சென்னையில் நடைபெற்ற இரண்டு நாள் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கையும் தாண்டி முதலீடுகள் ஈர்க்கப்பட்டதால், மாநாடு மகத்தான வெற்றி அடைந்துள்ளது. இந்த வெற்றி கொடுத்த உற்சாகத்தினால், தமிழ்நாட்டிற்கு மேலும் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அடுத்த இலக்கை நோக்கி பயணிக்க திட்டமிட்டுள்ளார்.
தமிழகத்தை வருகிற 2030 ஆம் ஆண்டுக்குள் ஒரு ட்ரில்லியன் ( ஒரு லட்சம் கோடி) அமெரிக்க டாலர் பொருளாதார மாநிலமாக மாற்றுவதற்கான இலக்கை, முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் நிர்ணயித்துள்ளார். அதன் அடிப்படையில், தொழில்துறையில் பல்வேறு பிரிவுகளில் முதலீடுகளை ஈர்க்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, சென்னை, நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் கடந்த 7 மற்றும் 8 ஆகிய இரு தினங்களில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது.
இலக்கை தாண்டி கிடைத்த முதலீடு
இந்த மாநாட்டின் மூலம் ரூ.5.50 லட்சம் கோடி முதலீடுகளை ஈர்க்க வேண்டும் என இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. ஆனால், மாநாட்டின் முதல் நாளிலேயே நிர்ணயிக்கப்பட்ட 5.50 லட்சம் கோடி இலக்கை எட்டும் வகையில், பல்வேறு தொழில் நிறுவனங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இந்த நிலையில், மாநாடு இரண்டாம் நாள் நிறைவடைந்தபோது, மொத்தம் ரூ. 6.64 லட்சம் கோடிக்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டது. இதன் மூலம் நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் 26 லட்சத்து 90 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வெளிநாடு செல்லும் முதலமைச்சர்
இந்த மாநாட்டிற்கு கிடைத்த வெற்றியினால் உற்சாகமடைந்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அடுத்த இலக்கை நோக்கி பயணிக்க திட்டமிட்டுள்ளார். அதன் ஒரு பகுதியாகவே தமிழகத்துக்கு மேலும் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக, வருகிற 28 ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஸ்பெயின், ஆஸ்திரேலியா செல்ல இருக்கிறார். அதன் தொடர்ச்சியாக அமெரிக்காவும் செல்ல உள்ளார்.
இத்தகவலை, உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் நிறைவு விழாவுக்கு பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்த தமிழக தொழில்துறை அமைச்சர் பி.ஆர்.பி.ராஜா, “முதலமைச்சரின் இலக்கு என்பது பரவலாக்கப்பட்ட வளர்ச்சி, அனைவருக்கும் எல்லாம் என்பது தான். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில் தமிழகம் மீட்டெடுக்கப்பட்டு, கடந்த 2 ஆண்டுகளாக மகத்தான வளர்ச்சியை கண்டுள்ளது. கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் ஏற்றத்தாழ ஒரு லட்சம் கோடி முதலீடுகள் வந்துள்ளது.
படித்த இளைஞர்களுக்கும், கிராமப்புற பெண்களுக்கும் வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும் என்பதில் முதலமைச்சர் மிக தீவிரமாக செயல்பட்டு, அதுபோன்ற வேலை வாய்ப்புகளை உருவாக்குவதில் மிகுந்த கவனத்துடன் செயல்படுகிறார். இந்த மாநாட்டின் மூலமாக தமிழகத்தில் அனைத்து பகுதிகளும் வளர்ச்சி அடைய வேண்டும் என்பதே முதலமைச்சரின் கருத்து ஆகும். எதிர்வரும் வாரங்களில் புதிய ஒப்பந்தங்களும் வர உள்ளது ” என்றார்.
“தமிழ்நாட்டை ஒரு லட்சம் கோடி அமெரிக்க டாலர் பொருளாதார மாநிலமாக மாற்ற வேண்டும் என்ற இலக்கை எட்ட, தற்போதுள்ள நிலையில், அடுத்த ஏழு ஆண்டுகளில் தமிழ்நாட்டின் பொருளாதாரம் 18 சதவீதம் வளர்ச்சி அடைய வேண்டும். அப்படி அடைந்தால் ஒரு லட்சம் கோடி டாலர் பொருளாதர இலக்கை அடைந்து விடலாம்” என பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள். இந்த நிலையில், நடந்து முடிந்த உலக முதலீட்டாளர்கள் மாநாடும், முதலமைச்சர் அடுத்து மேற்கொள்ள இருக்கும் வெளிநாட்டு பயணமும் நிச்சயம் அந்த இலக்கை அடைய உதவும் என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.
முன்னதாக கடந்த 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் துபாய், சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுக்கும் பயணம் மேற்கொண்டு, தமிழகத்திற்கான முதலீடுகளை ஈர்த்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.