தமிழக மொழிக் கொள்கை… ஆளுநருக்கு கேரளாவில் இருந்து வந்த பதிலடி!
சென்னையில் ‘டிடி தமிழ்’ தொலைக்காட்சி அலுவலகத்தில் நேற்று ‘இந்தி மாதம்’ கொண்டாட்ட நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி பங்கேற்றார்.
விழாவின் தொடக்கத்தில் ‘தமிழ்த்தாய் வாழ்த்து’ இசைக்கப்பட்டது. அப்போது, வாழ்த்திலுள்ள ‘தெக்கணமும் அதில் சிறந்த திராவிடநல் திருநாடும்’ எனும் வரிகள் பாடப்படவில்லை. இதில் ‘திராவிடம்’ என்ற சொல் இடம்பெற்றுள்ளதால், ஆளுநரின் அறிவுறுத்தலின் பேரிலேயே திட்டமிட்டே அந்த வரிகள் தவிர்க்கப்பட்டதாக சர்ச்சை எழுந்தது.
இதற்கு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து இருந்தனர். இது ஒருபுறமிருக்க, மேற்கூறிய விழாவில் ஆளுநர் ரவி பேசுகையில், “தமிழ்நாட்டில் மக்கள் மொழிவாரியாக மக்கள் தனிமைப்பட்டுளார்கள். தமிழ்நாட்டில் தான் மட்டும்தான் மலையாளம், கன்னடம், தெலுங்கு என எந்தவொரு பிற இந்திய மொழியையும் அனுமதிப்பதில்லை” கூறியிருந்தார். இதற்கும் கண்டனங்கள் எழுந்தன.
இந்த நிலையில், தமிழக ஆளுநரின் இந்த பேச்சுக்கு தமிழகம் தாண்டி கேரளாவிலிருந்தும் பதிலடி வந்துள்ளது.
இது குறித்து கேரளா காங்கிரஸ் கட்சியின் சமூக வலைத்தள பக்கத்தில், “அன்புள்ள ஆளுநர் ஆர்.என்.ரவி,வட இந்திய மாநிலங்களில் கற்பிக்கப்படும் மூன்று மொழிகள் என்ன ? பீகார், ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம் மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் உள்ள பள்ளிகளில் மலையாளம், தமிழ், கன்னடம், தெலுங்கு, ஒடியா, பெங்காலி ஆகிய மொழிகளில் ஏதாவது ஒன்றைக் கற்பிக்கிறார்களா?
தமிழக மக்கள் கேரளாவுக்கு வந்து தொடர்புகொள்வதில் எந்த சிரமமும் இல்லை. நாங்களும் தமிழ்நாட்டுக்கு சென்று தொடர்பு கொள்வதில் எங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. இங்கு யாரும் தனிமைப்படுத்தப்படவில்லை மற்ற மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் தமிழக மக்கள் எந்தளவுக்கு வெற்றி பெற்றுள்ளார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா?
இவ்வளவு காலம் தென்னிந்தியாவில் வேலை பார்த்தும் எத்தனை தென்னிந்திய மொழிகள் படிக்க, எழுத, பேச கற்றுக்கொண்டீர்கள்? “எனக் கூறப்பட்டுள்ளது.