சென்னை மெட்ரோ: 2 ம் கட்ட திட்டம்… முடிவுக்கு வரும் நிதிச் சிக்கல்!
சென்னை மெட்ரோ முதல்கட்ட திட்டத்தின் கீழ் தற்போது விம்கோ நகர் பணிமனை முதல் சென்னை விமான நிலையம் வரையிலான நீல வழித்தடம், சென்னை சென்ட்ரல் முதல் பரங்கிமலை வரையிலான பச்சை வழித்தடம் ஆகியவை பயன்பாட்டில் உள்ளன.
சென்னை மெட்ரோ இரண்டாம் கட்ட திட்டத்தில் மாதவரம் பால் பண்ணை முதல் சிறுசேரி சிப்காட் வரையிலான ஊதா வழித்தடமும், பூந்தமல்லி புறவழிச்சாலை முதல் கலங்கரை விளக்கம் வரையிலான காவி வழித்தடமும், மாதவரம் பால் பண்ணை முதல் சோழிங்கநல்லூர் வரையிலான சிவப்பு வழித்தடமும் அமைக்க திட்டமிடப்பட்டது. 2017 ஆம் ஆண்டு இத்திட்டத்தை ஒரு மத்திய திட்டமாகவே நடைமுறைப்படுத்த தமிழ்நாடு அரசால் பரிந்துரை செய்யப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது. இதற்கான திட்ட மதிப்பீடு ரூ.63,246 கோடியாக மதிப்பிடப்பட்டது.
ஆனால், மத்திய அமைச்சரவை இந்த திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கவே இல்லை. இதனால், மெட்ரோ ரயில் திட்ட செலவுகளை தமிழக அரசே கடும் நிதி நெருக்கடிக்கிடையே ஏற்று தனது சொந்த நிதியில் இருந்து வழங்கி வந்தது. இது தொடர்பாக டெல்லியிலும், சென்னையிலும் பிரதமர் மோடியை சந்தித்த போதெல்லாம் மு.க.ஸ்டாலின் பலமுறை முறையிட்டார்.
தற்போது வரை இத்திட்டத்திற்காக ரூ.18,564 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. இதில் தமிழ்நாடு அரசு இதுவரை தனது சொந்த நிதியிலிருந்து செலவிட்டுள்ள தொகை ரூ.11,762 கோடி. வெளிநாட்டு நிதி நிறுவனங்களிடமிருந்து பெற்ற கடன் மூலமாக மேற்கொள்ளப்பட்ட செலவு ரூ.6,802 கோடி. இந்த நிலையில், மு.க.ஸ்டாலின் கடந்த செப்டம்பர் மாதம் 27 ஆம் தேதி டெல்லி சென்று, பிரதமர் மோடியைச் சந்தித்து பேசினார். அப்போது சென்னை மெட்ரோ ரயில் திட்டம், தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறைக்கு ஒதுக்க வேண்டிய நிதி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினார்.
இதன் பலனாக, நேற்று பிரதமர் மோடி தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் சென்னை மெட்ரோ ரயில் 2 ஆம் கட்ட பணிகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. இதனால், சென்னை மெட்ரோ ரயில் 2 ம் கட்ட பணிகளுக்கான மத்திய அரசின் பங்களிப்பு தொகை விரைவில் விடுவிக்கப்படும் என்பதால், பணிகள் மேலும் வேகமெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
3 வழித்தடங்களும் எவ்வளவு தூரம்?
சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட பணிகளில் 3 வழித்தடங்கள் அமைக்கப்படுகின்றன.
- மாதவரம் பால் பண்ணை முதல் சிப்காட் வரை ஊதா வழித்தடம் – 45.8 கிமீ தூரம்.
- கலங்கரைவிளக்கம் முதல் பூந்தமல்லி வரை காவி வழித்தடம் – 45.8 கிமீ தூரம்.
- மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரை சிவப்பு வழித்தடம் – 47 கிமீ தூரம்.
திட்ட மதிப்பீடு ரூ.63,246 கோடி
மத்திய அரசின் பங்கு ரூ.7,425 கோடி
தமிழ்நாடு அரசின் பங்கு ரூ.22,228 கோடி
கடன் ரூ.33,593 கோடி
தினமும் 13 லட்சம் பயணிகள் பயணிப்பர்
இந்த நிலையில், இந்த திட்டப் பணிகள் முடிவுற்று பயன்பாட்டுக்கு வந்தால், தினமும் சராசரியாக 13 லட்சம் பயணிகள் பயனடைவர். மேலும் முதல் கட்ட மெட்ரோ ரயில் நிலையங்களில் 7 நிலையங்கள், இரண்டாம் கட்ட திட்ட மெட்ரோ ரயில் சேவைகளுடன் ஒருங்கிணைந்ததாக இருக்கும்.
அத்துடன் நகரின் புறநகர் மின்சார ரயில் நிலையங்கள், புறநகர் பேருந்து நிலையங்கள் என 21 முக்கியமான இடங்கள் ஒருங்கிணைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.