தமிழ்நாடு, தனித்துவமான பாரம்பரிய பொருட்களுக்காக புவிசார் குறியீடு (GI Tag) பெறுவதில் இந்தியாவில் முன்னணி மாநிலங்களில் ஒன்றாக திகழ்கிறது.
சமீபத்தில், கும்பகோணம் வெற்றிலை மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தின் தோவாளை மாணிக்கமாலை ஆகியவை புவிசார் குறியீடு பெற்றன. இந்நிலையில், தமிழகத்தில் மேலும் ஆறு பொருட்களுக்கு இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதனால், தமிழகத்தில் புவிசார் குறியீடு பெற்ற பொருட்களின் மொத்த எண்ணிக்கை 69 ஆக உயர்ந்துள்ளது. இந்திய அளவில் உத்தரப்பிரதேசம் 79 பொருட்களுடன் முதலிடத்திலும், தமிழ்நாடு 69 பொருட்களுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளது.
புதிய அங்கீகாரம் பெற்ற 6 பொருட்கள்
இந்த நிலையில் பண்ருட்டி பலாப்பழம், பண்ருட்டி முந்திரி, புளியங்குடி எலுமிச்சை, விருதுநகர் சம்பா வத்தல், செட்டிகுளம் சின்ன வெங்காயம் மற்றும் ராமநாதபுரம் சித்துறைகார் அரிசி ஆகிய பொருட்களுக்கும் புவிசார் குறியீடு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த பொருட்கள், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளின் தனித்துவமான மண், பருவநிலை மற்றும் பாரம்பரிய உற்பத்தி முறைகளை பிரதிபலிக்கின்றன. உதாரணமாக, பண்ருட்டி பலாப்பழம் அதன் இனிப்பு மற்றும் சதைப்பற்றால் புகழ்பெற்றது. அதேபோல் புளியங்குடி எலுமிச்சை அதன் தனித்துவமான புளிப்பு சுவையால் அறியப்படுகிறது.
விருதுநகர் சம்பா வத்தல் மற்றும் செட்டிகுளம் சின்ன வெங்காயம் ஆகியவை உணவு வகைகளில் தமிழகத்தின் சுவையை உலகிற்கு பறைசாற்றுபவை. ராமநாதபுரம் சித்துறைகார் அரிசி, அதன் தரம் மற்றும் பாரம்பரிய மதிப்பால் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

புவிசார் குறியீட்டின் முக்கியத்துவம்
புவிசார் குறியீடு என்பது ஒரு பொருளின் புவியியல் தோற்றத்தை அடையாளப்படுத்தி, அதன் தனித்தன்மையை சட்டப்பூர்வமாக பாதுகாக்கிறது. இது, போலி பொருட்களை தடுப்பதோடு, உற்பத்தியாளர்களுக்கு பொருளாதார மேம்பாட்டையும், நுகர்வோருக்கு தரமான பொருட்களையும் உறுதி செய்கிறது. தமிழகத்தில் இதுவரை மதுரை மல்லி, காஞ்சிபுரம் பட்டு, திண்டுக்கல் பூட்டு, ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா போன்ற 63 பொருட்கள் இந்த அங்கீகாரத்தை பெற்றிருந்த நிலையில், தற்போது ஆறு பொருட்கள் சேர்ந்து 69 ஆக உயர்ந்துள்ளது. இது, தமிழகத்தின் பாரம்பரியம் மற்றும் கலாச்சார செழுமையை உலக அரங்கில் பறைசாற்றும் விதமாக அமைந்துள்ளது.
விவசாயிகளுக்கு உதவி
தமிழக அரசு, வேளாண்மை மற்றும் கைவினைத் துறைகளை ஊக்குவிக்கும் வகையில், புவிசார் குறியீடு பெறுவதற்கான முயற்சிகளை தீவிரப்படுத்தியுள்ளது. 2024-25 வேளாண் பட்ஜெட்டில், 10 பொருட்களுக்கு இந்த அங்கீகாரத்தை பெறுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன் தொடர்ச்சியாகவே இந்த அங்கீகாரம் கிடைத்துள்ளது. இந்தியாவில் முதல் புவிசார் குறியீடு டார்ஜிலிங் தேநீருக்கு 2004-ல் வழங்கப்பட்டது. அதன்பின், தமிழ்நாடு தொடர்ந்து தனது பங்களிப்பை அதிகரித்து, உத்தரப்பிரதேசத்திற்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. இது, கிராமப்புற பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கும், உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கு சர்வதேச அங்கீகாரம் பெறுவதற்கும் உதவுகிறது.
மேலும், தமிழகத்தின் பாரம்பரிய பொருட்களுக்கு சட்டப்பூர்வ பாதுகாப்பை வழங்குகிறது. அத்துடன், அவற்றின் சந்தை மதிப்பை உயர்த்துவதோடு, பாரம்பரியத்தையும் பொருளாதாரத்தையும் ஒருங்கிணைத்து விவசாயிகளின் முன்னேற்றுத்துக்கும் உதவுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.