Amazing Tamilnadu – Tamil News Updates

தீபாவளியன்று மழை இருக்குமா..? ஆய்வாளர்களின் மகிழ்ச்சி தகவல்!

டகிழக்குப் பருவ மழை தீவிரமாக தொடங்கிவிட்ட நிலையில், வருகிற 31 ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி ஜவுளிக் கடைகள் மட்டுமல்லாது, வீட்டு உபயோக பொருட்கள் விற்கும் கடைகள் உள்ளிட்ட வர்த்தக நிறுவனங்களில் மக்கள் வருகை அதிகரிக்கத் தொடங்கிவிட்டது.

தீபாவளிக்கு இன்னும் 12 தினங்களே உள்ள நிலையில், வியாபாரிகளும் மொத்தமாக பொருட்களை வாங்கி குவிக்கத் தொடங்கிவிட்டனர். இந்த நிலையில், அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்களில் ஊழியர்களுக்கு போனஸ் தொகை கொடுக்கத் தொடங்கிவிட்டனர். இதனால், வரும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையிலிருந்து கடைகளில் கூட்டம் அலைமோத தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்னொரு புறம் பட்டாசு கடைகள் அமைப்பதற்கான டெண்டர் விடப்பட்டு, அதற்கான ஏற்பாடுகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இத்தகைய சூழ்நிலையில் தான், தமிழகத்தில் கடந்த செவ்வாய், புதன்கிழமைகளில் தீவிரம் காட்டிய மழை, தற்போது பல்வேறு மாவட்டங்களில் பரவலாக பெய்து வருகிறது. இதே நிலை தீபாவளியையொட்டியும் இருந்தால் தீபாவளி வியாபாரம் பாதிக்கப்படுமே என வியாபாரிகள் கலக்கம் அடையத் தொடங்கி உள்ளனர். இன்னொரு புறம் தீபாவளியை தங்களது சொந்த ஊர்களில் கொண்டாட திட்டமிட்டுள்ளோரும், மழை வந்தால் கொண்டாட்டம் தடைபடுமே என கருதுகின்றனர்.

இந்த நிலையில் தான் வியாபாரிகளும் பொதுமக்களும் மகிழும் வகையில் தீபாவளி பண்டிகையன்றும், அதற்கு முந்தைய நாட்களிலும் மழைக்கு வாய்ப்பு இல்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது.

ஏனென்றால் வடக்கு அந்தமான் கடல் பகுதியில் வருகிற 21 தேதி உருவாகும், காற்றழுத்த தாழ்வு பகுதி, புயல் சின்னமாக 23 ஆம் தேதி வலுப்பெற்று, அதன் பின்னர் வடக்கு ஆந்திரா-வங்காளதேசம் இடையே கரையை கடக்க உள்ளது.

பொதுவாக ஒரு புயல் கரையை கடந்தால் அடுத்த நிகழ்வு உருவாக ஒரு வார காலம் எடுக்கும். தமிழ்நாட்டில் இந்த புயலால் ஈரப்பதம் அனைத்தும் இழுக்கப்பட்டு, வறண்ட காற்றே இருக்கும். இதனால் 22 ஆம் தேதிக்குப் பின்னர் தமிழ்நாட்டில் கோடைகாலம் போல வெயில் சுட்டெரிக்க வாய்ப்பு அதிகம் இருப்பதாக வானிலை ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

மேலும் அடுத்த மாதம் 5 ஆம் தேதிக்குப் பிறகே வடகிழக்கு பருவமழைக்கான சூழல் தொடங்குகிறது. எனவே இடைப்பட்ட நாட்களில் மழைக்கான வாய்ப்பு என்பது மிகவும் குறைவே. எனவே இந்த ஆண்டு மழை இல்லாமல் தீபாவளி பண்டிகை இருக்கும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version