‘தமிழ்நாட்டில் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் தலித் எம்.எல்.ஏ-க்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த அமைச்சர் பதவி எதுவும் ஒதுக்கப்படுவதில்லை’ என்ற குற்றச்சாட்டுகள் சமீப காலமாக தீவிரமாக முன்வைக்கப்படுகின்றன. அது மட்டுமல்லாது, ‘சனாதனத்தை தூக்கிப்பிடிக்கும் பாஜக கூட உத்தரபிரதேசத்தில் மாயாவதி முதலமைச்சராக ஆதரவு அளித்தது. ஆனால் சமூக நீதி பேசும் திராவிட கட்சிகள் ஆளும் தமிழகத்தில் அதுபற்றி சிந்திப்பதே இல்லை’ என்றும் விமர்சனங்கள் எழுந்தன.
இது பற்றி சமீபத்தில் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், “தலித் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர், எந்த சூழலிலும் எந்த மாநிலத்திலும் முதலமைச்சராக வர முடியாது. மாயாவதி உத்தரபிரதேச முதல்வரானது ஒரு விதிவிலக்கு. மாநில அரசில் தலித் ஒருவர் முதலமைச்சராக வரக்கூடிய சூழல் இங்கே இல்லை” என அண்மையில் கூறி இருந்தது தமிழக அரசியல் களத்தில் விவாதத்தை கிளப்பி இருந்தது.
இது குறித்து கருத்து தெரிவித்திருந்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், “தமிழ்நாட்டில் பட்டியலின சமூகம் எங்களுக்கு ஆதரவு கொடுத்தால் தலித் சமூகத்தை சேர்ந்த ஒருவரை முதலமைச்சராக ஆக்குவோம். இது வெறும் பேச்சு கிடையாது. பாமகவுக்கு கிடைத்த முதல் மத்திய அமைச்சர் பதவியை பட்டியல் இன சமூகத்தை சேர்ந்த தலித் எழில்மலைக்குதான் அதை கொடுத்தோம். 1998 ஆம் ஆண்டிலேயே இதை நாங்கள் செய்தோம். ஆனால் திமுக 1999ஆம் ஆண்டுதான் பட்டியல் இனத்தை சேர்ந்தவருக்கு மத்திய அமைச்சர் பதவியை கொடுத்தார்கள். எங்கள் கட்சியில் பட்டியல் இன சமூகத்தை சேர்ந்த ஒருவர்தான் பொதுச்செயலாளர் ஆக இருக்க வேண்டும் என்பது அடிப்படை விதி” எனக் கூறி இருந்தார்.
தனபாலை முதலமைச்சராக்கும் யோசனை…
இந்த நிலையில்தான், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து அதிமுக-வில் நிலவிய அரசியல் குழப்பத்தின்போது, அப்போது சபாநாயகராக இருந்த தலித் சமூகத்தைச் சேர்ந்த தனபாலை முதலமைச்சராக ஆக்கலாம் என்று தாம் சசிகலாவிடம் கூறி முன்மொழிந்ததாக, சசிகலாவின் சகோதரர் திவாகரன் பரபரப்பான தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா, உடல்நலக் குறைவு காரணமாக 2016 டிசம்பர் 5 ஆம் தேதி உயிரிழந்தார். இதனையடுத்து, இடைக்கால முதல்வராக ஓ.பன்னீர் செல்வம் பொறுப்பேற்றார். ஆனால், அடுத்து வந்த நாள்களில் தனது பதவியை ராஜினாமா செய்தார் ஓபிஎஸ். தொடர்ந்து சட்டமன்ற அதிமுக தலைவராக சசிகலா தேர்வு செய்யப்பட்டார். அடுத்து வந்த நாள்களில் சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா சிறை சென்றார். இதனையடுத்து சென்னை ஈசிஆர் சாலையில் உள்ள ஒரு ரிசார்ட்டில் அதிமுக எம்.எல்.ஏ-க்கள் தங்க வைக்கப்பட்டு, அங்கு எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அதற்கு முன்னதாக அப்போதைய சபாநாயகராக இருந்த தனபாலை முதல்வராக ஆக்கலாம் என்று தாம் சசிகலாவிடம் முன்மொழிந்ததாகவும், ஆனால் அதற்கு அப்போது 35 பட்டியலின எம்.எல்.ஏ.க்கள் இருந்தும் அவர்கள் அதற்கு ஒத்துவரவில்லை என்றும், எதிர்ப்பு தெரிவித்ததாகவும், அதே சமயம், தனது இந்த யோசனைக்கு அப்போது விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் வரவேற்பு தெரிவித்ததாகவும் புதுக்கோட்டையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய திவாகரன் கூறிய தகவல் தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பையும் விவாதத்தையும் கிளப்பி உள்ளது.
திவாகரனின் இந்த கருத்து குறித்து அப்போதையை அதிமுக பட்டியலின எம்.எல்.ஏ-க்கள் யாராவது வாய் திறந்தால்தான் உண்மை என்ன என்பது தெரிய வரும்.
தன்னிச்சையாக செயல்பட்டிருக்க முடியுமா?
இந்த நிலையில் இது குறித்துப் பேசும் அரசியல் விமர்சகர்கள், ” ஒருவேளை திவாகரன் கூறியபடி பட்டியலினத்தைச் சேர்ந்த ஒருவர் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தாலும், தன்னிச்சையாக அவரால் செயல்பட்டிருக்க முடியாது. அவர் சசிகலா குடும்பத்தினரின் கட்டுப்பாட்டுக்குள் தான் இருந்திருக்க முடியும். மேலும் ஆட்சி அதிகாரத்தின் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளுக்கும் அவரையே பலிகடாவாக ஆக்கி இருப்பார்கள். இதனால் எழும் விமர்சனங்கள் ஒட்டுமொத்த பட்டியலினத்தின் மீதுதான் சுமத்தப்பட்டிருக்கும். ஒரு வகையில், அப்படி பட்டியலினத்தவர் ஒருவர் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்படாமல் இருந்தது நல்லதுதான்” என்கின்றனர்.
ஆனால் இன்னொரு தரப்பினரோ, ” ஒருவேளை திவாகரன் சொன்னபடி அப்போது பட்டியலினத்தவர் ஒருவர் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தால், அது அந்த சமூகத்தினருக்கு கிடைத்த ஒரு அங்கீகாரமாக இருந்திருக்கும். ஒருவேளை 2021 தேர்தலில் கூட ‘தலித் முதல்வர்’ பிரசாரம் முன்வைக்கப்பட்டு, திமுக உள்ளிட்ட மற்ற கட்சிகளுக்கு அரசியல் அழுத்தங்கள் ஏற்பட்டிருக்க வாய்ப்பு உண்டாகி இருக்கலாம்” என்கின்றனர்.
எது எப்படியோ… தமிழக அரசியலில் ‘தலித் முதல்வர்’ விவகாரத்துக்கு தனது இன்றைய பேட்டி மூலம், திவாகரன் திரி கொளுத்திவிட்டார் என்றே சொல்ல வேண்டும்!