தங்க நகைக்கடன் பெறுவதற்கான விதிகளை ரிசர்வ் வங்கி கடுமையாக்கியுள்ளது. ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளதால், இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
ரிசர்வ் வங்கி வெளியிட்ட 9 புதிய விதிகள்
ரிசர்வ் வங்கி வெளியிட்ட 9 புதிய விதிகளின் படி, தங்க நகையின் மதிப்பில் 75 சதவீதம் மட்டுமே நகைக்கடன் வழங்கப்படும். எடுத்துக்காட்டாக நகையின் மதிப்பு 10,000 ரூபாய் என்றால் 7500 ரூபாய் வரை மட்டுமே நகைக்கடன் வழங்கப்படும். மேலும் தங்க நகை கடன் வாங்குபவர்கள் நகைக்கு தாங்கள்தான் உரிமையாளர் என்ற ஆதாரத்தை வழங்க வேண்டும்.
தங்க நகையின் தூய்மைத்தன்மை குறித்து வங்கியிடம் சான்றிதழ் பெற வேண்டும். குறிப்பிட்ட வகையிலான தங்கங்களுக்கு மட்டுமே நகைகடன் வழங்கப்படும். நகை 22 காரட் அல்லது அதற்கு மேல் இருக்க வேண்டும்.
வெள்ளி நகைகளுக்கும் நகைக்கடன் பெறலாம். தனிநபர்கள் ஒரு கிலோ தங்க நகை வரை மட்டுமே அடக்கு வகைக்க முடியும். நகைக்கடனாக பெறப்படும் தங்கம் 22 காரட் மதிப்பின் அடிப்படையில் கடன் வழங்கப்படும். நகைக்கடன் ஒப்பந்தத்தில் முழுமையான தகவல் இடம்பெற்றிருக்க வேண்டும்.
நகைக்கடன் வாங்கியவர் அந்த கடனை திரும்ப செலுத்திய 7 வேலை நாட்களில் நகையை திரும்பி ஒப்படைக்க வேண்டும். 7 வேலை நாட்களில் ஒப்படைக்கவில்லையென்றால் கடன் கொடுத்தவர் (வங்கிகள்) ஒரு நாளைக்கு தலா ரூ. 5,000 அபராதமாக வழங்க வேண்டும் என புதிய விதிகள் தெரிவிக்கின்றன.

முன்னதாக கடந்த ஏப்ரலில் , அடமானம் வைத்திருக்கும் தங்கத்தை முழுவதும் மீட்டப் பிறகு தான், மீண்டும் அந்த நகைகளை அடமானம் வைக்க முடியும் என்றும், தங்க நகைகளை மீட்காமல் அப்படியே அடமானக் காலத்தை நீட்டிக்க முடியாது என்றும் ரிசர்வ் வங்கி உத்தரவிட்டிருந்தது.
‘கந்துவட்டியை நோக்கி தள்ளப்படுவார்கள்… ‘
இந்த நிலையில், தற்போது நகையை அடகு வைக்கவே கடும் கட்டுப்பாடுகளைக் கொண்ட புதிய 9 விதிகளை ரிசர்வ் வங்கி அமல்படுத்தி இருப்பது ஏழை, எளிய மக்களைப் பற்றி கொஞ்சமும் சிந்திக்காமல் எடுக்கப்பட்ட முடிவு என எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
கந்து வட்டிக் கொடுமைகளிலிருந்து தப்பிக்கவும், அவசர அவசியத் தேவைகளுக்கும் ஏழை எளிய மக்கள் உடனடி பண உதவி பெறுவதற்கு வங்கி நகைக்கடன்களையே பெரிதும் நம்பியுள்ளனர். குறைந்த வட்டியில் பாதுகாப்பான மற்றும் நம்பகமான கடன் பெறும் வழியாக இருந்த வங்கி நகைக்கடன் முறையை, ரிசர்வ் வங்கியின் புதிய அறிவிப்புக் கடினமானதாக மாற்றியுள்ளதால் பொதுமக்கள் மிகுந்த வேதனைக்கு ஆளாகியுள்ளனர்.
பெரும்பாலான ஏழை மற்றும் நடுத்தர மக்கள், குறிப்பாக கிராமப்புறங்களில் வசிப்பவர்கள், திருமணம் அல்லது பிற சந்தர்ப்பங்களில் பெற்ற பழைய நகைகளுக்கு உரிமை ஆவணங்கள் அல்லது தூய்மை சான்றிதழ் வைத்திருக்க வாய்ப்பில்லை. இதனால், அவர்கள் வங்கிகளில் கடன் பெறுவது கடினமாகி, அவசர பணத் தேவைகளுக்கு மாற்று வழிகளை நாட வேண்டிய நிலை ஏற்படுகிறது. இது கந்து வட்டி போன்ற முறைகளை நோக்கி அவர்களைத் தள்ளி, கடன் சுமையை அதிகரிக்கும்.
மேலும், கடனை முழுமையாக திருப்பிச் செலுத்திய பிறகு மறுநாள் மட்டுமே மறு அடமானம் வைக்க முடியும் என்ற விதி, ஏழை மக்களுக்கு பெரும் சுமையாக உள்ளது. முன்பு, வட்டி மட்டும் செலுத்தி நகையை மறு அடமானம் வைத்து பணம் பெற முடிந்தது. ஆனால், இப்போது முழு கடன் தொகையையும் ஒரே நேரத்தில் திருப்பிச் செலுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது. பெரும்பாலான ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு இத்தகைய பெரிய தொகையை உடனடியாக திரட்டுவது சாத்தியமில்லை. இதனால், அவர்கள் நகைகளை மீட்க முடியாமல், அதிக வட்டி விகிதங்களில் தனியார் நிதி நிறுவனங்கள் அல்லது கந்து வட்டிக்காரர்களை நாட வேண்டிய நிலை ஏற்படுகிறது. இது அவர்களை மேலும் கடன் சுமையில் தள்ளி, பொருளாதார நிலையை மோசமாக்குகிறது.
புதிய விதிகளில், கடனை திருப்பிச் செலுத்திய ஏழு வேலை நாட்களுக்குள் நகையை ஒப்படைக்காவிட்டால், வங்கிகளுக்கு ஒரு நாளைக்கு 5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்ற நிபந்தனை, மக்களுக்கு மறைமுகமாக அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. இதனால், வங்கிகள் மிகவும் கவனமாக செயல்படுவதுடன், கடன் வழங்குவதில் கூடுதல் கட்டுப்பாடுகளை விதிக்கலாம். இது, நகைக்கடன் பெறுவதற்கான செயல்முறையை மேலும் சிக்கலாக்கி, ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு கடன் கிடைப்பதை குறைக்கலாம். குறிப்பாக, சிறு விவசாயிகள் மற்றும் சிறு வணிகர்கள், அவசர பணத் தேவைகளுக்கு நகைக்கடனை நம்பியிருக்கும் நிலையில், இந்த விதிகள் அவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கின்றன.
தனியார் நிதி நிறுவனங்களுக்கு சாதகமாகும்?
இந்த விதிகள் மோசடிகளைத் தடுக்கும் நோக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்டாலும், அவை சாமானிய மக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. தனியார் நிதி நிறுவனங்களுக்கு அதிக வட்டி விகிதங்களில் கடன் வழங்குவதற்கு இந்த விதிகள் வழிவகுக்கலாம் என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
ஏழை மற்றும் நடுத்தர மக்கள், வங்கிகளில் கடன் பெற முடியாதபோது, தனியார் நிறுவனங்களை நாடுவது அவர்களின் நிதி நிலையை மேலும் பலவீனப்படுத்தும். ரிசர்வ் வங்கி இந்த விதிகளை மறுபரிசீலனை செய்து, ஏழை மற்றும் நடுத்தர மக்களின் நலன்களை கருத்தில் கொண்டு, மக்களுக்கு உகந்த திருத்தங்களை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை பலரிடமிருந்து எழுந்துள்ளது.