வடகிழக்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கிய நிலையில், நேற்று முன்தினம் இரவில் இருந்து சென்னை உள்ளிட்ட பிற மாவட்டங்களில் விட்டு விட்டு கனமழை பெய்து வந்தது.
மேலும் சென்னைக்கு இன்று அதீத கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது. இதனால், அரசு சார்பில் தாழ்வான பகுதிகளில் படகுகள், பேரிடர் மீட்பு குழு என அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கப்பட்டிருந்தன. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிபேட்டை மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டது. ஆனால் நேற்றிரவு முதலே மழை குறைந்த நிலையில், இன்று காலையில் நகரின் சில இடங்களில் இலேசான மழை காணப்பட்டது. பின்னர் அதுவும் நின்றுபோன நிலையில், நன்றாக வெயில் அடிக்கத் தொடங்கி விட்டது.
இதனால், கனமழை எச்சரிக்கையால் அச்சத்தில் இருந்த சென்னை மக்கள் “அப்பாட…” என நிம்மதி பெருமூச்சு விடுகின்றனர்.
மழை குறைந்தது ஏன்?
வங்க கடலில் நிலை கொண்ட காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னை அருகே கடக்காமல், ஆந்திராவை நோக்கி நகர்வதால் அதி கனமழைக்கு வாய்ப்பு குறைந்துள்ளது.
இது குறித்து தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான், “சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மக்களுக்கு ஒரு நல்ல செய்தி. அடுத்த சில மணி நேரங்களுக்கு இந்த மாவட்டங்களில் சீரான அளவிலேயே மழை தொடரும்.
சென்னையை ஒட்டி காற்றழுத்த தாழ்வு பகுதி கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் காற்றழுத்த தாழ்வு பகுதி சற்று வடக்கு நோக்கி நகர்த்து ஆந்திராவை நோக்கியுள்ளது. இதனால் சென்னைக்கு அதிகன மழை வாய்ப்பு குறைந்துள்ளது. சாதாரண மழை மட்டுமே இருக்கும்” எனத் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
முடுக்கிவிடப்பட்ட நிவாரண பணிகள்
இதனிடையே தொடர் மழையால் பாதிக்கப்பட்ட சென்னையின் பல்வேறு பகுதிகளிலும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள், நேரில் ஆய்வு செய்து மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை முடுக்கி விட்டனர். அரசு அதிகாரிகள்,மாநகராட்சி பணியாளர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் தீவிரமாக களப்பணி ஆற்றிய நிலையில், தாழ்வான பகுதிகளில் தேங்கிய மழை நீர் வேகமாக வெளியேற்றப்பட்டது. இதனால், இரவில் மழை நீர் சூழ்ந்த சாலைகள் காலையில் பளிச்சென்று காணப்பட்டன.
நிவாரண முகாம்களில் 2,789 பேர் தஞ்சம்
சென்னையில் கனமழை காரணமாக 140 குடிசைகள் பாதிப்படைந்தன. தண்ணீர் தேங்கியுள்ள 715 பகுதிகளில் 512 இடங்களில் தண்ணீர் அகற்றப்பட்டுள்ளதாகவும்,70 நிவாரண முகாம்களில் 2,789 பேர் தங்கி உள்ளனர் என்றும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையினர் தெரிவித்தனர்.
சுரங்கப்பாதைகளில் சீரான போக்குவரத்து
சென்னையில் மொத்தம் உள்ள 21 சுரங்கப்பாதைகளில் தண்ணீர் வெளியேற்றப்பட்டு, வழக்கம்போல் போக்குவரத்து இயக்கப்படுவதாக சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
16 லட்சம் லிட்டர் ஆவின் பால் சப்ளை
சென்னையில் கனமழை எச்சரிக்கையால் வழக்கத்தை விட கூடுதலாக தினமும் 1.5 லட்சம் லிட்டர் ஆவின் பால் வினியோகிக்கப்பட்டுள்ளது.2 நாட்களாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தினமும் 16 லட்சம் லிட்டர் வினியோகிக்கப்பட்டுள்ளதாக ஆவின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அம்மா உணவகங்களில் இலவச உணவு
மழை காரணமாக சென்னையில் தாழ்வான பகுதிகளில் வசிக்கக்கூடிய மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னையில் அம்மா உணவகங்களில் இன்றும் நாளையும் இலவசமாக உணவு வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
ஒரே நாளில் குறைந்த தக்காளி விலை
கடந்த இரு தினங்களாக கனமழை அச்சம் காரணமாக கடைகளில் போட்டி போட்டு பொதுமக்கள் தக்காளி உள்ளிட்ட காய்கறிகளை அள்ளிச் சென்றனர். இதனால் அவற்றின் விலை கிடுகிடுவென அதிகரித்தது.
இந்த நிலையி்ல், மழை குறைந்ததால் சென்னை கோயம்பேடு சந்தைக்கு தக்காளி உள்ளிட்ட பல்வேறு காய்கறிகளின் வரத்து இன்று அதிகரித்தது. இதனால் தற்போது ஒரு கிலோ தக்காளி சந்தையில் ரூ.70 க்கும், சில்லரை விற்பனையில் ரூ.85 வரையும் விற்கப்படுகிறது.கிலோவுக்கு 50 ரூபாய் வரை குறைந்துள்ளதால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.