கடந்த சனிக்கிழமை இரவு அமைச்சர் எ.வ.வேலு எழுதிய ‘கலைஞர் எனும் தாய்’ என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழா சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது.அதில் கலந்துகொண்டு பேசிய நடிகர் ரஜினிகாந்த், அமைச்சர் துரைமுருகன் போன்ற மூத்த திமுக தலைவர்களையெல்லாம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சமாளிப்பதெல்லாம் சாதாரண விஷயமல்ல என்று குறிப்பிட்டது மேடையில் அரங்கிலிருந்தவர்களிடையே கைதட்டலும் சிரிப்புமாக எதிரொலித்தது.
ரஜினியின் பேச்சும் துரைமுருகனின் பதிலடியும்
ரஜினி பேசுகையில், “ஒரு பள்ளியில், ஆசிரியர்கள் புதிய மாணவர்களை எளிதாக சமாளித்து விடுவார்கள். ஆனால், பழைய மாணவர்களை சமாளிப்பது என்பது சாதாரண விஷயம் இல்லை. திமுகவில் ஏகப்பட்ட பழைய மாணவர்கள் இருக்கிறார்கள். அதுவும் அவர்கள் சாதாரண மாணவர்களும் கிடையாது. அசாதாரணமானவர்கள். அனைவரும் நல்ல ‘ரேங்க்’ வாங்கியவர்கள். அதுவும், துரைமுருகன் என்று ஒருவர் இருக்கிறார். அவர் கருணாநிதி கண்ணிலேயே விரல் விட்டு ஆட்டியவர். அவரிடம் ஏதாவது விஷயத்தை செய்ய போகிறோம் என்று சொன்னால், சந்தோஷம்னு சொல்வார். நன்றாக இருக்கிறது என்று சந்தோஷம் என்கிறாரா? அல்லது ஏன் இப்படி செய்கிறீர்கள் என்று கூறுகிறாரா? என ஒன்றும் புரியாது. அந்தவகையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு தலைவணங்குகிறேன்” எனப் பேசியிருந்தார். அவரது இந்த பேச்சைக் கேட்ட முதலமைச்சர் ஸ்டாலின் முகத்திலுமே சிரிப்பு எட்டிப்பார்த்தது.
இந்த நிலையில், ரஜினியின் இந்த பேச்சு குறித்து அமைச்சர் துரைமுருகனிடம் கேட்டபோது, மூத்த நடிகர்கள் எல்லாம் வயதாகி போய், பல் விழுந்து, தாடி வளர்த்து, சாகிற நிலையில இருக்கிறவன் எல்லாம் நடிக்கிறதால தான் இளைஞர்கள் நடிக்க வாய்ப்பில்லாமல் இருக்கிறார்கள்” என தனக்கே உரிய பாணியில் பதிலடி கொடுத்தார்.
முற்றுப்புள்ளி வைத்த ரஜினி
இது தொடர்பாக இன்று காலை சென்னை விமான நிலையத்தில் ரஜினிகாந்திடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த ரஜினி, “அவர் (துரைமுருகன்) மிகப் பெரிய தலைவர், என் நீண்டகால நண்பர். அவர் என்ன சொன்னாலும் எனக்குக் கவலையில்லை. எங்கள் நட்பு நீடிக்கும்” என்று கூறினார்.
இதனையடுத்து, ரஜினியின் கருத்தை சுட்டிக்காட்டி எழுப்பப்பட்ட கேள்விக்கு, “அதையேத்தான் நானும் சொல்கிறேன். எங்கள் நகைச்சுவையை யாரும் பகைச்சுவையாகப் பயன்படுத்த வேண்டாம். நாங்கள் எப்போதும்போல் நண்பர்களாகவே இருப்போம்” என்று அமைச்சர் துரைமுருகன் கூறினார். இதன் மூலம் ரஜினியின் விமர்சனம் மற்றும் துரைமுருகனின் பதிலடி தொடர்பான சர்ச்சை முடிவுக்கு வந்ததாக கருதப்பட்டாலும், இணையங்களில் அது தொடர்பான விவாதங்களும் பேச்சும் தொடரத்தான் செய்கின்றன.
துரைமுருகனை ரஜினி ஏன் அப்படி சொன்னார்?
இந்த நிலையில் புத்தக வெளியீட்டு விழாவில், “கருணாநிதி கண்ணிலேயே விரல் விட்டு ஆட்டியவர் துரைமுருகன்” என ரஜினிக் குறிப்பிட்டது ஏன் என்பது குறித்து தெரிந்து கொள்ள திமுகவின் இடி, மின்னல், மழையாக முழங்கிய மூவர் கூட்டணியைப் பற்றியும் அதில் இடம் துரைமுருகன் குறித்த ஃப்ளாஷ்பேக்கையும் தெரிந்துகொள்வது அவசியம்.
இது குறித்து பேசும் திமுக சீனியர் தலைவர்கள், ” தி.மு.க முதன்முறையாக ஆட்சியைப் பிடிப்பதற்கு முன்பாகவே அந்தக் கட்சியின் மாணவர் அணியில் உறுப்பினராக இருந்தவர் துரைமுருகன். இவரின் கல்லூரி நண்பர்தான் கருணாநிதியின் மருமகனும், முரசொலியின் ஆசிரியருமான செல்வம். அந்த நட்பின் அடிப்படையில்தான் கருணாநிதியுடன் துரைமுருகனுக்கு நெருக்கம் ஏற்பட்டது. கருணாநிதியுடன் எந்த அளவுக்கு நெருக்கமாக இருந்தாரோ, அதே அளவுக்கு எம்.ஜி.ஆர் மீதும் பாசமாக இருந்தவர் துரைமுருகன். ஏனெனில் எம்ஜிஆரின் கல்லூரி படிப்புக்கான செலவை ஏற்றுக்கொண்டவர் எம்ஜிஆர் தான். கருணாநிதிக்கு எதிராக எம்.ஜி.ஆர் , அதிமுக-வைத் தொடங்கி ஆட்சியையும் பிடித்தார்.
எம்ஜிஆர் அரசுக்கு எதிராக முழங்கிய ‘இடி, மின்னல், மழை’ கூட்டணி
1977 முதல் 1988 வரை திமுக எதிர்க்கட்சியாக இருந்த நிலையில், கட்சியைத் தாங்கிப் பிடித்த தி.மு.க-வின் நட்சத்திரப் பேச்சாளர்களில் ஒருவராக திகழ்ந்தவர் துரைமுருகன். தொடர்ந்து தேர்தல்களில் வென்று எம்ஜிஆர் புகழின் உச்சியில் இருந்த காலகட்டம். அப்போது ரகுமான்கான், துரைமுருகன், க.சுப்பு ஆகிய மூவரும் சட்டப்பேரவையில் தங்களது பேச்சாற்றலால் எம்ஜிஆர் அரசுக்கு கடும் நெருக்கடி கொடுத்தனர். அமைச்சர்களை நோக்கி மூவரும் வீசிய கேள்விக் கணைகளால் அரசுக்கு பலநேரங்களில் தர்மசங்கடமான நிலை ஏற்பட்டது.
அது மட்டுமல்லாது ‘இடி, மின்னல், மழை’ என்கிற தலைப்பில் ரகுமான்கான், சுப்பு, துரைமுருகன் ஆகியோர் தமிழகம் முழுவதும் அப்போதைய எம்ஜிஆர் தலைமையிலான அதிமுக அரசுக்கு எதிராக பிரசார சுற்றுப்பயணம் செய்தார்கள். பொதுவெளியில் கட்டுக்கடங்காமல் கூடிய கூட்டத்தால் , அரங்கினுள் கூட்டத்தை நடத்தி அதற்கு டிக்கெட் வசூலிக்கும் அளவுக்குப் பிரபலமாக இருந்தது இவர்களின் பேச்சு. ஆனால், எந்த எம்.ஜி.ஆருக்கு எதிராக துரைமுருகன் வாள் சுழற்றினாரோ, அந்த எம்.ஜி.ஆர் துரைமுருகன்மீது வைத்திருந்த அன்பும் அலாதியானது.
முதல்வராக எம்.ஜி.ஆர் இருந்தபோது ஒருமுறை துரைமுருகனிடம் “முருகன் நீ என்னுடன் வந்துவிடு. உனக்கு எந்தத் துறை வேண்டுமோ அதை எடுத்துக்கொள்” என்று எம்.ஜி.ஆர் சொல்ல, “நீங்கள் எனக்கு அண்ணன். கலைஞர் எனக்குத் தலைவர். உங்களுடன் என்னால் வர முடியாது” என தனது திமுக விசுவாசத்தைத் தன்னை வளர்த்தவரிடமே சொல்லிக்காட்டியவர் துரைமுருகன்.
கருணாநிதியைத் தவிர்த்துவிட்டு தமிழக அரசியலை எப்படி எழுத முடியாதோ, அப்படி திமுக-வின் வரலாற்றை துரைமுருகனைத் தவிர்த்துவிட்டு எழுத முடியாது. திமுக-வை அண்ணா உருவாக்கியபோது, ஐவர் படை அதற்குப் பெரும் பலமாக இருந்தது. அதே திமுக-வின் தலைவராகக் கருணாநிதி தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, துரைமுருகனின் பணி கருணாநிதிக்குப் பல நேரங்களில் பலமாக இருந்திருக்கிறது. ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக தி.மு.க-வின் முகமாகப் பார்க்கப்பட்டு வருபவர் துரைமுருகன் ” எனச் சொல்லி சிலாகிக்கிறார்கள்.