GIM 2024: தென் தமிழகத்துக்கும் முதலீட்டுத் திட்டங்கள்… தூத்துக்குடியில் கால்பதிக்கப் போகும் பெரு நிறுவனம்!
சென்னை, நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் 2024-ம் ஆண்டுக்கான ‘உலக முதலீட்டாளர்கள் மாநாடு’ தொடங்க இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், அதுகுறித்த ஆர்வம் மக்களிடையே அதிகரித்து வருகிறது.
தமிழகத்தை 2030 ஆம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதார மாநிலமாக மாற்றுவதற்கான இலக்கை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிர்ணயித்துள்ளார். அதன் அடிப்படையில், தொழில்துறையில் பல்வேறு பிரிவுகளில் முதலீடுகளை ஈர்க்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக சென்னை, நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் வரும் ஜனவரி 7, 8 ஆகிய தேதிகளில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற உள்ளது.
தமிழகத்தின் துடிப்பு மிகுந்த தொழிற்சூழலை வெளிக்காட்டும் வகையில், இந்த மாநாட்டை நடத்திட தமிழக அரசு திட்டமிட்டுள்ள நிலையில், இந்த மாநாட்டின் நோக்கம், அதன் சிறப்பம்சங்கள் என்னென்ன, சென்னையைத் தாண்டியும் தமிழகம் முழுவதும் பரவலான வளர்ச்சிக்கு இந்த மாநாடு எப்படி உதவப் போகிறது என்பது குறித்த தகவல்களை விரிவாக பார்க்கலாம்…
ஆக்கபூர்வமான 2024 மாநாடு
கடந்த அதிமுக ஆட்சியிலும் 2015 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் இதேபோன்ற முதலீட்டாளர்கள் மாநாடு சென்னையில் நடைபெற்றது. ஆனால், அவை வெற்று அறிவிப்புகளாகவே போனதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இத்தகைய நிலையில் தான் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, தமிழகத்தை 2030 ஆம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதார மாநிலமாக மாற்றுவதற்கான இலக்குடன் செயல்பட்டு வருகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இதன் ஒரு அம்சமாக இந்த ஆண்டு, அதாவது வருகிற 7, 8 ஆகிய தேதிகளில் சென்னையில் நடைபெற உள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை வெற்று அறிவிப்புகளாக இல்லாமல், உண்மையிலேயே ஆக்கபூர்வமாக பயனளிக்கும் வகையிலும், தமிழகம் முழுவதும் பரவலான வளர்ச்சியை ஏற்படுத்துகிற விதமாகவும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இன்னும் சொல்லப்போனால், 2015 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் அதிமுக ஆட்சியில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டுக்கும் தற்போது நடைபெற உள்ள மாநாட்டுக்கும் இதுதான் முக்கியமான வித்தியாசமாக இருக்கும் என்கிறார் தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி ராஜா. இது குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், “இந்த முறை முதலீட்டாளர்கள் மாநாட்டில் அறிவிக்கப்பட இருக்கும் ஒப்பந்தங்களின் பெரும் சதவீதத்தை உண்மையான முதலீடுகளாக மாற்ற விரும்புகிறோம். எனவே இந்த அறிவிப்புகள் வெறும் அறிவிப்புகளாக இருக்காது.
தென் மாவட்டங்களின் வளர்ச்சிக்கு முன்னுரிமை
இரண்டு அம்சங்களில் கவனம் செலுத்த இருக்கிறோம். ஒன்று, இந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் என்ன மாதிரியான வேலைகளை உருவாக்கும் என்பதையும், இன்னொன்று அவை தமிழ்நாட்டின் பொருளாதாரத்தில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதையும் பார்க்க விரும்புகிறோம். தமிழகம் முழுவதும் பரவலான வளர்ச்சியை எட்ட வேண்டும் என நமது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விரும்புகிறார். கிராமப்புற இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்க விரும்புகிறோம். 2030 ஆம் ஆண்டிற்குள் 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாறும் இலக்கை அரசு நிர்ணயித்துள்ளது, அதன் அடிப்படையில் நாங்கள் வேலை செய்வோம்” என உறுதிபட தெரிவித்தார்.
‘தென் மாவட்டங்களில் முதலீடுகளை கொண்டு வர வேண்டும் என்று ஒவ்வொரு அரசும் பேசினாலும், அதில் பெரிதாக எதுவும் நடக்கவில்லை’ என்ற குற்றச்சாட்டுகள் உள்ளன.
தூத்துக்குடியில் கால்பதிக்கும் பெரு நிறுவனம்
இந்த நிலையில், இப்போது நடக்க உள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாடு இந்த நிலையை போக்குமா? என்ற கேள்விக்குப் பதிலளித்த டி.ஆர்.பி. ராஜா, “இந்த மாநாட்டில் அறிவிக்கப்பட இருக்கும் சில முதலீடுகள் தென் தமிழகத்திற்கு செல்லும். ஆயிரக்கணக்கான உயர் தர வேலைகளை உருவாக்கும் ஒரு உற்பத்தி நிறுவனம் தூத்துக்குடிக்கு செல்ல உள்ளது. அது குறித்த ஒரு சிறப்பு அறிவிப்பு வெளியிடப்படும். மேலும், இது மிகவும் மதிப்புமிக்க திட்டம். தூத்துக்குடியில் முதலீடு செய்யும் இந்நிறுவனம் இந்தியா வருவது இதுவே முதல்முறை. அப்படியான நிலையில், அவர்கள் தங்களது முதலீட்டுக்கு முதல் தேர்வாக தமிழகத்தைத் தேர்வு செய்துள்ளனர்.
மேற்கு மாவட்டங்களிலும் வளர்ச்சி
முதலீட்டாளர்கள் மற்றும் மக்கள் இருவரும் சமூக உள்கட்டமைப்புக்கு நெருக்கமாக இருக்க விரும்புகிறார்கள். விளையாட்டு வசதிகள் உட்பட துடிப்பான இடங்களை இளைஞர்கள் விரும்புகிறார்கள். அதற்கான வேலைகளை செய்து வருகிறோம். நமது விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அனைத்து தொகுதிகளிலும் விளையாட்டு கட்டமைப்புகளை அறிமுகப்படுத்தி மதிப்பு சேர்த்துள்ளார். நிறுவனங்கள் சென்னைக்கு வெளியேயும் முதலீடு செய்கின்றன; உதாரணமாக, ஓசூர்-கிருஷ்ணகிரி பகுதியில் (மேற்கில்) மின்சார வாகன சுற்றுச்சூழல் அமைப்பு வளர்ந்து வருகிறது, மேலும் இங்கு வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படுகின்றன. டாடா எலக்ட்ரானிக்ஸ் பெரிய அளவில் வளர்ந்து வருகிறது. ஓலாவும் விரிவடைந்து வருகிறது. இந்த பகுதி வேகமான வளர்ச்சி விகிதங்களில் சிலவற்றைக் காணப் போகிறது” என மேலும் தெரிவித்தார்.
ஆக மொத்தத்தில், வரும் காலங்களில் சென்னையைத் தாண்டியும் பல மாவட்டங்களில் தொழில் நிறுவனங்கள் முதலீடு செய்வதற்கான வாய்ப்பு பிரகாசமாக ஏற்பட்டுள்ளது எனலாம்!