ஐரோப்பிய நாடுகளையும் விட்டு வைக்காத ட்ரம்ப்… விரிசல் அடையும் இருதரப்பு உறவு!

மெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்றதலிருந்தே வெளிநாடுகளுடனான உறவு, ஏற்றுமதி இறக்குமதி மீதான வரிவிதிப்பில் காட்டி வரும் கெடுபிடி போன்றவை பல்வேறு நாடுகளில் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகின்றன.

அமெரிக்காவிலிருந்து பொருட்களை இறக்குமதி செய்யும் நாடுகள் அவற்றின் மீதான வரி விதிப்பைக் குறைக்க வலியுறுத்தும் ட்ரம்ப், அதே சமயம் இந்தியா, சீனா, கனடா, மெக்சிகோ போன்ற பல்வேறு நாடுகளிலிருந்து தங்கள் நாட்டுக்கு வரும் பொருட்களுக்கு அதிக வரி விதிப்பை அறிவித்து வருகிறார்.

இந்த நிலையில், அமெரிக்காவின் நீண்ட கால எதிரி நாடாக சொல்லப்பட்டு வந்த ரஷ்யாவுடன் அவர் நெருக்கம் காட்டத் தொடங்கி விட்டார். மேலும், அமெரிக்கா உள்ளிட்ட ‘நேட்டோ’ அமைப்பில் இடம்பெற்றுள்ள பல்வேறு ஐரோப்பிய நாடுகள் தந்த ஆயுத உதவி மற்றும் நிதி உதவியால் ரஷ்யாவுடனான போரைத் தொடர்ந்து மூன்றாண்டுகளுக்கும் மேல் நடத்தி வந்த உக்ரைனுக்கு, இனி எந்த உதவியும் அளிக்க முடியாது என ட்ரம்ப் அறிவித்துவிட்டார். இதனால், உக்ரைன் கையைப் பிசைந்து கொண்டிருக்கிறது.

ரஷ்யா கொடுத்த நெருக்கடிகளை எதிர்கொள்ள அமெரிக்காவைத்தான் பெரிதும் நம்பியிருந்தது உக்ரைன். ஆனால், உக்ரைனுக்கு இதுவரை செய்த ராணுவ உதவிகளுக்கு மாற்றாக உக்ரைனின் கனிமப் பொருள்களை அமெரிக்காவுக்கு வழங்க வேண்டும் என்று டிரம்ப் வைத்த நிபந்தனை அந்த நாட்டை அதிர்ச்சிக்கு ஆளாக்கியிருக்கிறது. உக்ரைனின் கனிமவளத்தில் ஏறக்குறைய பாதியைச் சுரண்டும் ஒப்பந்தத்துக்கு வேறு வழியின்றி உக்ரைன் பணிய நேர்ந்திருக்கிறது. மேலும், நேட்டோவில் உக்ரைனுக்கு இடமே கிடையாது என்றும் அதிபர் டிரம்ப் பேசி உள்ளார்.

ஐரோப்பிய நாடுகள் மீது பாய்ந்த டிரம்ப்

இந்த நிலையில், ட்ரம்பின் பார்வை தற்போது ஐரோப்பிய நாடுகள் மீதும் திரும்பி உள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் மீது 25 சதவீத வரி விதிக்கப் போவதாக டிரம்ப் கூறியுள்ளார். மேலும், அமெரிக்காவிற்கு குடைச்சல் கொடுப்பதற்காக தான் ஐரோப்பிய ஒன்றியம் உருவாக்கப்பட்டது என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.

டிரம்ப் பதவியேற்புக்கு பிறகு நடைபெற்ற முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் பேசிய போது,” ஐரோப்பிய ஒன்றியம் உண்மையில் அமெரிக்காவை நன்றாக பயன்படுத்திக் கொண்டது. ஐரோப்பாவின் நோக்கம் நியாயமற்ற முறையில் இருக்கிறது” என்று பேசியதோடு சீனா, கனடா, மெக்சிகோ மீது வரி விதித்தது போல ஐரோப்பிய ஒன்றியத்தின் மீது 25 சதவீதம் வரி விதிக்கப்பட வேண்டும் என தெரிவித்தார்.

முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் டிரம்ப்

கூட்டத்திற்கு பிறகு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், “அமெரிக்காவைத் திருடுவதற்காக தான் ஐரோப்பிய ஒன்றியம் உருவாக்கப்பட்டது. அதன் நோக்கமே நம்மை குடைந்து திருடுவது தான். அவர்கள் அதை நன்றாகவே செய்திருக்கிறார்கள். ஆனால் இப்போது நான் அதிபராகி விட்டேன்” என தெரிவித்தார்.

இருதரப்பு உறவில் விரிசல்

இந்த நிலையில், டிரம்ப்பின் இந்த பேச்சுக்கு ஐரோப்பிய நாட்டின் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். “ஐரோப்பிய ஒன்றியம் உலகின் மிகப்பெரிய தடையற்ற சந்தையாகும். இந்த சந்தை அமெரிக்காவிற்கு ஒரு வரப்பிரசாதமாக உள்ளது என்று ஐரோப்பிய ஆணையத்தின் சில முக்கிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் ஐரோப்பிய ஒன்றியம் மீது வரி விதிக்கப்பட்டால் உறுதியாகவும் உடனடியாகவும் பதிலடி நடவடிக்கைகளை எடுப்போம்.

எங்கள் மக்களுக்கும் வணிகங்களுக்கும் இந்த சுதந்திரமான தடையற்ற சந்தை வாய்ப்புகளைப் பாதுகாக்க நாங்கள் ஒன்றாக வேலை செய்ய வேண்டுமே தவிர ஒருவருக்கொருவர் எதிராக இருக்கக் கூடாது” என ஐரோப்பிய ஒன்றிய ஆணைய அதிகாரிகள் கூறியுள்ளனர்.

ரஷ்யா – உக்ரைன் போர் நிறுத்த பேச்சுவார்த்தை துவங்கியதில் இருந்து அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு இடையிலான மோதல் போக்கு அதிகரித்து வருகின்றது. தற்போது டிரம்ப்பின் இந்த பேச்சு இரு தரப்பு உறவில் மேலும் விரிசலை அதிகரிக்கும் எனக் கூறப்படுகின்றது.

டிரம்ப்பின் இந்த பேச்சுக்கு பின்னணியில் அமெரிக்காவின் பொருளாதார நலன் இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதாவது 2024 இல் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இடையே உள்ள 27 நாடுகளுடனான வர்த்தகப் பற்றாக்குறை சுமார் 235.6 பில்லியன் டாலர்களாக இருந்துள்ளது. அமெரிக்காவில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதை விட அந்நாடுகளிடம் இருந்து இறக்குமதி செய்வது தான் மிக அதிகம் என்பதாலேயே டிரம்ப் இவ்வாறு பேசியிருக்கலாம் என வெள்ளை மாளிகை வட்டாரங்கள் கூறுகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

The nation digest. Click here for more sports news. Bahas 2 agenda penting, pjs wali kota batam hadiri rapat paripurna dprd kota batam.