சென்னை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு நிதி ஒதுக்குவதில் மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு பாரபட்சம் காட்டுவதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உட்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்த நிலையில், கோவையில் இரு தினங்களுக்கு முன்னர் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், சென்னை மெட்ரோ ரயில் திட்டம் மத்திய அரசின் மூலம் மேற்கொள்ளப்பட்டது. ஆனால், சென்னை மெட்ரோ இரண்டாவது பேஸ் திட்டத்தில் 118 கிலோ மீட்டர் 3 லைன் திட்டம். இது மாநில அரசின் திட்டம். 2018 ல் இதனை மாநில அரசு ஒப்புக்கொண்டது. இதற்கு மத்திய அரசின் பங்கு என்பது 10 சதவீதம் தான். இதற்காக வாங்கும் மொத்த கடனும் மாநில அரசு உடையது. இதன் மொத்த மதிப்பு ரூ.63,246 கோடி ஆகும். இதில், ரூ.33,593 கோடி வங்கி கடனில், ரூ.21,560 கோடி பெற்றுத்தரப்பட்டுள்ளது. இதில், தற்போது வரை ரூ.5,780 கோடி மட்டுமே பணி நடந்துள்ளது. பணம் கொடுக்கவில்லை என எப்படிக் கூறலாம்” எனத் தெரிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், நிர்மலா சீதாராமனின் இந்த குற்றச்சாட்டுக்கு விளக்கம் அளித்துள்ள தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, சென்னை மெட்ரோ ரயில் திட்ட விவகாரத்தில் தமிழ்நாடு மாற்றாந்தாய் பிள்ளையாக நடத்தப்படுவதாக பல்வேறு புள்ளி விவரங்களுடன் குற்றம் சாட்டி உள்ளார்.
இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், “நிதியமைச்சர் சென்னை மெட்ரோ ரயில் கட்டம்-II, மாநில பிரிவு திட்டமாக நடைமுறைப்படுத்தப்படுவதாக குறிப்பிட்டுள்ளார். இது குறித்த சரியான விவரத்தை அவருக்கு தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன். 2017ம் ஆண்டு இத்திட்டத்தை ஒரு ஒன்றிய திட்டமாகவே நடைமுறைப்படுத்த தமிழ்நாடு அரசால் பரிந்துரை செய்யப்பட்டு ஒன்றிய அரசுக்கு அனுப்பப்பட்டது.
பின்னர் ஜப்பான் நாட்டின் நிதி வழங்கும் ஜெஐசிஏ நிறுவனம் 2018 ஆம் ஆண்டு இத்திட்டத்தினை விரைந்து துவக்க கடன் ஒப்பந்தத்தை உடனடியாக கையெழுத்திட வேண்டும் என்று கேட்டுக் கொண்டதன் அடிப்படையில், கடன் ஒப்பந்தத்தை குறிப்பிட்ட கால கட்டத்திற்குள் இறுதி செய்ய வேண்டிய சூழ்நிலையில், காலதாமதத்தை தவிர்க்கும் நோக்கில் தமிழ்நாடு அரசே இம்மாபெரும் திட்டத்தை செயல்படுத்தத் தொடங்கியது.
ஒன்றிய நிதி அமைச்சரை நாங்கள் கேட்டுக் கொள்வதெல்லாம் ஒன்றிய அரசின் பொது முதலீட்டுக் குழு பரிந்துரைத்தபடி சென்னை மெட்ரோ ரயிலின் 2-வது கட்ட திட்டத்தினை, ஒன்றிய அரசின் பங்களிப்பு திட்டமாக அங்கீகரித்து ஒன்றிய அரசின் பங்கான ரூ.7,425 கோடியினை உடனடியாக வழங்கிட வேண்டும் என்பதேயாகும். உண்மையில் இதுவரை இத்திட்டத்திற்காக ரூ.18,564 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது.
இதில் தமிழ்நாடு அரசு இதுவரை தனது சொந்த நிதியிலிருந்து செலவிட்டுள்ள தொகை ரூ.11,762 கோடியாகும். வெளிநாட்டு நிதி நிறுவனங்களிடமிருந்து பெற்ற கடன் மூலமாக மேற்கொள்ளப்பட்ட செலவு ரூ.6,802 கோடியாகும். ஆனால் ஒன்றிய அரசின் பங்கான பொது முதலீட்டுக் குழுவினால் பரிந்துரைக்கப்பட்ட ஒன்றிய அரசின் பங்கான ரூ.7,425 கோடியில் ஒரு ரூபாய் கூட ஒன்றிய அரசால் இன்னும் விடுவிக்கப்படவில்லை.
தமிழ்நாடு எவ்வாறு வஞ்சிக்கப்படுகிறது என்பதை இன்னும் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் 2021-22ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையின் போது ஒன்றிய நிதியமைச்சர் இந்தியாவில் நடைபெறும் மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு குறித்து பேசும்போது கொச்சி, சென்னை, பெங்களூர், நாக்பூர் மற்றும் நாசிக் ஆகிய 5 நகரங்களுக்கு உரிய நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று அறிவித்தார்.
இந்த அறிவிப்புக்கு பின்பு பெங்களுருக்கு ரூ.30,399 கோடி, கொச்சி நகரத்திற்கு ரூ.1957 கோடி, நாக்பூர் நகரத்திற்கு ரூ.6708 கோடி, பூனே நகரத்திற்கு ரூ.910 கோடி, தானே நகரத்திற்கு ரூ.12,200 கோடி மதிப்பீடு கொண்ட திட்டங்களுக்கு ஒன்றிய அரசு பங்களிப்பு திட்ட அடிப்படையிலேயே ஒப்புதல் வழங்கி உள்ளது. ஆனால் இதுவரை சென்னைக்கு எவ்வித நிதி ஒதுக்கீடும் ஒன்றிய அரசு செய்யவில்லை.
தமிழ்நாடு ஏன் மாற்றாந்தாய் பிள்ளையாக நடத்தப்படுகிறது? அரசியல் காரணங்களுக்காக பொது மக்கள் பாதிக்கப்படும் வகையில் திட்டங்களை தொய்வுப்படுத்தவும், மாநில அரசிற்கு நிதி நெருக்கடியை ஏற்படுத்தவும் இவ்வாறு செய்யப்படுகிறதோ என்று நமக்கு ஐயம் ஏற்படுகிறது. எனவே தமிழ்நாடு அரசின் நியாயமான கோரிக்கைளை ஏற்று ஏற்கனவே பொது முதலீட்டுக் குழு பரிந்துரைத்துள்ளபடி தனது பங்கான ரூ.7,425 கோடியை ஒன்றிய அரசு வழங்கிட வேண்டும்” என்று வலியுறுத்தி உள்ளார்.