சென்னையில் நடைபெற்ற இரண்டு நாள் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் சிறப்பம்சமாக, நாட்டிலேயே அதிக அளவில் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் (SEZs) கொண்ட மாநிலமாக தமிழ்நாடு திகழ்வதாகவும் தெரியவந்துள்ளது.
சென்னையில் நேற்றும் இன்றும் நடைபெற்ற இரண்டு நாள் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில், ஏராளமான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன. எரிசக்தி துறையில் புதிய முதலீடுகளின் மூலம் 12,567 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று, மின்துறையில் ஒரு லட்சத்து 75,000 கோடி ரூபாய் முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளது. 20,000-க்கும் மேற்பட்டோருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ராம்ராஜ் நிறுவனம் தமிழ்நாட்டில் 1,000 கோடி ரூபாய் முதலீடு செய்யும் நிலையில், இதன் மூலம் 13,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் எல் அண்ட் டி நிறுவனம், தமிழ்நாட்டில் ரூ.3,500 கோடி முதலீட்டில் தொழில்நுட்ப பூங்கா அமைக்க ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இதன் மூலம் சுமார், 40,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று டாடா கெமிக்கல் நிறுவனம், ரூ. 1,000 கோடி முதலீட்டில் ராமநாதபுரத்தில் சிறப்பு ரசாயனங்கள் உற்பத்தி தொழிற்சாலை அமைக்க உள்ளது. இதன் மூலம் சுமார் 500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ராயல் என்ஃபீல்டு நிறுவனம், காஞ்சிபுரத்தில் பைக் உதிரி பாகங்கள் தயாரிக்கும் ஆலையை நிறுவ ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இதன் மூலம் சுமார் 2,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தின் இன்னொரு சிறப்பு SEZs
இதுபோன்று மேலும் பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ள நிலையில், மாநாட்டின் இன்னொரு சிறப்பம்சமாக நாட்டிலேயே அதிக அளவில் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் (Special Economic Zones -SEZs) கொண்ட மாநிலமாக தமிழ்நாடு திகழ்வதாகவும், அவற்றில் 54 சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் செயல்பாட்டில் உள்ளதாகவும் தெரியவந்துள்ளது. மேலும், இந்த மண்டலங்கள், மாநிலத்தின் ஏற்றுமதியில் மூன்றில் ஒரு பங்கைக் கொண்டுள்ளதாக MEPZ (Madras Export Processing Zone) மேம்பாட்டு ஆணையர் அலெக்ஸ் பால் மேனன் முதலீட்டாளர்கள் மாநாட்டில் தெரிவித்தார்.
‘பொருளாதார மாற்றத்தின் இயந்திரங்களாக சிறப்புப் பொருளாதார மண்டலங்கள்’ என்ற தலைப்பில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறப்பு அமர்வில் பேசுகையில், இந்த தகவலை அவர் தெரிவித்தார்.
தொழில் தொடங்க 11 நாளிலேயே அனுமதி
2002 ஆம் ஆண்டில் ‘சிறப்புப் பொருளாதார மண்டலங்கள்’ என்பது ஒரு கொள்கையாகத் தொடங்கப்பட்டு, 2005 ல் அது சட்டமாக மாறியதைக் குறிப்பிட்ட மேனன், , கடந்த 18 ஆண்டுகளாக இதில் தமிழ்நாடு நிலையான முன்னேற்றத்தைக் கண்டு வருவதாகவும் தெரிவித்தார். மேலும், MEPZ -ல் தொழில் தொடங்குவதற்கான அனுமதி, கடந்த ஓராண்டு காலத்தில் வெறும் 11 வேலை நாட்களுக்குள்ளாகவே வழங்கப்பட்டதாகவும், சிறப்புப் பொருளாதார மண்டலங்களை மிக கவனமாக உருவாக்கி செயல்படுத்தினால், அவற்றின் மூலம் சர்வதேச அளவில் மதிப்பு மிக்க முதலீடுகளை ஈர்க்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த SEZ அமர்வை நெறிப்படுத்திய J Matadee Free Trade Zone நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சுனில் ரல்லான், தமிழ்நாட்டில் ஸ்திரமான அரசியல் மற்றும் சமூக சூழல் நிலவுவதால், ஏற்றுமதியைக் கருத்தில் கொண்டு சர்வதேச நிறுவனங்கள், தமிழகத்தில் தங்கள் செயல்பாடுகளை அமைக்க விரும்புவதாகவும் கூறினார்.
முன்னாள் ஒன்றிய வர்த்தக அமைச்சக செயலர் அனுப் வாத்வான் பேசுகையில், “SEZ தளங்களில் அன்னிய நேரடி முதலீடுகள் மற்றும் முதலீடுகளை அதிகம் பெறும் நாடுகளில் தமிழ்நாடும் ஒன்று. தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் SEZ களின் மாதிரியைப் பின்பற்றுவதன் மூலம் தடைகளை நீக்கி, வணிகங்களை போட்டித்தன்மையுடன் மாற்றுவதில் கவனம் செலுத்தும் ஒரு தனி தளத்தை உருவாக்க முடியும்” என்று குறிப்பிட்டார்.