ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: அதிமுக போட்டியிடுமா?

ரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ-வாக இருந்த காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் அண்மையில் காலமானதைத் தொடர்ந்து, வருகிற பிப்ரவரி 5 ஆம் தேதியன்று அத்தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இந்த முறையும் இத்தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பு தங்களுக்கே தரப்பட வேண்டும் என தமிழக காங்கிரஸ் எதிர்பாக்கிறது. ஆனால், உள்ளூர் திமுக-வினரோ இந்த முறை தங்கள் கட்சியே போட்டியிட வேண்டும் என கட்சி மேலிடத்தை வலியுறுத்திய நிலையில், அங்கு திமுக தரப்பில் தேர்தல் வேலைகள் தீவிரமாக தொடங்கப்பட்டுவிட்டது. சீமானின் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடும் என அறிவித்துவிட்டது. பாஜக தரப்பில் போட்டியிடுவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

அதிமுக-வின் நிலைப்பாடு என்ன?

இந்த நிலையில், இந்த தேர்தலில் அதிமுக-வின் நிலைப்பாடு என்ன என்பது குறித்த கேள்வி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது. ஏனெனில் 2023 ஆம் ஆண்டு இத்தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் தென்னரசு 25.75 சதவீத வாக்குகளே பெற முடிந்தது.அதுவே 2021 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக கூட்டணி 38 சதவீத வாக்குகளை பெற்றிருந்தது. அப்படிப்பட்ட சூழலில் அதிமுக மீண்டும் போட்டியிட்டால் அதே வாக்கு சதவீதம் கிடைக்குமா என்பது குறித்து அதிமுக-வினரிடையே சந்தேகம் நிலவுகிறது.

இன்னொருபுறம், கடந்த ஆண்டு விக்கிரவாண்டி இடைத்தேர்தல் நடந்த போது, ” ஆளும் திமுக பணத்தை அள்ளி வீசி வாக்காளர்களை திசை திருப்பும்; தேர்தல் நியாயமாக நடக்காது” எனக் கூறி தேர்தலை அதிமுக புறக்கணித்தது. அதே சமயம், விக்கிரவாண்டி தொகுதியில் வன்னியர்கள் அதிகம் என்பதால் பாமக-வை மறைமுகமாக ஆதரிக்கும் வகையில் புறக்கணிப்பு முடிவை அதிமுக மேற்கொண்டதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக விமர்சனங்கள் எழுந்தன.

முடிவு எடப்பாடி கையில்…

இந்த நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து முடிவெடுப்பதற்காக வருகிற 11 ஆம் தேதி அன்று மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனை கூட்டத்துக்கு எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்துள்ளார். அதே சமயம், “ஈரோடு கிழக்கில் மீண்டும் தோல்வியை தழுவினால் அது கொங்கு மண்டலத்தில் அதிமுக-வுக்கு இருக்கும் இமேஜை பாதிக்கும். எனவே, பெரும்பாலான அதிமுக தலைவர்கள் இந்த இடைத்தேர்தலை புறக்கணிக்க வேண்டும்” என்று வலியுறுத்தி வருவதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்த தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையம் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்ட 6 பேரிடம் ஆவணங்களை பெற்று ஆய்வு செய்து வருகிறது. வருகிற 13 ஆம் தேதியன்று இரட்டை இலை சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையம் முடிவை வெளியிட இருக்கிறது.

எனவே மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் தெரிவிக்கப்படும் கருத்துகள் மற்று இரட்டை இலைச் சின்னம் தொடர்பான தேர்தல் ஆணையம் முடிவு ஆகியவற்றின் அடிப்படையில் எடப்பாடி பழனிசாமி முடிவெடுப்பார் என அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Bahas 2 agenda penting, pjs wali kota batam hadiri rapat paripurna dprd kota batam. Click here for more sports news. The nation digest.