சென்னை புறநகர் மின்சார ரயில் ரத்து அறிவிப்பில் மாற்றம்!
தாம்பரம் ரயில்வே யார்டில் மேம்பாட்டு பணிகள் நடைபெற உள்ளதால், இன்று முதல் ஆகஸ்ட் 14 ஆம் தேதி வரை சென்னை கடற்கரை-தாம்பரம்- செங்கல்பட்டு இடையே 55 மின்சார ரயில்கள், இரு மார்க்கங்களிலும் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்திருந்தது.
இது பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், ரத்து செய்யப்பட்ட ரயில்களுக்கு பதிலாக சிறப்பு ரயில்கள் சென்னை கடற்கரையில் இருந்து பல்லாவரம் வரை இயக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
பகலில் வழக்கம்போல் இயங்கும்
இந்த நிலையில், இந்த அறிவிப்பில் திடீரென மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ரயில் சேவைகள் ரத்து செய்யும் முடிவு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் சென்னை கடற்கரை- தாம்பரம் – செங்கல்பட்டு வழித் தடத்தில் பகல் நேரத்தில் மின்சார ரயில் சேவை வழக்கம்போல இயக்கப்படும் என்றும், இரவு நேரத்தில் மட்டும் 10.30 மணி முதல் அதிகாலை 2.30 மணி வரை புறநகர் ரயில் சேவைகள் முன்பு அறிவித்தது போலவே இயங்காது என்றும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
அதற்கு மாறாக சிறப்பு பயணிகள் ரயில்கள் மட்டுமே இயக்கப்படும். மேலும், வரும் சனி (27 ) மற்றும் ஞாயிற்றுக்கிழமை (28) ஆகிய நாட்களில் புறநகர் ரயில் சேவைகள் காலை மற்றும் இரவு நேரங்களில் ரத்து செய்யப்படுகிறது.
அதேபோன்று ஆகஸ்ட் 3 முதல் 14 ஆம் தேதி வரை புறநகர் ரயில் சேவைகள் சென்னை கடற்கரை – தாம்பரம் – செங்கல்பட்டு வழித்தடத்தில் முன்பு அறிவித்ததுபோலவே ரத்து செய்யப்படுகிறது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.