நூறு நாள் வேலைத்திட்டத்தில் தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு வழங்க வேண்டிய நிதியை உடனே விடுவிக்கக்கோரி, தமிழ்நாடு முழுவதும் மார்ச் 29 அன்று திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.
இந்த நிலையில், இந்த போராட்டம் ஏன் என்பது குறித்து தனது கட்சித் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் விளக்கி உள்ள முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின், இந்த போராட்டத்தில் பாதிக்கப்பட்ட கிராமப்புற ஏழை ஆண் – பெண் தொழிலாளர்களைப் பங்கேற்கச் செய்ய வேண்டும் என திமுக-வினரை வலியுறுத்தியுள்ளார்.
” திராவிட முன்னேற்றக் கழகம், காங்கிரஸ், பொதுவுடைமை அமைப்புகள் உள்ளிட்ட ஜனநாயக இயக்கங்களின் ஆதரவுடன் 2004-இல் அமைந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின்போது, கிராமப்புற ஏழைத் தொழிலாளர்களின் பட்டினிச் சாவைத் தடுத்திடும் வகையில் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு, குறைந்தபட்சம் 100 நாள் வேலை உறுதி செய்யப்பட்டது. மக்கள் நலன் சார்ந்த திட்டங்கள் எதுவாக இருந்தாலும் அதனைச் சரியாகவும் முறையாகவும் நிறைவேற்றக்கூடிய மாநிலமான தமிழ்நாடு, 100 நாள் வேலைத் திட்டத்தையும் மிகச் சிறப்பாகச் செயல்படுத்தி வருகிறது.
ஆனால், ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு ஒதுக்க வேண்டிய நிதி தொடங்கி, ஒவ்வொரு திட்டத்திலும் தமிழ்நாட்டிற்குரிய நிதியை ஒன்றிய பாஜக அரசு உரிய அளவிலும், உரிய நேரத்திலும் ஒதுக்குவதில்லை. அரசியல் பார்வையுடன் தமிழ்நாட்டை ஓரங்கட்ட நினைக்கிறது.
மாநிலத்தில் ஆட்சியதிகாரத்தில் இருப்பவர்களே தங்களின் நியாயமான உரிமைக்காகவும், மாநிலத்திலிருந்து வசூலிக்கப்பட்ட வரியிலிருந்து உரிய பங்கு கிடைப்பதற்காகவும் ஒன்றிய பாஜக அரசிடம் ஒவ்வொரு நாளும் போராட்டம் நடத்த வேண்டியுள்ள நிலையில், 100 நாள் வேலைத்திட்டத்தில் பணியாற்றும் ஏழை – எளிய தொழிலாளர்களின் வாழ்வு, பாஜக ஆட்சியில் அவலமான நிலையில் உள்ளது.
இந்த நிலையில், 100 நாள் வேலைத்திட்டத்தில் தமிழ்நாட்டுக்கு ஒன்றிய அரசு வழங்க வேண்டிய நிதியை உடனே விடுவிக்கக்கோரி, தமிழ்நாடு முழுவதும் மார்ச் 29-ஆம் நாள் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறவிருக்கிறது. இது நம் மாநில உரிமைக்கான போராட்டம் மட்டுமல்ல, நாள்தோறும் உழைத்து நாட்டை முன்னேற்றிடும் கிராமப்புற ஏழை மக்களின் வாழ்வாதாரத்திற்கான போராட்டம். எனவே, ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் இடங்களில், பாதிக்கப்பட்ட கிராமப்புற ஏழை ஆண் – பெண் தொழிலாளர்களையும் பங்கேற்கச் செய்திட வேண்டும். அவர்களின் உரிமை முழக்கமாக உடன்பிறப்புகள் களம் காண வேண்டும்.

தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு ஒன்றியத்திலும் இரண்டு இடங்களில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறவிருக்கிறது. இது நம் மாநில உரிமைக்கான போராட்டம் மட்டுமல்ல, நாள்தோறும் உழைத்து நாட்டை முன்னேற்றிடும் கிராமப்புற ஏழை மக்களின் வாழ்வாதாரத்திற்கான போராட்டம். எனவே, ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் இடங்களில், பாதிக்கப்பட்ட கிராமப்புற ஏழை ஆண் – பெண் தொழிலாளர்களையும் பங்கேற்கச் செய்திட வேண்டும். அவர்களின் உரிமை முழக்கமாக உடன்பிறப்புகள் களம் காண வேண்டும்.
வியர்வை காய்வதற்கு முன்பே உழைப்பிற்கான ஊதியத்தை வழங்குவதுதான் நியாயமான செயலாகும். உழைத்தவர்கள் ஓடாய்த் தேய்கிற வரை, அவர்களின் உழைப்பை உறிஞ்சிவிட்டு, ஊதியத்தைத் தர மறுக்கிறது ஒன்றிய பாஜக அரசு. அதன் உழைப்புச் சுரண்டலையும், உரிமைப் பறிப்பையும் உரக்க முழங்கிடுவோம். உரிமைகளை வென்றிடுவோம்” என்று அந்த கடிதத்தில் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.