திமுக-வை தோற்றுவித்த பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் (செப்.15), பெரியார் பிறந்தநாள் மற்றும் திமுக தொடங்கப்பட்ட நாள் (செப்.17) ஆகியவற்றை இணைத்து திமுக சார்பில், ஆண்டுதோறும் செப்.17-ம் தேதி முப்பெரும் விழா கொண்டாடப்படுகிறது. அந்த வகையில், இந்த ஆண்டு திமுக தொடங்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதால், அதனையும் சேர்த்து திமுக பவளவிழா மற்றும் முப்பெரும் விழா, சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் அமைச்சர் துரைமுருகன் தலைமையில் நேற்று மாலை நடைபெற்றது.
சென்னை தெற்கு மாவட்ட திமுக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த விழாவில் பங்கேற்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை 5.46 மணிக்கு வந்தார். தொடர்ந்து, மேடையில் பவள விழா, முப்பெரும் விழா தொடர்பான வீடியோ காட்சி ஒளிபரப்பப்பட்டது.
AI தொழில் நுட்பத்தில் மேடையில் தோன்றிய கருணாநிதி
இதைத் தொடர்ந்து, செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ) தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட கருணாநிதியின் உருவம், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அருகில் அமர்ந்து அவரை வாழ்த்திப் பேசுவது போன்ற காட்சி திரையிடப்பட்டது. இது திமுக-வினரை வெகுவாக கவர்ந்து, பலத்த கைத்தட்டலைப் பெற்றுத்தந்தது.
“என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே..” என்று, ஏஐ தொழில்நுட்பத்தில் உருவான கலைஞர் கருணாநிதியின் கரகரத்த குரலை கேட்டு, திமுக பவள விழா மேடை அதிர்ந்தது.
“ஸ்டாலின் என்றால் உழைப்பு, உழைப்பு உழைப்புதான்” எனவும், “இந்தியாவின் முன்மாதிரி முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் திகழ்கிறார்” எனவும் கருணாநிதியின் ஏ.ஐ.உரையில் பெருமிதத்துடன் குறிப்பிடப்பட்டது.
விருதுகள்…
விழாவில் கலைஞர் அறக்கட்டளை சார்பில், கட்சியில் ஒன்றியம், நகரம், பகுதி, பேரூர் அளவில் சிறப்பாக பணியாற்றிய நிர்வாகிகள் மண்டலத்துக்கு 4 பேர் என 16 பேருக்கு தலா ரூ.1 லட்சம் பண முடிப்பு, சான்றிதழை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.
தொடர்ந்து, பெரியார் விருதை பாப்பம்மாளுக்கு பதிலாக அவரது பேத்தி ஜெயசுதாவிடம் முதலமைச்சர் வழங்கினார். பின்னர், அண்ணா விருதை அறந்தாங்கிமிசா ராமநாதனுக்கும், கலைஞர் விருதை ஜெகத்ரட்சகன் எம்.பி.க்கும், பாவேந்தர் விருதை கவிஞர் தமிழ்தாசனுக்கும், பேராசிரியர் விருதை வி.பி.ராஜனுக்கும், பவளவிழா ஆண்டில் புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள மு.க.ஸ்டாலின் விருதை எஸ்.எஸ்.பழனிமாணிக்கத்துக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார்.
க்ரீம் பன் வரி விவகாரம்… ஸ்டாலின் சுளீர் பேச்சு
விழாவில் உரையாற்றிய முதலமைச்ரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், “ஒரு இயக்கம் 75 ஆண்டுகாலம் நிலைத்து நிற்பதும், ஒரு இயக்கம் 75 ஆண்டுகள் கழித்தும் கம்பீரமாகக் காட்சி அளிப்பதும் சாதாரணமான சாதனை இல்லை. இதற்கு முழுமுதல் காரணம் நமது அமைப்புமுறைதான் என்பதை நான் நெஞ்சை நிமிர்த்திச் சொல்லுவேன்.
கடந்து வந்த 75 ஆண்டுகளில் எத்தனையோ சாதனைகளை செய்துள்ளோம். அதேநேரத்தில், நமது எல்லா கனவுகளும் நிறைவேறிவிட்டதா என்றுகேட்டால் இல்லை. மாநில உரிமைகளை வழங்கும் மத்திய அரசு அமையவில்லை. நிதி உரிமை உள்ளிட்ட கோரிக்கைகளுக்கு இன்னமும் போராட வேண்டிஉள்ளது.
இன்று க்ரீம் பன்னுக்கு ஏன் இவ்வளவுவரி போடுகிறீர்கள் என்று கேட்கக்கூட உரிமை இல்லாத நிலை உருவாகி உள்ளது. இந்த சூழலில் மாநில சுயாட்சியை வென்றெடுப்பதற்கான ஓர் அறிவிப்பைத்தான் இந்த பவள விழா செய்தியாக சொல்ல விரும்புகிறேன்.
குறைவான நிதிவளத்தை கொண்டே, நம்மால் இவ்வளவு சாதனைகளை செய்ய முடிகிறது என்றால், முழுமையான நிதிவளம் கிடைத்தால், தமிழகத்தை அனைத்திலும் சிறந்த மாநிலமாக மாற்றிக்காட்ட நம்மால் முடியும். எனவே, அனைத்து அதிகாரங்களும் கொண்டவையாக மாநில அரசுகளை மாற்றும் வகையில், அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டுவர முயற்சிக்கும் சட்ட முன்னெடுப்புகளை திமுக நிச்சயமாக, உறுதியாக மேற்கொள்ளும்.
எந்த மாநில அரசும் ஒரு மாநிலத்துக்கு இவ்வளவு நன்மைகளைச் செய்து தந்ததில்லை எனச் சொல்லும் அளவுக்கு திமுக அரசு, தமிழ்நாட்டை வளம்மிகுந்த மாநிலமாக மேம்படுத்தியுள்ளது. தொடர்ந்து வளப்படுத்தி வருகிறது.
அடுத்து நமது இலக்கு 2026 தேர்தல். இதுவரை இப்படியொரு வெற்றியை எந்தக் கட்சியும் பெற்றதில்லை என வரலாறு சொல்ல வேண்டும். அந்த வரலாற்றை எழுதுவதற்கு நீங்கள் தயாரா? இந்த உணர்வு வெற்றி சரிதமாக மாற வேண்டும். அதற்கு இந்த முப்பெரும் விழாவில் உறுதியேற்போம்” என்று பேசினார்.
சூடான துரைமுருகன்…
திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் பேசுகையில், “சமீபத்தில் மத்திய அரசு இந்திய வரலாற்றை திருத்தி எழுத ஒரு கமிட்டியை அமைத்துள்ளது. இதுவரையில் திராவிட நாடு என சொல்லிக் கொண்டிருந்தோம். ஆனால், இந்த கமிட்டி ஆரிய நாகரிகம் என்று கூறுகிறார்கள்.
இந்த கமிட்டியில் உள்ள 17 பேரில் 3 பேர் அரசு அதிகாரிகள், மீதமுள்ள அனைவரும் பிராமணர்கள். இந்திய வரலாற்றை திருத்தி எழுதும் கமிட்டியில் அத்தனை பேருமா பிராமணர்களாக இருப்பார்கள்? இதே போக்கை பாஜக செய்யுமானால், திமுக தனது வீரியத்தை காட்ட வேண்டிய காலம் வந்துவிட்டது” என்றார் ஆவேசமாக.