‘கேங்கர்ஸ்’: கோடை விடுமுறையை குதூகலமாக்க வரும் சுந்தர் சி – வடிவேலு கூட்டணி!

சுந்தர்.சி இயக்கத்தில் வடிவேலு நடித்த நகைச்சுவை பாத்திரங்கள் யாவும் இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றவை. அதிலும், இந்த இருவர் கூட்டணியில் வெளிவந்த ‘தலைநகரம்’ , ‘கிரி,’ ‘லண்டன்’ மற்றும் ‘வின்னர்’ படங்களில் இடம்பெற்ற காமெடி காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் ஏக வரவேற்பை பெற்றவை.
இப்போதும் காமெடி சேனல்களில் இந்தக் கூட்டணியின் காமெடி தான் பிரதான இடத்தை தினமும் பிடிக்கும். 15 ஆண்டுகளாக இந்தக் கூட்டணி இணைந்து படம் பண்ணாமல் இருந்த நிலையில், தற்போது, ‘கேங்கர்ஸ்’ என்ற படத்தின் மூலம் இணைந்துள்ளது.
இதில் சுந்தர்.சி நாயகனாக நடித்திருந்தாலும், கைப்புள்ள, வீரபாகு கதாபாத்திரங்கள் போன்று ‘சிங்காரம்’ என்ற கேரக்டரில் ‘கேங்கர்ஸ்’ படத்தில் வடிவேலு நடித்துள்ளார். மேலும் கத்ரீன் தெரசா, முனீஸ்காந்த், பக்ஸ், மைம் கோபி, ஹரிஷ் பேரடி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், கடந்த செப்டம்பர் மாதம் வெளியான நிலையில், தற்போது படப்பிடிப்புகள் அனைத்தும் முடிந்து ரிலீஸுக்குத் தயாராக உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
தற்போது பிளஸ் 2 , பிளஸ் 1 தேர்வுகள் தொடங்கி உள்ள நிலையில், அடுத்ததாக 10 ஆம் வகுப்புத் தேர்வுகளும் தொடங்கி நடைபெற உள்ளன. அதனைத் தொடர்ந்து கோடை விடுமுறை தொடங்கிவிடும் என்பதால், தியேட்டர்களுக்கு வரும் ரசிகர்களின் எண்ணிக்கை வழக்கமான நாட்களை விட அதிகமாக இருக்கும்.

எனவே, இதனை கருத்தில்கொண்டு வருகிற ஏப்ரல் மாதம் 24 ஆம் தேதி ‘கேங்கர்ஸ்’ திரைப்படத்தை வெளியிட படக்குழு தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
‘கேங்கர்ஸ்’ படத்தின் தொழில்நுட்பக் குழுவில் இசையமைப்பாளர் சி. சத்யா, ஒளிப்பதிவாளர் இ. கிருஷ்ணசாமி, எடிட்டர் பிரவீன் ஆண்டனி ஆகியோர் உள்ளனர். குஷ்பு மற்றும் சுந்தர்.சி ஆகியோர் தங்கள் அவ்னி சினிமாக்ஸ் பேனரின் கீழ் படத்தைத் தயாரித்துள்ளனர். விரைவிலேயே படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.