Amazing Tamilnadu – Tamil News Updates

2026 சட்டமன்ற தேர்தல்: திமுக-வின் ‘டார்கெட்’ இதுதான்! – ‘அலெர்ட்’ செய்த மு.க. ஸ்டாலின்!

ரவிருக்கும் 2026 தமிழக சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வதில் திமுக-வினரின் அணுகுமுறை எப்படி இருக்க வேண்டும், அந்த தேர்தலில் திமுகவின் இலக்கு என்ன என்பது குறித்து அக்கட்சியின் தலைவரும் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளார்.

இது தொடர்பாக இன்று சென்னை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெற்ற திமுக மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டத்தில் பேசிய அவர், “நாடாளுமன்றத் தேர்தல் வெற்றிக்குப் பிறகு நடைபெறும் முதல் மாவட்டச் செயலாளர் கூட்டம் என்பதால், நாற்பதுக்கு நாற்பது வெற்றியை ஈட்டித் தந்த, ஆற்றல்மிகு மாவட்டச் செயலாளர்களுக்கும் – தலைமைக் கழக நிர்வாகிகளுக்கும் எனது பாராட்டுகளையும் – வாழ்த்துகளையும் – மனமார்ந்த நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த வெற்றி சாதாரண வெற்றி இல்லை; சாதாரணமாகவும் இது கிடைத்துவிடவில்லை. 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் நாற்பதுக்கு 39 பெற்றோம். 2024 தேர்தலில் நாற்பதுக்கு நாற்பது பெற்றோம். இரண்டு தேர்தலில் முழுமையான வெற்றியை இதுவரை யாரும் பெற்றது இல்லை; நாமும் இதுக்கு முன்பு பெற்றது இல்லை. இந்த வெற்றிக்கு உங்களது உழைப்பு, உங்களது செயல்பாடு மிக மிக அடிப்படையாக அமைந்திருந்தது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

2026 தேர்தல் இலக்கு

2019 நாடாளுமன்றத் தேர்தல் தொடங்கி, நடந்த முடிந்த விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வரை தொடர்ச்சியாக மக்கள் மன்றத்தில் வென்றிருக்கிறோம். சுணக்கமில்லாமல் செயல்பட்டால், அடுத்த முறையும் நம்முடைய கழக ஆட்சி என்பதால் சந்தேகமில்லை. அதற்கு தயாராகும் வகையில், நாம் களப்பணிகளை தொடங்க வேண்டும்.

அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு தேர்தலை மனதில் வைத்தே செயல்பட வேண்டும். விமர்சனங்களுக்கு பதில் சொல்லும் அதேவேளையில் நம்முடைய சாதனைகளையும் மக்கள் மன்றத்தில் எடுத்து வைக்க வேண்டும். 2026 சட்டமன்றத் தேர்தலில் நம்முடைய இலக்கு 200 தொகுதிகள் என்று நான் சும்மா ஏதோ மேடைப் பேச்சுக்காக குறிப்பிடவில்லை. அந்த அளவுக்கு நலத்திட்டப் பணிகளை செய்திருக்கிறோம். மக்களிடம் நற்பெயரை வாங்கியிருக்கிறோம். தமிழ்நாட்டின் எந்த ஒரு வீட்டை எடுத்துக் கொண்டாலும் அந்த வீட்டில் ஒருவராவது பயனடையும் வகையில்தான் திட்டங்கள் தீட்டப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மக்களை சென்று சேர்ந்திருக்கும் நலத்திட்டங்கள் எல்லா தமிழ்நாடும் வாக்குகளாக மாற வேண்டும் என்றால் அதற்கு நம்முடைய களப்பணி மிக மிக அவசியம். அதற்கு இப்போதே நாம் உழைக்க வேண்டும்.

நான் முதலீடுகளை ஈர்ப்பதற்காக வரும் 27-ஆம் தேதி இரவு அமெரிக்காவிற்குப் புறப்பட இருக்கிறேன். தீர்மானத்தில் சொன்னபடி, முப்பெரும் விழாவிற்கான பணிகளை செய்து முடிப்பதோடு – நான் இப்போது சொல்லியிருக்கும் பணிகளையும் செய்ய தொடங்கியிருக்க வேண்டும். நான் அமெரிக்காவில் இருந்தாலும் தலைமைக் கழகம் மூலமாக இதையெல்லாம் கவனித்துக் கொண்டுதான் இருப்பேன்.

திமுகவினரின் வரலாற்றுக் கடமை

கட்சி தொடங்கி 75 ஆண்டுகள் ஆனபிறகும் ஆட்சியில் இருக்கும் இயக்கமும் நம்முடையதுதான். அப்படிப்பட்ட தருணத்தில் – கோடிக்கணக்கான தொண்டர்கள் இருக்கும் இந்த இயக்கத்தில், நானும் நீங்களும் பல்வேறு கட்சிப் பொறுப்புகளில் இருக்கிறோம் என்பது நமக்கெல்லாம் கிடைத்த மிகப்பெரிய பெருமை!

75 ஆண்டுகள் கடந்துவிட்ட இந்த இயக்கத்தின் தேவை இன்னும் நூறு ஆண்டுகளுக்கு இருக்கிறதுஇந்த இயக்கத்தை அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு கொண்டு சேர்க்க வேண்டிய மாபெரும் வரலாற்றுக் கடமையும் நம்முடைய கைகளில் இருக்கிறது” எனக் கேட்டுக்கொண்டார்.

Exit mobile version