இந்தியாவை பொறுத்தவரை 21 வயது நிறைவடைந்த ஆண்களுக்கும், 18 வயது நிறைவடைந்த பெண்களுக்கும் மட்டுமே திருமணம் முடிக்க வேண்டும் என்பது சட்டம். அதை மீறி நடத்தினால், அது குழந்தை திருமணமாக கருதப்படும். சட்டப்படி குற்றமும் என்பதால், .குழந்தை திருமணங்களுக்கு உடந்தையாக இருப்போருக்கு அபராதமும், தண்டனையும் விதிக்கப்படும் ஆனாலும், தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் பரவலாக குழந்தை திருமணங்கள் ஆங்காங்கே தொடரத்தான் செய்கின்றன.
அந்த வகையில், தமிழ்நாடு முழுவதும் 2020 முதல் 2023 ஆம் ஆண்டு வரை, குழந்தை திருமணங்கள் குறித்து 13,665 புகார்கள் வந்ததாகவும், இந்த புகார்களின் அடிப்படையில், 10,551 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல் அறியும் உரிமை ( RTI) சட்டத்தின் கீழ் தெரியவந்துள்ளது.
இதில் அதிகபட்ச புகார்கள் வந்த மாவட்டங்களின் பட்டியலில், தேனி மாவட்டம் முதலிடத்தில் உள்ளது. அந்த மாவட்டத்தில், கடந்த 4 ஆண்டுகளில் 872 புகார்கள் வந்துள்ளன. 784 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன.தொடர்ந்து திண்டுக்கல்லில் 862 புகார்கள் பெறப்பட்டு, 685 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன.
அதேபோன்று சேலத்தில் 838 புகார்கள் பெறப்பட்டு, 713 குழந்தை திருமணங்கள் தடுக்கப்பட்டுள்ளன. நாமக்கல் மாவட்டத்தில் 774 புகார்களில் 425 குழந்தை திருமணங்கள் தடுக்கப்பட்டுள்ளன. திருவண்ணாமலை மாவட்டத்தில் 632 புகார்களில், 510 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. மேலும், 3114 குழந்தை திருமணங்கள் நடந்ததாக புகார்கள் எழுந்த நிலையில், நேரில் சென்று ஆய்வு செய்தபோது, அதற்கான எந்த ஆதாரங்களும் கிடைக்கவில்லை. எனத் தெரியவந்துள்ளது.
காரணம் என்ன?
இத்தகைய குழந்தை திருமணங்களுக்கு வறுமை, விழிப்புணர்வு இன்மை, ருமணத்தின் மூலம் சொந்தம் விட்டுப்போய் விடக்கூடாது, வயது முதிர்ந்தோரின் கடைசி ஆசை போன்றவையே குழந்தை திருமணங்களுக்கு காரணமாக உள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
பின்விளைவுகள்
குழந்தை திருமணங்களால், பிரசவ மரணங்கள், கருக்கலைப்புகள், ஆரோக்கியமற்ற நிலை உள்ளிட்ட உடல் பிரச்னைகள் ஏற்படும். மேலும் ககுடும்ப வன்முறைகளும் தற்கொலை முயற்சிகளும் பெருகும். க ல்வியறிவற்ற சந்ததிகள் உருவாகும் என்று மருத்துவர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
அரசு நடவடிக்கைகள் என்ன?
குழந்தை திருமண தடுப்பு அதிகாரியாக மாவட்ட சமூக நல அலுவலரை தமிழக அரசு நியமித்துள்ளது. குழந்தை திருமணங்களை தடுத்து நிறுத்தவும், அவற்றை ரத்து செய்யுமாறு நீதிமன்றத்தை நாடவும், பாதிக்கப்பட்ட குழந்தைகளைப் பாதுகாக்கவும் பராமரிக்கவும் இவருக்கு அதிகாரம் உள்ளது. கிராமங்களில் குழந்தை திருமணங்களை தடுக்க, ஊராட்சி மன்றத் தலைவர்கள் தலைமையிலான மத்திய குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும், பள்ளிகளில் மாணவ மாணவிகளின் இடை நிற்றலை தவிர்க்கவும், உயர் கல்வியை ஊக்குவிக்கும் விதமாகவும் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இவற்றில், முதலமைச்சரின் காலை உணவு திட்டம், அரசுப் பள்ளிகளில் பயின்று உயர் கல்விக்கு செல்லும் மாணவிகளுக்கு மாதம் ரூ. 1000 வழங்கும் ‘ புதுமை பெண் ‘ திட்டம் போன்றவற்றால், அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ள து. அதேபோன்று உயர் கல்வி பயிலும் மாணவிகளின் எண்ணிக்கை 49.5% ஆக அதிகரித்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கிறன.