Amazing Tamilnadu – Tamil News Updates

Eat Right Campus: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை உணவுக்கு தரச் சான்றிதழ்!

ந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரநிலை ஆணையம் (Food Safety and Standard Authorities of India – FSSAI) ‘சரியான சாப்பாடு – இந்தியா’ (Eat Right India) எனும் அமைப்பினை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த அமைப்பு ‘சரியான சாப்பாடு, சிறந்த வாழ்க்கை’ என்பதை அடிப்படை நோக்கமாகக் கொண்டிருக்கிறது.

“பாதுகாப்பாக சாப்பிடுங்கள், உடல் நலத்திற்காகச் சாப்பிடுங்கள், நிலையான உணவைச் சாப்பிடுங்கள்” எனும் மூன்று முதன்மைக் கருப்பொருட்களாகக் கொண்டு, உணவு வணிகர்கள் மற்றும் நுகர்வோர்களிடையே, திறன் மேம்பாடு, கூட்டு மற்றும் அதிகாரமளிக்கும் அணுகுமுறைகள் போன்றவைகள் கலந்த இந்தியாவின் உணவுப் பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்துச் சூழலை ஒழுங்குபடுத்துவதை இந்த அமைப்பு நோக்கமாகக் கொண்டிருக்கிறது.

இதன் செயல்பாடுகளில் ஒன்றாக, பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், பணியிடங்கள், மருத்துவமனைகள், சிறைச்சாலைகள், தேயிலைத் தோட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு வளாகங்களில் இருக்கும் உணவகங்களில் தயாரித்து வழங்கப்படும் உணவு பாதுகாப்பானது மற்றும் உடல் நலத்திற்கு ஏற்றது என்பதை உறுதி செய்திடும் வகையில் Eat Right Campus ( ‘சாப்பிடச் சரியான வளாகம்’ ) எனும் தரச்சான்றிதழ்களை வழங்கி வருகிறது.

அந்த வகையில், சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு தினமும் சுமார் 12,000 வெளிநோயாளிகள் வந்து செல்கின்றனர். உள்நோயாளிகளுக்காக ஏறக்குறைய 3,500 படுக்கைகள் உள்ளன. இவர்களுக்கு சுகாதாரமான, தரமான மற்றும் நோயாளிகளுக்கு ஏற்ற உணவை மருத்துவமனை நிர்வாகம் வழங்கி வருகிறது.

குறிப்பாக, குழந்தைகளுக்கான உணவு, பெரியவர்களுக்கான உணவு, தொற்றா நோய் உணவு, உப்பில்லா அதிக புரத உணவு, அதிக புரத உணவு, கதிர் மற்றும் கீமோ உணவு, உணவுக் குழாய் உணவு, ரொட்டி – பால் உணவு, சிறுநீரக உணவு, கடுமையான கட்டுப்பாடு உணவு என 10 வகையான உணவு முறையில் நோயாளிகளுக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது.

இந்த உணவுகள் மற்றும் உணவு முறைகளை ஆய்வு செய்த உணவு பாதுகாப்பு மற்றும் தரநிலை ஆணைய அதிகாரிகள், தமிழகத்தில் முதன்முறையாக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு Eat Right Campus சான்றிதழை வழங்கி உள்ளது.

இந்த சான்றிதழின் செல்லுபடி காலம் 2026 ஆம் ஆண்டு வரை ஆகும். என்றபோதிலும், இந்த மருத்துவமனையில் வழங்கப்படும் உணவை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அவ்வப்போது ஆய்வு செய்வார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version