Amazing Tamilnadu – Tamil News Updates

அமெரிக்க பயணத்துக்கு தயாராகும் முதலமைச்சர் ஸ்டாலின்… மத்திய அரசு அனுமதி… ஏற்பாடுகள் தீவிரம்!

மிழகத்தை 2030 ஆம் ஆண்டுக்குள் 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்ற வேண்டும் என்ற இலக்கை நிர்ணயித்துள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அந்த இலக்கை நிறைவேற்றுவதற்கான பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாகத்தான், கடந்த ஜனவரி மாதம் 7,8 ஆகிய தேதிகளில், சென்னையில் உலக முதலீட்டாளர் மாநாடு நடைபெற்றது.

இந்த மாநாட்டில் சுமார் ரூ. 6.64 லட்சம் கோடி முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டது. பல நாடுகளை சேர்ந்த நிறுவனங்களும் தமிழகத்தில் முதலீடு செய்ய விருப்பம் தெரிவித்தன. இந்த முதலீடுகள், தமிழகத்திற்கு வருவதன் மூலமாக 26,90,657 வேலைவாய்ப்புகள் உருவாகும் என்றும், இதில் 14,54,712 நபர்களுக்கு நேரடி வேலைவாய்ப்பும் கிடைக்கவும் வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், கடந்த ஜூன் மாதம் சட்டப்பேரவையில் தொழில்துறை மானிய கோரிக்கையின்போது பேசிய தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா , இந்த ஒப்பந்தங்களில் இதுவரை 379 ஒப்பந்தங்கள் செயல்பாட்டுக்கு வந்துள்ளதாகவும், தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்கான அடுத்தகட்ட நடவடிக்கையாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் அமெரிக்கா செல்ல இருப்பதாகவும், இப்பயணத்திற்கு பிறகு அமெரிக்காவில் உள்ள பெரிய நிறுவனங்கள் தமிழகத்தில் முதலீடு செய்யும் என்றும் தெரிவித்திருந்தார்.

ஆகஸ்ட் 22 ல் அமெரிக்கா பயணம்

அதன்படி முதலமைச்சரின் அமெரிக்க பயணத்துக்கான திட்டங்கள், அவர் அமெரிக்காவில் யார் யாரை சந்தித்துப் பேச வேண்டும், எந்தெந்த தொழில் நிறுவனங்களுடன் முதலீடு தொடர்பான சந்திப்பு மற்றும் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது உள்ளிட்ட விவரங்களைத் தயார் செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

மத்திய அரசு அனுமதி

இதனையடுத்து, வருகிற சுதந்திர தினத்தன்று 15 ஆம் தேதி கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றிய பிறகு முதலமைச்சர் அமெரிக்கா செல்வது என்று முடிவாகி உள்ளது. அதன்படி 15 நாள் பயணமாக, ஆகஸ்ட் 22 ஆம் தேதி அன்று அமெரிக்கா புறப்படுவது எனப் பயணத்திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. விதிமுறைப்படி, ஒரு மாநில முதலமைச்சர் அரசு முறை பயணமாக வெளிநாடு செல்ல திட்டமிட்டால், அதற்கு முன்பு அது குறித்து மத்திய அரசிடம் தெரிவித்து, அனுமதி பெற வேண்டும். அதன்படி முதலமைச்சரின் அமெரிக்க பயணத்துக்கு மத்திய அரசிடம் அனுமதி கோரப்பட்டது. அதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கூகுள் CEO சுந்தர் பிச்சை

மத்திய அரசின் அனுமதியைத் தொடர்ந்து, அமெரிக்க தூதரகத்தில் விசாவுக்கு விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கும் தூதரகம் அனுமதி அளித்துள்ளதாக தெரிகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா மற்றும் தொழில்துறை செயலாளர், முதலமைச்சரின் செயலாளர் என ஒரு குழு உடன் செல்கிறது.

முதலமைச்சர் தனது அமெரிக்கா பயணத்தின்போது, முதலீட்டாளர்கள், அமெரிக்கா வாழ் தமிழர்கள் மற்றும் கூகுள் நிறுவனத்தின் சி.இ.ஓ. சுந்தர் பிச்சை உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களையும் சந்தித்து பேச இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமைச்சரவையில் மாற்றமா?

இதனிடையே முதலமைச்சரின் அமெரிக்க பயணத்துக்கு முன்னதாக, அமைச்சர் உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப்படலாம் என்றும் செய்திகள் வெளியான நிலையில், உதயநிதி அதை மறுத்திருந்தார். அதே சமயம் தமிழக அமைச்சரவையில் சில மாற்றங்கள் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதே சமயம், முதலமைச்சரின் அமெரிக்க பயணத்தின்போது, அவர் அங்கிருந்தபடியே அரசு நிர்வாகங்களை கவனிப்பார் என்றும், பொறுப்புகளை யாரிடமும் ஒப்படைக்க மாட்டார் என்றும் கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Exit mobile version