தொகுதி மறுசீரமைப்பு பிரச்னை: தென் மாநில முதலமைச்சர்களை அணி திரட்டும் ஸ்டாலின்!

மத்திய அரசு செயல்படுத்த திட்டமிட்டுள்ள தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கையால் தென்மாநிலங்கள் பாதிக்கப்படும் என்றும், தமிழகம் தனது 39 நாடாளுமன்ற தொகுதிகளில் 8 தொகுதிகளை இழக்க நேரிடும் என்றும் கூறி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.
மேலும் இது தொடர்பாக விவாதிப்பதற்காக கடந்த 5 ஆம் தேதியன்று அனைத்து கட்சி கூட்டத்தை முதலமைச்சர் கூட்டி இருந்தார். அப்போது தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தீர்மானத்திற்கு கூட்டத்தில் பங்கேற்ற அனைத்து கட்சியினரும் ஆதரவு தெரிவித்தனர். அதில் ஒரு தீர்மானத்தில், தென் மாநிலங்களில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட கட்சிகளின் பிரதிநிதிகள் அடங்கிய கூட்டு நடவடிக்கை குழு ஒன்றை அமைப்பது என்றும், அதற்காக முறையான அழைப்பை கட்சிகளுக்கு அனுப்பி வைப்பது என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
தென் மாநில முதலமைச்சர்களுக்கு கடிதம்
அதன்படி, தென் மாநில பிரதிநிதிகள் அடங்கிய கூட்டு நடவடிக்கை குழு தொடர்பான ஆலோசனை கூட்டம் மார்ச் 22 ஆம் தேதி நடக்கவுள்ளது. இதனையொட்டி, இக்கூட்டத்தில் பங்கேற்க வருமாறு அழைப்புவிடுத்து தென் மாநில முதலமைச்சர்கள், முன்னாள் முதலமைச்சர்கள், கட்சித் தலைவர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
” 2021 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட வேண்டிய மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி தாமதமானதால், தொகுதி மறுவரையறை முதலில் 2031 மக்கள் தொகை கணக்கெடுப்புக்குப் பிறகு எதிர்பார்க்கப்பட்டது. எதிர்பார்த்ததைவிட முன்னதாகவே நடைபெறக்கூடும் எனத் தற்போது தெரியவருகிறது., அதனால் மாநில நலன்களைப் பாதுகாக்க மிகக் குறைந்த கால அவகாசமே உள்ளது.
தொகுதி மறுவரையறை நடக்குமா என்பதல்ல கேள்வி. ஆனால் அந்த வரையறை எப்போது நடக்கும். அப்படி நடக்கும்போது. இந்திய நாட்டின் முன்னுரிமைத் திட்டங்களுக்குச் சிறந்த பங்களிப்பை வழங்கிய மாநிலங்களின் செயலுக்கு மதிப்பளிக்கப்படுமா என்பதுதான் கேள்வி.

‘நியாயமற்ற தண்டனை’
2026 ஆம் ஆண்டுக்குப் பிறகு. அடுத்த மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி தொகுதி மறுவரையறை செய்யப்பட்டால், தற்போதுள்ள நிலை பாதிப்புக்குள்ளாகும் என்றும், தங்கள் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தி, சிறந்த நிர்வாகக் குறியீடுகளை அடைந்த மாநிலங்கள் நாட்டின் கொள்கைகளை வரையறுக்கும் நாடாளுமன்றத்தில் குறைக்கப்பட்ட பிரதிநிதித்துவத்தை எதிர்கொண்டு, நியாயமற்ற ஒரு தண்டனையைப் பெற நேரிடும்.
அவ்வாறு அது செயல்படுத்தப்பட்டுவிட்டால், அதனால் ஏற்படும் ஜனநாயக ஏற்றத்தாழ்வு பல ஆண்டுகளுக்கு நீடிக்கும். இது நமது மாநில மக்களின் நலன்களுக்காக நாடாளுமன்றத்தில் வாதிடுவதற்கும். மாநிலத்திற்குரிய முக்கிய வளங்களைப் பாதுகாப்பதற்கும், தேசிய அளவில் மேற்கொள்ளப்படும் முக்கியமான முடிவுகளில் நமது குரலை ஒலிக்கச் செய்வதற்குமுள்ள திறனைக் குறைத்துவிடும். நாங்கள் தொகுதி மறுவரையறைக்கு எதிரானவர்கள் அல்ல. தங்கள் தேசியக் கடமைகளை நிறைவேற்றும் மாநில அரசுகளுக்கு எதிராக இந்த தொகுதி மறுவரையறை உறுதிப்பாட்டுடன், ஒரு கூட்டு நடவடிக்கைக் குழுவை அமைக்க வேண்டும்.
இந்தியா முழுவதும் இதே அச்சுறுத்தலை எதிர்கொள்ளக்கூடிய அனைத்து மாநிலங்களையும் அணுக அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. இந்தப் பிரச்சினை தனிப்பட்ட மாநிலத்தின் பிரச்சினைக்கு அப்பாற்பட்டது. நாடாளுமன்றத்தில் நமது தற்போதைய பிரதிநிதித்துவத்தை சதவீத அடிப்படையில் பாதுகாத்திடும் வகையில் அதற்கான தீர்வுகளை நாம் இணைந்து உருவாக்கவேண்டும்.

‘ஒத்துழைக்க கோருகிறேன்…’
சதவீத அடிப்படையில் நமது தற்போதைய பிரதிநிதித்துவத்தை இழக்காமல் நாட்டின் முன்னேற்றத்தைக் கட்டியெழுப்புவதில் நமது பங்கை உறுதியளிக்கும் வகையில் தொகுதி மறுவரையறை செயல்முறையைப் செயல்படுத்த வேண்டும். இது தொடர்பாக, இரண்டு கோரிக்கைகளை விடுக்கிறேன். தெற்கில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா மற்றும் கர்நாடகா, கிழக்கில் மேற்கு வங்கம் மற்றும் ஒடிசா; வடக்கில் பஞ்சாப் ஆகியவற்றை உள்ளடக்கிய கூட்டு நடவடிக்கைக் குழுவில் சேர தங்களின் முறையான ஒப்புதல்.
கூட்டு நடவடிக்கைக் குழுவில் பணியாற்றவும், ஒருங்கிணைந்த செயல் திட்டத்தை வகுக்கவும் தங்கள் கட்சியிலிருந்து ஒரு மூத்த பிரதிநிதியை நியமித்தல்
மேற்குறிப்பிட்ட ஒருங்கிணைந்த செயல்பாட்டின் முதல் கட்டமாக, மார்ச் 22, 2025 அன்று சென்னையில் ஒரு தொடக்கக் கூட்டத்தை நடத்த முன்மொழிகிறேன். நமது கூட்டு முயற்சியை முன்னெடுத்துச் செல்ல இந்தத் தருணத்தில் தங்களது ஒத்துழைப்பைக் கோருகிறேன். மார்ச் 22, 2025 அன்று சென்னையில் தங்கள் வருகையை எதிர்பார்க்கிறேன்” எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.