Amazing Tamilnadu – Tamil News Updates

Drone Showவில் திமுக வரலாறு… அமர்க்களமாக தொடங்கிய இளைஞரணி மாநாடு!

சேலத்தில் திமுக இளைஞரணி மாநாடு இன்று நடக்கிறது. அதையொட்டி 1000 ட்ரோன்களைக் கொண்டு நடத்தப்பட்ட பிரம்மாண்டமான வான்வெளிக் காட்சி அமர்க்களமாக இருந்தது.

பெரியாரில் ஆரம்பித்து அண்ணா, கலைஞர், உதயசூரியன், மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் என தலைவர்களின் உருவங்கள் வானில் வண்ண விளக்குகளால் வந்து மறைந்தது பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்தது. பின்னணியில் ஒரு குரல் பெரியாரில் ஆரம்பித்து, இன்றைய ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் வரையில் செய்த சாதனைகளையும் சொன்ன கருத்துக்களையும் வரலாறாகச் சொல்லிக் கொண்டிருந்தது.

இன்றைய இளைஞர்களுக்கு திமுகவின் வரலாற்றை சுருக்கமாகவும், அதே சமயத்தில் நவீனமாகவும் சொன்ன அந்த Drone Show, வந்திருந்த அனைவரையும் கவர்ந்தது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், உதயநிதி ஸ்டாலினும் ட்ரோன் காட்சியை வெகுவாக ரசித்தனர்.

“வானத்தில் இருக்கும் நட்சத்திரங்களுக்குப் போட்டியாக அமைந்தது ட்ரோன் காட்சி” என்று உதயநிதி ஸ்டாலின் எக்ஸ் பக்கத்தில் தனது உற்சாகத்தைப் பதிவு செய்திருக்கிறார். முன்னதாக, “நீட் விலக்கு நம் இலக்கு” என்று கன்னியாகுமரியில் இருந்து பிரச்சாரப் பயணம் வந்த 1000 இருசக்கர வாகனங்கள், மாநாட்டு மேடையை வந்தடைந்தன.

சென்னையில் தொடங்கிய சுடரோட்டம், சேலம் மாநாட்டுத் திடலை வந்தடைந்தது. அந்தச் சுடரை இளைஞரணி துணைச் செயலாளர் ஜோயல் மேடையில் உதயநிதி ஸ்டாலினிடம் ஒப்படைக்க அவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் ஒப்படைத்தார்.

மொத்தத்தில் இளைஞரணி மாநாட்டின் ஆரம்பமே அமர்க்களமாக இருந்தது.

Exit mobile version