Amazing Tamilnadu – Tamil News Updates

இனி, ஆதார் அட்டை கையில் வேண்டாம்… QR குறியீடே போதும்!

ந்தியாவில் ஆதார் அடையாள அட்டை ஒரு முக்கிய ஆவணமாக இருந்து வருகிறது. அந்த வகையில், ஆதார் அட்டையின் நகல்களை பல இடங்களில் கொடுப்பதால், தகவல் திருட்டு, மோசடி மற்றும் தவறாக பயன்படுத்தப்படும் அபாயம் இருந்து வருகிறது.

மேலும் வங்கி பயன்பாடு, பயணம், அரசு சேவைகளுக்கும், திட்டங்களுக்கு விண்ணப்பிக்கவும் பொதுமக்கள் தங்களது ஆதார் அட்டையை கையில் எடுத்துச் செல்ல வேண்டிய அவசியமோ அல்லது அதனை நகல் எடுத்து வைத்திருக்க வேண்டிய அவசியமோ உள்ளது.

இந்த நிலையில், இந்த சிரமங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக புதிய ஆதார் செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், இன்று நடைபெற்ற ஆதார் சம்வாத் நிகழ்ச்சியில், முக அடையாளம் (Face ID) மற்றும் QR குறியீடு அம்சங்களுடன் கூடிய புதிய ஆதார் செயலியை அறிமுகப்படுத்தினார்.

புதிய செயலியில், நீங்கள் தேவையான தகவலை மட்டுமே பகிரலாம். ஒரே ஒரு தட்டலில், எந்த தகவலை பகிர வேண்டும், எதை மறைக்க வேண்டும் என்பதை நீங்களே தீர்மானிக்கலாம். உதாரணமாக, உங்கள் ஆதார் எண்ணை மட்டும் பகிர வேண்டுமா அல்லது முழு விவரங்களையும் தர வேண்டுமா என்பது உங்கள் கட்டுப்பாட்டில் உள்ளது. இதனால், ஆதார் தரவு கசிவு மற்றும் போலியாக பயன்படுத்துவது ஆகியவை தடுக்கப்படுகின்றன.

புதிய ஆதார் செயலியை அறிமுகப்படுத்திய அஸ்வினி வைஷ்ணவ்”

QR குறியீடே போதும்

மேலும், “ஆதார் சரிபார்ப்பு இனி UPI பணப்பரிமாற்றம் போல எளிது” என்று அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறி உள்ளார். QR குறியீட்டை ஸ்கேன் செய்து, முக அடையாளத்தை உறுதி செய்தால் போதும் – சில நொடிகளில் சரிபார்ப்பு முடிந்துவிடும். இது, அரசு சேவைகள், வங்கி பரிவர்த்தனைகள் மற்றும் பிற அடையாள சரிபார்ப்புகளை விரைவாகவும் பாதுகாப்பாகவும் மேற்கொள்ள உதவும். இந்தியாவின் டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பின் (DPI) மையமாக ஆதார் இருப்பதால், இந்த செயலி அரசு திட்டங்களை மக்களுக்கு எளிதாக கொண்டு சேர்க்கும்.

ஹோட்டல்களில் செக்-இன் செய்யும்போதோ, கடைகளில் பதிவு செய்யும்போதோ, பயணத்தின்போதோ ஆதார் நகலை சமர்ப்பிக்க வேண்டிய அவசியம் இல்லை. “ஆதார் இப்போது 100% டிஜிட்டல் மற்றும் பாதுகாப்பானது.”இது மக்களுக்கு வசதியை மட்டுமல்ல, தனியுரிமையையும் உறுதி செய்கிறது” எனத் தெரிவித்துள்ளார் அமைச்சர் வைஷ்ணவ்.

எப்போது அமல்?

தற்போது, இந்த செயலி பீட்டா பயனர்களுக்கு (Beta Users) மட்டும் வழங்கப்பட்டுள்ளது. ஆதார் சம்வாத் நிகழ்ச்சியில் பதிவு செய்தவர்கள் இதை முதலில் பயன்படுத்துகின்றனர். பீட்டா பயனர்களிடமிருந்து கருத்துக்களை பெற்று, தேவையான மாற்றங்களைச் செய்த பிறகு, இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) இதை பொதுமக்களுக்கு விரைவில் வெளியிட திட்டமிட்டுள்ளது. அதுவரை, பொதுமக்கள் தங்களது ஆதார் விவரங்களை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என்றும், நகல்களை தேவையில்லாமல் பகிர்வதை தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இனி, உங்கள் ஆதார் உங்கள் கையில் – பாதுகாப்பாகவும், எளிதாகவும்!

Exit mobile version