காஞ்சிபுரத்தில் இன்று மாலை நடைபெறும் திமுக பவள விழா பொதுக் கூட்டத்தில், கூட்டணி கட்சிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் எனத் தெரிகிறது.
காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆண்கள் கல்லூரி திடலில், இன்று மாலை 5 மணி அளவில் திமுக பவள விழா பொதுக் கூட்டம் நடைபெற உள்ளது. திமுக பொதுச் செயலாளரும் நீர்வளத் துறை அமைச்சருமான துரைமுருகன் தலைமையில் நடைபெறும் இப்பொதுக் கூட்டத்தில் திமுகவின் முக்கிய அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று சிறப்புரை ஆற்றுகிறார்.
கூட்டணியில் சலசலப்பு
இந்த நிலையில், இந்த பொதுக்கூட்டத்தில் கூட்டணி கட்சிகளுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்பட உள்ளது. தமிழகத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் இருந்து 2024 ல் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் வரை திமுக கூட்டணி சிந்தாமல் சிதறாமல் ஒற்றுமையாக நின்று வெற்றி பெற்று வருகிறது. ஆன போதிலும், சமீப காலமாக கூட்டணி கட்சிகளிடையே திமுக மீது அதிருப்தி நிலவுவதாக செய்திகள் வெளியாகின.
திமுக கூட்டணியிலுள்ள காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், மதிமுக, தமிழக வாழ்வுரிமைக் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, மனிதநேய ஜனநாயகக் கட்சி உள்ளிட்ட எல்லாக் கட்சிகளுமே ஏதோவொரு விஷயத்தில் அவ்வப்போது தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தி இருந்தன.
விசிக-வினால் ஏற்பட்ட பரபரப்பு
இதில், விடுதலை சிறுத்தைகள் மற்றும் இடதுசாரி கட்சிகள் சற்று கூடுதலாகவே திமுக மீது அதிருப்தி தெரிவித்து வந்தன. கூட்டணியில் இடம்பெற்றுள்ளபோதிலும், கட்சியின் கொடிக்கம்பத்தை நடுவதற்கே போராட வேண்டி இருப்பதாகவும், பொது இடங்களில் மற்ற கட்சிகளின் கொடிக்கம்பங்கள் அமைக்க அனுமதி அளிக்கும் காவல்துறை, தங்களுக்கு மட்டும் அனுமதி மறுப்பதாகவும், இதனால் கூட்டணியில் இடம்பெற்று என்ன பயன் என்று விடுதலை சிறுத்தைகள் தரப்பில் அதிருப்தி தெரிவிக்கப்பட்டது.
அத்துடன், வருகிற அக்டோபர் மாதம் தனது கட்சி நடத்த உள்ள மது ஒழிப்பு மாநாட்டில் அதிமுகவும் கலந்துகொள்ளலாம் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் அழைப்பு விடுத்த விவகாரமும், ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் எனப் பதிவிட்ட வீடியோவும் பரபரப்பை கிளப்பியது. அந்த சர்ச்சை ஓய்வதற்குள் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச் செயலாளரான ஆதவ் அர்ஜூனா, சில தினங்களுக்கு முன்னர் அளித்த பேட்டியும் அடுத்த சலசலப்பை ஏற்படுத்தியது.
இதன் காரணமாக வரவிருக்கும் 2026 சட்டமன்ற தேர்தல் வரை திமுக கூட்டணி தொடருமா என்ற ரீதியில் தமிழக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டது.
கூட்டணி கட்சித் தலைவர்களுக்கு முக்கியத்துவம்
இந்த நிலையில் தான், இந்த பரபரப்புகளுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாகவும், திமுக கூட்டணியில் எந்த சலசலப்பும் இல்லை என்பதை வெளிப்படுத்தும் விதமாகவும் இன்றைய திமுக பவள விழா பொதுக்கூட்டத்தில் கூட்டணி கட்சித் தலைவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு, அவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.
திராவிட கழகத் தலைவர் ஆசிரியர். கி.வீரமணி, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கு.செல்வப்பெருந்தகை, ம.தி.மு.க பொதுச் செயலாளர் வை.கோ., மார்க்சிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் இரா.முத்தரசன், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர்மொய்தீன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், மனிய நேயம் மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா,
கொங்கு நாடு தேசிய கட்சி பொது செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன், தமிழ்நாடு வாழ்வுரிமை கட்சி தலைவர் தி.வேல்முருகன், மூவேந்தர் முன்னேற்ற கழக தலைவர் ஜி.எம்.ஸ்ரீதர் வாண்டையார், தமிழ்நாடு விவசாய தொழிலாளர் கட்சித் தலைவர் பொன்.குமார், சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன், மக்கள் விடுதலை கட்சித் தலைவர் முருகவேல்ராஜன், மனிய நேய ஜனநாயக்கட்சி தலைவர் தமீமுன் அன்சாரி, முக்குலத்தோர் புலிப்படை கட்சித் தலைவர் கருணாஸ், ஆதித்தமிழர் பேரவை கட்சித் தலைவர் அதியமான், தமிழ்மாநில தேசிய லீக் தலைவர் திருப்பூர் அல்தாப், பார்வார்டு பிளாக் கட்சி நிறுவன தலைவர் பி.என்.அம்மாவாசி உள்ளிட்டோருக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.