நாடாளுமன்றத் தொகுதிகளை மறுசீரமைப்பு செய்யும் மத்திய அரசின் திட்டத்துக்கு தமிழகத்தில் பெரும்பாலான கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இது தொடர்பாக விவாதிப்பதற்காக தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று சென்னையில் கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி இருந்தார். இதில் கலந்துகொள்ள திமுக, அதிமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சி, பாமக, தேமுதிக, தவெக உட்பட 63 கட்சிகள், இயக்கங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் 58 கட்சி பிரதிநிதிகள் பங்கேற்றனர். பாஜக., நாம் தமிழர் கட்சி, தமிழ் மாநில காங்கிரஸ், புதிய தமிழகம் மற்றும் புதிய நீதிக்கட்சி உள்ளிட்ட 5 கட்சிகள் மட்டும் பங்கேற்கவில்லை.
கூட்டத்தில், முதலில் முதலமைச்சர் ஸ்டாலின் தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான வரைவு தீர்மானத்தை முன்மொழிந்து உரையாற்றினார். அதனைத் தொடர்ந்து கூட்டத்தில் பங்கேற்ற கட்சிகளின் பிரதிநிதிகள், தங்கள் தரப்பு கருத்துகளை எடுத்துரைத்தனர்.
விஜய் எழுப்பும் கேள்விகள்…
இந்த நிலையில், தொகுதி மறுசீரமைப்பு திட்டம் தொடர்பாக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர், நாடாளுமன்றத் தொகுதிகளை மறுசீரமைப்பு செய்வதால் என்ன பயன் ஏற்பட்டுவிடப் போகிறது எனக் கேட்டுள்ளதோடு, நாட்டுக்கு தற்போதைய பிரச்னைகளான விலைவாசி உயர்வு, வேலையின்மை, தரமான கல்வி மற்றும் சுகாதார வசதியின்மை, சாலை மற்றும் குடிநீர் வசதியின்மை போன்றவற்றில் தான் கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ” புதிதாக மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, அதன் அடிப்படையில் மட்டுமோ அல்லது புதிய மக்கள் தொகையை ஒரு முக்கிய அளவுகோலாகக் கொண்டோ நிகழ்த்தப்படும் நாடாளுமன்றத் தொகுதி மறுசீரமைப்பில் தென் மாநிலங்களுக்கான பிரதிநிதித்துவம் வெகுவாகக் குறையும் ஆபத்து உள்ளது.

புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தின் மக்களவையில் 888 இருக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதைப் பார்த்தால் ஒன்றிய அரசு நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கையை உயர்த்தும் நீண்டகாலத் திட்டத்தில் இருந்ததாகவே தெரிகிறது. அப்படி நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரித்து, ஒருவேளை தென் மாநிலங்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில், ஒவ்வொரு மாநிலத்திற்கும் தற்போதுள்ள விகிதாச்சார அடிப்படையிலேயே தொகுதிகளைப் பிரித்துக் கொடுத்தாலும் அதுவும் ஓர் உகந்த முன்னெடுப்பாக அமையாது.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் அலங்கார பொம்மைகளா?
ஏனென்றால், தற்போது 543 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கும்பொழுதே அனைத்து உறுப்பினர்களுக்கும் கேள்வி நேரங்களில் கேள்வி கேட்க அனுமதி கிடைப்பதில்லை; Ballot முறையிலேயே கேள்வி கேட்கத் தேர்ந்தெடுக்கப்பட்டு வாய்ப்பு வழங்கப்படுகிறது. அப்படியே வாய்ப்பு வழங்கப்பட்டாலும் பெரும்பாலும் சில நிமிடங்களுக்கு மேல் பேச அனுமதி மறுக்கப்படுகிறது. இத்தகைய சூழ்நிலையில் மேலும் உறுப்பினர்களைச் சேர்த்துக்கொண்டு அவர்கள் நாடாளுமன்ற வளாகத்தில் வெறும் அலங்கார பொம்மைகளாக இருப்பதில் என்ன பலன்?
மக்களின் இன்றைய அடிப்படைப் பிரச்னைகள், விலைவாசி உயர்வு, வேலையின்மை, தரமான கல்வி மற்றும் சுகாதார வசதியின்மை, சாலை மற்றும் குடிநீர் வசதியின்மை போன்றவை தான்.‘நாடாளுமன்ற / சட்டமன்ற உறுப்பினர்களின் பற்றாக்குறை’ என்பது மக்கள் பிரச்னையே இல்லை. மிக முக்கியமான ஜனநாயகம் சார்ந்த பல பிரச்சினைகள் நாட்டில் உள்ளது. அவற்றைக் களைவதுதான் நம் முதன்மைப் பணியாக இருக்க வேண்டும்.
இந்த மிக முக்கியமான தொகுதி மறுசீரமைப்பு விஷயத்தில் தமிழக வெற்றிக் கழகம், தமிழகத்தின் அனைத்து அரசியல் கட்சிகளுடனும் தோளோடு தோள் நின்று இணைந்து போராடும்.
அம்பேத்கர் அவர்கள் வழங்கிய இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை விழுமியங்களில் ஒன்று Federalism எனப்படுகிற ‘கூட்டாட்சித் தத்துவ முறை’. ஆதலால் ஒன்றிய அரசு அனைத்து மாநிலங்களின் ஒருமித்த கருத்தின் அடிப்படையிலேயே இந்த மறுசீரமைப்பு பற்றிய முடிவை எடுக்க வேண்டும் என்று தமிழக வெற்றிக் கழகம் வலியுறுத்துகிறது. இதுவே நம் அரசியல் சாசனத் தந்தை அம்பேத்கர் அவர்களுக்கு நாம் செய்யும் உரிய மரியாதை ஆகும்” என வலியுறுத்தி உள்ளார்.