிப்பாக இருந்தாலும், தற்போதைய சரிவு இதற்கு அடித்தளமாக அமையலாம். உலக பொருளாதார மந்தநிலை மற்றும் அமெரிக்கா-சீன வர்த்தக போர் தீவிரமடைந்தால், தேவை குறைவு தங்கத்தின் விலையில் மேலும் சரிவை ஏற்படுத்தலாம்.
முதலீட்டாளர்களுக்கான அறிவுறுத்தல்
இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில், தங்கம் பண்பாட்டு மற்றும் முதலீட்டு மதிப்பு கொண்டது. திருமண சீசன் மற்றும் பண்டிகைகள் அடிப்படையில் பார்க்கும்போது, இந்த விலை சரிவு சாமானியருக்கு சிறு நிவாரணமாக இருக்கலாம். ஆனால், 38% சரிவு நிகழ்ந்தால், நகை வாங்குவோர் மகிழ்ச்சியடைந்தாலும், தங்கத்தில் முதலீடு செய்தவர்களுக்கு இது பெரும் இழப்பாக அமையும். எனவே முதலீட்டாளர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். உலக சந்தை நிலவரம் மற்றும் அமெரிக்க ஃபெடரல் முடிவுகள் தான் இதன் எதிர்காலத்தை தீர்மானிக்கும் என்பதே நிபுணர்களின் கருத்தாக உள்ளது.