ஈரோடு (கி) இடைத்தேர்தல்: நாம் தமிழர் கட்சியின் எதிர்பார்ப்பும் திமுகவின் திட்டமும்!

ரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் வருகிற பிப்ரவரி மாதம் 5 ஆம் தேதி நடைபெற உள்ளது. இத்தேர்தலில், நாம் தமிழர் கட்சியைத் தவிர்த்து ஏனைய எதிர்க்கட்சிகள் போட்டியிடாமல் விலகி உள்ளதால், திமுக தரப்பில் உற்சாகம் கரைபுரண்டோடுகிறது. அதே சமயம் சீமானின் நாம் தமிழர் கட்சியின் எதிர்பார்ப்பும் வியூகமும் வேறாக உள்ளது.

தவெக-வும் போட்டியில்லை

முக்கிய எதிர்க்கட்சியான அதிமுக, பாஜக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள், “தேர்தலில் திமுக அதிகார துஷ்பிரயோகம் செய்யும், நியாயமாக தேர்தல் நடக்காது” எனக் கூறி தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என ஏற்கெனவே அறிவித்துவிட்டன. இந்த நிலையில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக்கழகமும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என இன்று அறிவித்துள்ளது. இது தொடர்பாக த.வெ.க பொதுச்செயலாளர் ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவும் இல்லை. 2026 சட்டமன்றப் பொதுத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவதே த.வெ.கவின் இலக்காகும்” என தெர்வித்துள்ளார்.

முடிந்தது வேட்புமனு தாக்கல்

இதனிடையே இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள் என்பதால், திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமாரும் அவரை எதிர்த்து களம் இறங்கும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் சீதாலட்சுமியும் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தனர். வேறு சில சுயேட்சை வேட்பாளர்களும் மனு தாக்கல் செய்தனர்.

நாம் தமிழர் கட்சியின் எதிர்பார்ப்பு

பிரசாரத்தில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி…

இந்த தேர்தலில் அதிமுக உட்பட முக்கிய எதிர்க்கட்சிகள் தேர்தலை புறக்கணித்து இருப்பதால் அக்கட்சிகளின் வாக்குகள், அதாவது திமுகவுக்கு எதிரான வாக்குகள் தங்களுக்கு கிடைக்கும் என நாம் தமிழர் கட்சி எதிர்பார்க்கிறது. கடந்த பல தேர்தல்களில் நாம் தமிழர் கட்சி பல முனை போட்டி காரணமாக 3 அல்லது 4 அல்லது 5 ஆவது இடங்களையே பிடித்து வந்தது. ஆனால், இந்த முறை இருமுனை போட்டி என்பதால் வெற்றி பெற முடியாவிட்டாலும் எப்படியும் இரண்டாவது இடம் கிடைத்துவிடும். ஆனால், ‘அந்த இரண்டாம் இடத்துக்கு கிடைக்கும் வாக்குகள் மிக அதிகமாக இருக்க வேண்டும். திமுக வேட்பாளரின் வெற்றி வாக்கு வித்தியாசம் மிகக் குறைவான அளவே இருக்க வேண்டும்’ எனத் திட்டமிட்டு, எதிர்க்கட்சிகளின் வாக்குகளை வளைக்க வேண்டும் எனத் தீவிர பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகிறது.

பெரியார் குறித்த பேச்சால் சிக்கல்

ஆனால், நாம் தமிழர் கட்சி எதிர்பார்த்தபடி எதிர்க்கட்சிகளின் வாக்குகள், குறிப்பாக அதிமுக-வினரின் வாக்குகள் அக்கட்சிக்கு கிடைக்குமா என்பது கேள்விக்குறி தான் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

இது குறித்துப் பேசும் அவர்கள், ” தேர்தல் நடைபெறும் மண் ஈரோடு. அந்த மண்ணைச் சேர்ந்த தந்தை பெரியார் குறித்து சீமான் அண்மையில் பேசிய சர்ச்சைக்குரிய கருத்துக்கு அதிமுக உட்பட பல்வேறு எதிர்க்கட்சிகளும் அதிருப்தி தெரிவித்திருந்தன. அதிமுக-வினரும் திராவிட பாரம்பரிய கட்சியைச் சேர்ந்தவர்கள் என்பதால், அவர்கள் சீமான் கட்சிக்கு ஆதரவளிப்பார்களா என்பது கேள்விக்குறிதான். மேலும், சீமான் கட்சி அதிக வாக்குகள் பெற்று கவனம் ஈர்ப்பதையும் அவர்கள் விரும்பமாட்டார்கள்.

அத்துடன், நாம் தமிழர் கட்சி வேட்பாளரை ஆதரிப்பது என்ற முடிவை அதிமுக எடுத்தால், அது அக்கட்சியின் இமேஜை பாதிக்கச் செய்துவிடும். அதேபோன்று தான் தேமுதிக, தவெக போன்ற கட்சிகளும் இன்னொரு கட்சியை வளர்த்துவிட விரும்பாது.

இது தவிர, பெரியார் மீது அபிமானம் கொண்ட பொதுவானவர்களின் வாக்குகளும் நாம் தமிழர் கட்சிக்கு கிடைக்க வாய்ப்பு குறைவே. மேலும், இதற்கு முன்பு அருந்ததியர் சமூகத்தினருக்கு எதிராக சர்ச்சைக்குரிய கருத்துக்களை சீமான் பேசி உள்ளார். இந்த நிலையில், ஈரோடு பகுதியில் அருந்ததியர் மக்கள் கணிசமாக இருக்கும் நிலையில், அவர்கள் வாக்குகளும் கிடைக்காது.

பாஜக வாக்குகள் கிடைக்க வாய்ப்பு

அதே சமயம், அதிமுக, திமுக ஆகிய இரண்டு கட்சிகளையும் பிடிக்காத வாக்காளர்களில் ஒரு பகுதியினர் நாம் தமிழருக்கு வாக்களிக்கலாம். பாஜக-வைப் பொறுத்தவரை அக்கட்சிக்கு இங்கு பெரிய அளவில் வாக்குகள் இல்லை. என்றாலும் சீமானின் திமுக மற்றும் தந்தை பெரியாருக்கு எதிரான விமர்சனங்கள், பாஜக-வுக்கு ஆதரவான மனநிலை கொண்டவர்களின் கணிசமான வாக்குகளை நாம் தமிழர் கட்சிக்குப் பெற்றுத்தரும். இத்தகைய சூழ்நிலையில், அதிமுக உள்ளிட்ட முக்கிய எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த உள்ளூர் நிர்வாகிகளைச் சந்தித்து இணக்கமாக பேசுவதன் மூலம், அவர்களின் வாக்குகளைப் பெற நாம் தமிழர் கட்சி முயலக்கூடும்.

திமுக-வின் திட்டம்

வாக்கு சேகரிப்பில் திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார்…

இத்தகைய சூழ்நிலையில், திமுக-வுக்கான வெற்றி வாய்ப்பு உறுதியாக உள்ளது. அதே சமயம் சீமானின் சமீபத்திய தந்தை பெரியார் குறித்த கருத்து திமுக தலைமையை மிகவும் ஆத்திரப்பட வைத்துள்ளது. எனவே, நாம் தமிழர் கட்சி வேட்பாளருக்கு டெபாசிட் கூட கிடைக்கக்கூடாது என்ற எண்ணத்தில், தீவிரமாக களப்பணி ஆற்றி வருகிறது திமுக. கடந்த முறை கூட்டணி கட்சியான காங்கிரஸ் வேட்பாளருக்கே ‘தீ’யாய் வேலைபார்த்து வெற்றிபெறச் செய்தவர்கள், இந்த முறை சொந்த கட்சி வேட்பாளரே களம் இறங்கி இருப்பதால், இன்னும் கூடுதல் உத்வேகத்துடன் வாக்கு சேகரித்து வருகின்றனர்.

தேர்தலுக்கு இன்னும் 15 தினங்களுக்கு மேல் இருப்பதால், வரும் நாட்களில் பிரசாரம் மேலும் வேகமெடுக்கும் என எதிர்பார்க்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Why manchester united have entered the race to sign matheus cunha. Unveiling the hottest summer collection : elevate your style with trendsetting fashion finds !. Multisite pharmacist position at phoenix medical supplies pharmaguidelines.