அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் சமீபத்திய பேட்டிகள், 2026 தேர்தலில் மீண்டும் பாஜக-வுடன் கைகோர்ப்பதற்கான சமிக்ஞைகளை வெளிப்படுத்தி வந்தன.
இந்த நிலையில், நேற்று அவர் திடீரென டெல்லி சென்றது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. டெல்லியில் புதிதாகக் கட்டப்பட்ட அதிமுக கட்சி அலுவலகத் திறப்பு விழாவில் பங்கேற்கவே அவர் டெல்லி சென்றதாக கூறப்பட்டாலும், எதிர்பார்த்தபடியே அவர் அமித் ஷாவை சந்தித்தார். இந்த சந்திப்பைத் தொடர்ந்து அமித் ஷா போட்ட ட்வீட், அதிமுக – பாஜக கூட்டணியை உறுதிப்படுத்துவதாக இருந்தது.
எடப்பாடியின் டெல்லி விசிட்டில் நடந்தது என்ன, அமித் ஷா உடனான சந்திப்பில் என்ன பேசப்பட்டது, மீண்டும் பாஜக கூட்டணியை நோக்கி எடப்பாடியை தள்ள வைத்தது எது உள்ளிட்டவை குறித்த பின்னணி தகவல்கள் இங்கே…
கூட்டணிக்கு எடப்பாடி போட்ட நிபந்தனை
எடப்பாடி பழனிசாமி, நேற்று மாலை 8.15 மணியளவில் அமித் ஷாவின் இல்லத்தில் அவரை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது அதிமுக மூத்த தலைவர்கள் எஸ்.பி. வேலுமணி, கே.பி. முனுசாமி ஆகியோர் உடனிருந்த நிலையில், எடப்பாடி மட்டும் 15 நிமிடங்கள் தனியாக அமித் ஷாவுடன் பேசியதாகவும், அப்போது அதிமுக – பாஜக கூட்டணியை புதுப்பிப்பதற்கான நிபந்தனைகள் முக்கிய விவாதப் பொருளாக இருந்ததாகவும் அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சந்திப்புக்கு முன்பே, இதன் நோக்கம் குறித்து ஊகங்கள் பரவின. அதன்படியே அதிமுக – பாஜக கூட்டணியை மீண்டும் உருவாக்குவதற்கு எடப்பாடி சில குறிப்பிட்ட நிபந்தனைகளை அமித் ஷாவிடம் முன்வைத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. “தமிழகத்தில் கூட்டணிக்கு அதிமுக தலைமையேற்கும். பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் முக்கியத்துவம் குறைக்கப்பட வேண்டும்” என்று எடப்பாடி வலியுறுத்தியதாக அவ்வட்டாரங்கள் மேலும் கூறுகின்றன.

அத்துடன், ‘டி.டி.வி. தினகரன், சசிகலா, ஓ. பன்னீர்செல்வம் ஆகியோரைப் பற்றி எங்களுக்கு கவலை இல்லை,’ என்று எடப்பாடி தெளிவுபடுத்தியதாகவும் தெரிகிறது. இது, கட்சியின் உட்பூசல்களை புறந்தள்ளி, தேர்தல் களத்தில் பாஜகவுடன் இணைவதற்கு எடப்பாடி தயாராகிவிட்டதையே காட்டுவதாக உள்ளது. இருப்பினும் அதிமுக தரப்பில் இன்னும் இது குறித்து அதிகாரபூர்வமாக எதுவும் அறிவிக்கப்படவில்லை.
பாஜகவின் நிலைப்பாடு
டெல்லி பாஜக வட்டாரமோ, “2024 தோல்வியால் அதிமுக தனித்து போட்டியிடும் தைரியத்தை இழந்துள்ளது. தமிழகத்தில் திமுகவை எதிர்க்க, பாஜகவிற்கு ஒரு பெரிய மாநில கட்சியின் ஆதரவு தேவை. எடப்பாடியை மீண்டும் கூட்டணிக்கு இழுக்க, அமித் ஷா தனிப்பட்ட முயற்சி எடுத்தார்” என்று தெரிவித்தது. சந்திப்பிற்கு பிறகு அமித் ஷா தனது எக்ஸ் தள பதிவில், “2026-ல் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அமையும். மது வெள்ளமும், ஊழல் புயலும் முடிவுக்கு வரும்,” என்று குறிப்பிட்டார். இது, கூட்டணி உறுதியாகி விட்டதாகவே பலரால் பார்க்கப்படுகிறது.
எடப்பாடி கூட்டணிக்கு தள்ளப்பட்டது ஏன்?
கடந்த சில மாதங்களாக, எடப்பாடியின் பேட்டிகள் பாஜகவுடனான கூட்டணி சாத்தியத்தை மறைமுகமாக சுட்டிக்காட்டி வந்தன. 2023 செப்டம்பரில் பாஜகவுடனான கூட்டணியை அதிமுக முறித்தபோது, “இனி பாஜகவுடன் கூட்டணி இல்லை” என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டமாக அறிவித்தார். ஆனால், 2024 நாடாளுமன்றத் தேர்தல் தோல்வி, உட்கட்சி மோதல்கள், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் உயர்த்திய போர்க்கொடி, டெல்லி பாஜக தலைவர்களுடன் முன்னாள் அமைச்சர் வேலுமணி காட்டிய நெருக்கம், தேர்தல்களில் திமுகவின் தொடர் வெற்றி ஆகியவை எடப்பாடியை மீண்டும் பாஜகவை நோக்கி திருப்பியதாக அதிமுக வட்டாரங்கள் கூறுகின்றன. “தனித்து நின்றால் மீண்டும் தோல்வி தான். பாஜகவுடன் இணைந்தால் மத்திய ஆதரவும், நிதியும் கிடைக்கும்,” என்று அதிமுக மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்தார்.
தமிழக அரசியலில் என்ன தாக்கம் ஏற்படும்?
இந்த நிலையில், எடப்பாடியின் இந்த நகர்வு, அதிமுகவின் ஒரு பிரிவினரிடையே எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது. “பாஜகவுடன் கூட்டணி என்றால், தொண்டர்கள் ஏற்க மாட்டார்கள்,” என்று மேற்கு மண்டல நிர்வாகி ஒருவர் கவலை தெரிவித்தார்.
அதிமுக – பாஜக கூட்டணி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுவிட்டால், அது திமுகவிற்கு பெரும் சவாலாக அமையலாம். அதிமுகவிற்கு புத்துயிர்ப்பாகவும் அமையும்.“இரு கட்சிகளும் இணைந்தால், 40-45% வாக்கு வங்கியை ஒருங்கிணைக்க முடியும்,” என்று அதிமுக சீனியர்கள் நம்பிக்கை தெரிவிக்கிறார்கள். ஆனால், அண்ணாமலையின் ஆக்ரோஷமான பாணி, அதிமுக தொண்டர்களிடையே எதிர்ப்பை ஏற்படுத்தலாம். மேலும், தவெக-வின் எழுச்சி, அதிமுக – பாஜக உடன் கூட்டணி வைக்க சிறு கட்சிகளின் தயங்குவது போன்றவை அதிமுக – பாஜக கூட்டணிக்கு சவால்களாக உள்ளன.
மேலும், இது தொண்டர்களை ஒருங்கிணைக்குமா அல்லது பிளவை ஏற்படுத்துமா என்பது காலத்தின் கையிலேயே உள்ளது.