Amazing Tamilnadu – Tamil News Updates

தங்கம் விலையில் திடீர் சரிவு… தொடர்ந்து குறையுமா?

டந்த ஜூலை மாதம் வரை தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வந்த நிலையில், அதே மாதம் 22 ஆம் தேதியன்று மத்திய அரசு, தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை குறைத்தது. இதன் பலனாக தங்கத்தின் விலை அதிரடியாக குறையத் தொடங்கியது. சவரனுக்கு ரூ.2,200 வரை குறைந்தது. அதன் தொடர்ச்சியாக விலை குறைந்து கொண்டே வந்து ஒரு சவரன் ரூ.51,000 க்கும் கீழே சென்றது.

ஆனால், இந்த ஆறுதல் சில நாட்கள் மட்டுமே நீடித்த நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் இறுதியில் இருந்து மீண்டும் தங்கம் விலை உயர ஆரம்பித்தது. அதிலும் செப்டம்பர் மாதத்தில் தங்கம் விலை சரசரவென உயர்ந்த நிலையில், நடப்பு அக்டோபர் மாதம் மேலும் எகிறத் தொடங்கியது.

தொடர்ந்து தங்கத்தின் விலை அதிகரித்து வந்த நிலையில், கடந்த 4 ஆம் தேதி புதிய உச்சத்தை தொட்டு, ஒரு சவரன் ரூ.56,960-க்கு விற்பனையானது. இந்த நிலையில், கடந்த 7 ஆம் தேதியிலிருந்து இலேசாக குறையத் தொடங்கிய தங்கத்தின் விலை, இன்று அதிரடியாக குறைந்துள்ளது.

அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.560 குறைந்து ஒரு சவரன் ரூ.56,240-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.70 குறைந்து ரூ.7,030-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2 குறைந்து ஒரு கிராம் ரூ.100-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தங்கம் விலையில் சரிவு ஏன்?

அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதங்களைக் குறைக்கும் போது, ​​பத்திரங்கள் மற்றும் சேமிப்புக் கணக்குகளில் போடப்பட்டுள்ள பணத்துக்கான வட்டி விகிதம் குறையும். இதனால், முதலீட்டாளர்கள் தங்களது சேமிப்பை தங்கத்தின் மீது முதலீடு செய்யவே அதிகம் விரும்புவார்கள் என்பதால், வரும் காலங்களில் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதற்கு மாறாக தங்கத்தின் விலை குறைந்துள்ளதற்கு முக்கிய காரணம் என்ன என்பது தெரியவந்துள்ளது.


கடந்த ஆறு மாதங்களில் செப்டம்பர் மாதத்தில் அமெரிக்காவில் வேலையின்மை விகிதம் 4.1 சதவீதமாகக் குறைந்துள்ளது. இது அமெரிக்கப் பொருளாதாரம் நல்ல நிலையில் இருப்பதையும், இதனால் அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதங்களைக் குறைக்காது என்பதாலும் அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்ந்துள்ளது. இது மற்ற நாடுகளின் கரன்சிகள் மீதான மதிப்பில் சரிவை ஏற்படுத்தி உள்ளதால், அதன் தாக்கம் தங்கத்திலும் எதிரொலித்துள்ளது. இதனால், தங்கம் விற்பனை குறைந்துள்ளது.

மேலும் அமெரிக்காவில் தற்போது அதிபர் தேர்தல் பிரசாரத்தையொட்டி நிலவும் நிச்சயமற்ற அரசியல் சூழ்நிலை மற்றும் பொருளாதார சூழலும் சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலையில் தாக்கத்தை ஏற்படுத்தும் இன்னொரு காரணமாக சொல்லப்படுகிறது.

எனவே மத்திய வங்கி வட்டி விகிதங்களைக் குறைக்காத வரை தங்கத்தின் விலை அதிகரிக்க வாய்ப்பில்லை எனத் தெரிகிறது. ஆதலால், வரும் நாட்களில் முதலீட்டாளர்களின் கவனம் தங்கத்தின் மீது அல்லாமல், வேறு பக்கம் திரும்பினால் விலை மேலும் குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version