Amazing Tamilnadu – Tamil News Updates

ஆன்லைன் பட்டாசு விற்பனை: உஷார்… ஆசை காட்டி அரங்கேறும் மோசடி!

ந்த ஆண்டு தீபாவளி பண்டிகை இம்மாதம் 31 ஆம் தேதி கொண்டாடப்படவுள்ள நிலையில், ஆடைகள் தொடங்கி செல்போன், டிவி, நகை மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் வரையிலான தீபாவளி ஷாப்பிங் களைக்கட்டத் தொடங்கிவிட்டது. பெரும்பாலான அலுவலகங்கள் மற்றும் தொழில் நிறுவனங்களில் இன்னும் தீபாவளி போனஸ் கொடுக்கப்படவில்லை. விரைவிலேயே அவை வழங்கப்பட்டு விடும் என்பதால், வரும் நாட்களில் தீபாவளி விற்பனை மேலும் சூடுபிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தீபாவளிக்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், ஆர்டர்களை நிறைவேற்ற பட்டாசு ஆலைகள் உற்பத்தியை தீவிரப்படுத்தி உள்ளதாகவும், சுமார் 80% உற்பத்தி நிறைவடைந்துள்ளதாகவும் இந்திய பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் டி கண்ணன் தெரிவித்துள்ளார்.

நல்ல தள்ளுபடியில் மொத்தமாகப் பட்டாசுகளை வாங்க சிவகாசிக்கு சென்னை, கோவை, நாமக்கல், சேலம் உட்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்களும், ஆந்திரா போன்ற பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் அதிகமானோர் வருகை தரத்தொடங்கி உள்ளனர். இதனால், இந்த ஆண்டு பட்டாசு விற்பனை நன்றாக உள்ளதாகவும், அதே சமயம் மூலப்பொருள் மற்றும் விலை உயர்ந்தாலும் விலையை அதிகரிக்க வேண்டாம் என்று தாங்கள் முடிவு செய்துள்ளதாகவும் சிவகாசி பட்டாசு விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும், இந்த ஆண்டு ஆன்லைனில் அதிகமானோர் பட்டாசுகளை ஆர்டர் செய்ய ஆரம்பித்துள்ளனர். இந்த நிலையில் , ஆன்லைனில் போலியான மற்றும் கவர்ச்சி விளம்பரங்களை நம்பி பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என தமிழ்நாடு பட்டாசு வணிகர்கள் கூட்டமைப்பு சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

அரங்கேறும் ஆன்லைன் மோசடி

இது குறித்து சிவகாசியில் தமிழ்நாடு பட்டாசு வணிகர்கள் கூட்டமைப்பின் மாநில தலைவர் ராஜா சந்திரசேகரன் கூறுகையில், ” ஆன்லைன் பட்டாசு வணிகத்தால், உள்ளூர் வணிகர்கள் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றன. இன்னும் சிலரோ 80 சதவீதம் தள்ளுபடி, 90 சதவீதம் தள்ளுபடி என அதிக சலுகை விலை அறிவித்து, பொதுமக்களிடம் பணத்தைப் பெற்றுக் கொண்டு பட்டாசு வழங்காமல் ஏமாற்றுகின்றனர்.

ஆன்லைனில் பட்டாசு ஆர்டர் செய்யும் வாடிக்கையாளருக்கு, ஆன்லைனில் பணம் செலுத்துவதற்கு யுபிஐ ஐடி, கியூஆர் குறியீடு அல்லது வங்கி விவரங்கள் வழங்கப்பட்டு, ஒரு வாரத்தில் பட்டாசுகள் டெலிவரி செய்யப்படும் என வாக்குறுதி வழங்கப்படுகிறது. ஆனால், சொன்ன தேதியில் வழங்கப்படுவதில்லை. இது குறித்து ஆன்லைனில் கொடுக்கப்பட்டுள்ள மொபைல் எண்ணில் தொடர்புகொண்டு கேட்டால், அதிக டிமாண்ட் இருப்பதால் தாமதமாவதாகவும், விரைவிலேயே அனுப்பி விடுவதாகவும் கூறுகின்றனர்.

ஆனால், அடுத்த சில தினங்களிலேயே மொபைலை சுவிட்ச் ஆப் செய்துவிட்டு, விளம்பரம் செய்த இணையதளத்தையும் மூடிவிட்டு மாயமாகி விடுகின்றனர். சில சமயங்களில் இந்த மோசடியாளர்கள் வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கில் இருக்கும் மொத்த பணத்தையும் வாரிச்சுருட்டி எடுத்துச் சென்று விடுகின்றனர். இந்த நபர்கள் முறையான வியாபாரிகளே கிடையாது. மேலும் இவர்களிடம் ஜிஎஸ்டி எண் போன்ற எந்த ஒரு உரிமங்களும் இருப்பதில்லை” எனத் தெரிவித்தார்.

எனவே, ஆன்லைனில் பட்டாசு ஆர்டர் செய்ய நினைப்பவர்கள் உஷாராக இருப்பது நல்லது!

Exit mobile version