Site icon Amazing Tamilnadu – Tamil News Updates

தங்கம்: முதலீட்டு அடிப்படையில் இப்போது வாங்கலாமா?

கடந்த மத்திய பட்ஜெட்டில் தங்கம் இறக்குமதி வரியானது 15%ல் இருந்து, 6% ஆக குறைக்கப்பட்டது. இது இந்திய சந்தையில் தங்கம் விலை குறைய காரணமாக அமைந்துள்ளது.

கடந்த வாரம் ஏற்ற இறக்கங்களை சந்தித்த தங்கத்தின் விலை இன்று (ஆக.16) சற்றே உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று (வெள்ளிக்கிழமை) 22 கேரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ஒரு கிராம் ரூ.6,565-க்கும், பவுனுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு பவுன் தங்கம் ரூ.52,520-க்கும் விற்பனையாகிறது.

தொடர்ந்து சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது பெரிய அளவில் குறையாவிட்டாலும், உச்சத்திலேயே காணப்படுகிறது. இது வரவிருக்கும் அமெரிக்காவின் பணவீக்க தரவும் மற்றும் சர்வதேச நாடுகளில் நிலவி வரும் புவிசார் அரசியல் பதற்றங்கள் எனப் பலவும் தங்கம் விலைக்கு ஆதரவாக அமையலாமோ என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தங்கம்இறக்குமதி வரியானது தங்கத்தில் முதலீடுகளை அதிகரிக்க வழிவகுக்கலாம். தங்க ஆபரண ஏற்றுமதியை அதிகரிக்கவும் உதவும். சர்வதேச சந்தையில் தேவையானது சற்று மந்த நிலையில் இருந்து வரும் நிலையில், இந்த விலை உயர்வு மேற்கொண்டு ஊக்கப்படுத்தலாம்.

இந்திய அரசின் வரி குறைப்பு நடவடிக்கை, பிசிகல் தங்கம் வாங்குபவர்களுக்கு ஆறுதலாக இருந்தாலும், கோல்டு இடிஎஃப் மற்றும் தங்க பத்திரங்களில் முதலீடு செய்தவர்களுக்கு பிரச்னைதான். வரி குறைப்பு அறிவிப்பானது வெளியான திலிருந்து, தங்கம் விலையானது குறைந்து வருகிறது. மேற்கொண்டு முதலீடுகளின் மதிப்பும் முதலீட்டாளர்களுக்கு குறைந்துள்ளது. ஆக இந்த இழப்பை சரிக்கட்ட இன்னும் சிறிது காலம் ஆகலாம். ஆக இனி வரும் மாதங்களில் கோல்ட் இடிஎஃப், தங்க பத்திரங்கள், பியூச்சர் சந்தைகளில் முதலீடுகள் சற்றுக் குறையலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

இறக்குமதி வரி தங்கம் விலையில் அழுத்தத்தை ஏற்படுத்தலாம் என்றாலும், இந்திய ரூபாய் மதிப்பு, சர்வதேச சந்தை, தங்கம் சப்ளை, தேவை, ஏற்றுமதி மற்றும் இறக்குமதி எனப் பலவும் தங்கம் விலையில் ஏற்ற இறக்கத்தை ஏற்படுத்தலாம்.

இந்த நிலையில், சந்தை நிபுணர்கள் அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கியானது வரவிருக்கும் கூட்டத்தில் 0.50% வட்டி விகிதம் குறைக்கலாம் என எதிர்பார்க்கின்றனர். குறைந்த வட்டி விகிதம் தங்கம் விலையை ஆதரிக்கலாம் எனக் கூறுகின்றனர். வட்டி குறையலாம் என்ற சூழலில், மேற்கு ஆசிய பகுதிகளில் நிலவி வரும் பதற்றமான சூழல், மேற்கொண்டு தங்கம் விலையை ஏற்றம் காண காரணமாக அமையலாம்.

இதனால், முதலீட்டு அடிப்படையில் தங்கம் வாங்க நினைப்போர்,தற்போதைய ஏற்ற இறக்க சூழ்நிலையைப் பயன்படுத்தி, விலை குறையும்போது வாங்கலாம் என்பதே முதலீட்டு ஆலோசகர்களின் கருத்தாக உள்ளது.

Exit mobile version