உலகின் மிகப்பெரிய மின்னணு பொருட்கள் உற்பத்தி நிறுவனமான ஃபாக்ஸ்கான் நிறுவனம், சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் மிகப் பெரிய தொழிற்சாலை மற்றும் உற்பத்தி தளத்தை அமைத்துள்ளது. இங்கு உற்பத்தி செய்யப்படும் ஐபோன், லேப்டாப் போன்ற மின்னணு பொருட்கள், உலகின் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
2601 கோடி ரூபாய் முதலீட்டில் செயல்பட்டு வரும் இந்த தொழிற்சாலை மூலம் 40,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த நிலையில், ஃபாக்ஸ்கான் நிறுவனம் தனது உற்பத்தி ஆலையை விரிவாக்கம் செய்ய உள்ளது. 3.55 லட்சம் சதுர அடியாக உள்ள கட்டுமான பகுதியை 4.79 லட்சம் சதுர அடியாக விரிவாக்கம் செய்ய உள்ளது . அதன்படி அடுத்த 2 ஆண்டுகளில் ஸ்ரீபெரும்புதூர் தொழிற்சாலையின் உற்பத்தி திறனை இரட்டிப்பாக்க ஃபாக்ஸ்கான் நடவடிக்கை எடுத்து வருகிறது. ஏற்கனவே தயாரிக்கப்பட்டு ஏற்றுமதி செய்யப்பட்டு வரும் ஐ-போன்களுடன், ஐ-பேடு உள்ளிட்ட ஆப்பிள் நிறுவனத்தின் இதர தயாரிப்புகளையும் தமிழ்நாட்டிலேயே உற்பத்தி செய்யும் வகையில் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. தமிழ்நாடு அரசுடன் ஏற்கனவே இதுகுறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளதாக ஃபாக்ஸ்கான் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
20,000 பேருக்கு வேலைவாய்ப்பு
இந்த விரிவாக்கத்திற்காக, தைவான் நாட்டின் ஃபாக்ஸ்கான் நிறுவனம் ரூ.1,792 கோடி முதலீடு செய்ய உள்ளது. மேலும், இதன் மூலம் 1.24 லட்சம் சதுர அடி பரப்பளவு கொண்ட உற்பத்தி தளத்தை உருவாக்க உள்ளது. இந்த விரிவாக்கம் மூலம் சுமார் 20,000 புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட உள்ளதால், தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பும், வருமானமும் அதிகரிக்கும். ஏற்கனவே ஃபாக்ஸ்கான் சென்னை மற்றும் மாநிலத்தில் பல பகுதிகளில் ஊழியர்களை பணியில் சேர்க்கும் நடவடிக்கையை தொடங்கியுள்ளது.
மேலும், ஃபாக்ஸ்கான் ஆட்சேர்ப்பு பணியில் ஈடுபட்டுள்ள ஒப்பந்த நிறுவனங்களுக்கு பாலினம், வயது வரம்பு, திருமணமானவர்களுக்கு வேலையில்லை என்பன போன்ற கட்டுப்பாடுகளை விதிக்கக் கூடாது எனத் தெரிவித்துள்ளது. அதன் அடிப்படையில் ஃபாக்ஸ்கான் நிர்வாகம், தற்போது 1.24 லட்சம் சதுர அடி பரப்பளவு கொண்ட உற்பத்தி தளம் விரிவாக்கத்திற்கான ஒப்புதல்களுக்கு தமிழ்நாடு அரசிடம் சுற்றுசூழல் பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்து விண்ணப்பித்துள்ளது. இந்த விரிவாக்க பணிகள் முடிந்தால், சென்னை ஃபாக்ஸ்கான் தொழிற்சாலையில் சுமார் 60,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
உள்கட்டமைப்பு வசதிகள், துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்கள் என லாஜிஸ்டிக்ஸ் மற்றும் சப்ளை செயின் செயல்பாடுகளில் சென்னை சிறந்து விளங்குகிறது. இவ்வாறான காரணத்தால் பாக்ஸ்கான் போன்ற நிறூவனங்கல் சென்னையில் முதலீடுகளை தொடர்ந்து செய்து வருவதாக தமிழக அரசின் தொழில்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.