Amazing Tamilnadu – Tamil News Updates

வேதனையில் முடிந்த விமானப் படை சாகச நிகழ்ச்சி… நடந்தது என்ன?

ந்திய பாதுகாப்புத் துறையின் முக்கிய அங்கங்களுள் ஒன்றான இந்திய விமானப் படையின் 92 ஆவது துவக்க நாள் விழாவை முன்னிட்டு, விமானப் படையின் தீரத்தை பறைசாற்றும் வண்ணம் சென்னை மெரினா கடற்கரையில் நேற்று வான் சாகச நிகழ்ச்சி அரங்கேறியது. இதை காண லட்சக்கணக்கான மக்கள் திரண்டனர். ரயில் நிலையங்களில் கூட்டம் அலைமோதியது.கிட்டத்தட்ட 10 லட்சத்திற்கும் அதிகமானோர் நேரில் கண்டு ரசித்திருக்கின்றனர்.

‘உலகிலேயே அதிக மக்கள் பங்கேற்ற ராணுவ நிகழ்ச்சி’ என்பதற்காக இந்த நிகழ்ச்சி லிம்கா புக் ஆஃப் ரெக்கார்டிலும் இடம் பெற்றிருக்கிறது. சாகச நிகழ்ச்சி சிறப்பாக நடந்து முடிந்தாலும், ஏற்பாடுகள் மிக மோசமாக இருந்ததாக மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். கடுமையான வெயில் மற்றும் கூட்டம் நெரிசல் காரணமாக மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். கூட்ட நெரிசல் மற்றும் வெயில் காரணமாக ஐந்து பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர். அதே சமயம், இந்திய விமானப்படை கேட்டுக்கொண்டபடி குடிநீர் வசதி உட்பட தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளும் அரசு தரப்பிலான விளக்கங்களும் இங்கே…

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி

வான் சாகச நிகழ்ச்சிக்கான அறிவிப்பு முன்கூட்டியே வெளியான நிலையில், நிர்வாக ரீதியிலான ஏற்பாடுகளும், கூட்டத்தையும்- போக்குவரத்தையும் ஒழுங்கு படுத்துவதற்கு காவல்துறையினரும் போதிய அளவில் இல்லாததால், மக்கள் கடும் கூட்ட நெரிசலில் சிக்கி, குடிநீர் கூட கிடைக்காத நிலை ஏற்பட்டு, மேலும் வெயிலின் தாக்கத்தால் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளதாகவும் வரும் செய்திகள் அதிர்ச்சியும் , மிகுந்த வேதனையும் அளிக்கின்றன.

இதுபோன்ற முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வைக் கூட முறையாக ஒருங்கிணைக்கத் தவறிய நிர்வாகச் சீர்கேடே உருவான விடியா திமுக அரசுக்கு எனது கடும் கண்டனங்கள்.

பாஜக முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்

குளிரூட்டும் வசதியுடன் முன் வரிசையில் அமர்ந்த அதிகார வர்க்கம்…. நிகழ்ச்சி முன்னேற்பாடு குளறுபடியால் தவித்த சாமானிய மக்களை தமிழக அரசு காக்க தவறியது ஏன்? கார் ரேசுக்கு செய்யப்பட்டிருந்த ஏற்பாடுகளை முந்தைய நாளே முன் நின்று கவனித்த இன்றைய துணை முதலமைச்சர் தேசத்தின் பெருமையை பறைசாற்றும் விமான சாகச நிகழ்ச்சியை காண வந்த மக்களை காக்க தவறிய காரணம் என்ன? மாநில உரிமை பேசும் திராவிட மாடல் அரசு மக்கள் உயிரை காக்க தவறியது ஏன்?

விசிக துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா

மெரினா கடற்கரையில் இந்திய விமானப்படையின் ‘வான்படை சாகச’ கண்காட்சியை காண மக்கள் கூட்டம் இவ்வளவு வரும் என்று அரசு ஏன் முன்கூட்டியே கவனிக்க தவறியது.

இவ்வளவு மக்கள் திரளும் போது மக்களை ஒழுங்குபடுத்தவும் அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் முன் ஏற்பாடுகளை தமிழக காவல்துறை,சுகாதாரத்துறை, பொதுப்பணித்துறை, போக்குவரத்து துறை உள்ளிட்டை துறையினர் போர்க்கால அடிப்படையில் முன்ஏற்பாடுகளை செய்திருக்க வேண்டும். அதில் போதிய கவனம் செலுத்தாமல் போனதாலே இந்த உயிர் இழப்புகளும் நடந்துள்ளது.

அரசின் மூத்த நிர்வாகத்தினர் அனைவரும் வான்படை சாகச நிகழ்வை காணும் ஆர்வத்தில் மட்டுமே இருந்துள்ளனர். எந்த அரசு தன்நலன் பேணாது தன் மக்கள் நலனையே பெரிதாக பேணும் அரசோ அந்த அரசே மக்களுக்கான அரசாக விளங்கும்.

அரசின் கவனக்குறைவால் வான் படை சாகச நிகழ்வு சாதனை நிகழ்வாக மாறாமல் வேதனை நிகழ்வாக மாறிவிட்டது. அரசு இனிவரும் காலங்களிலாவது இது போன்ற நிகழ்வுகளில் விழிப்புடன் இருக்க வேண்டும்!

திமுக எம்.பி. கனிமொழி

சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற ராணுவ விமான சாகச நிகழ்ச்சியை காணவந்த பொதுமக்கள் கூட்ட நெரிசலால் அவதியுற்றதும், வெப்ப நிலையும் அதிகமாக இருந்த நிலையில், 5 பேர் உயிரிழந்த செய்தி மிகுந்த வருத்தமும் வேதனையும் அளிக்கிறது. சமாளிக்க முடியாத கூட்டங்கள், இனி கூடுவதையும் தவிர்க்க வேண்டும். இவ்வாறு கனிமொழி எம்.பி. குற்றிப்பிட்டுள்ளார். பாதுகாப்பு பணியில் 8 ஆயிரம் போலீசார் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். ஆனால் 15 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கூடியதால் போக்குவரத்து தடை ஏற்பட்டது.

அமைச்சர் மா.சுப்பிரமணியன்

நேற்று வெயிலின் தாக்கம் மிக கொடூரமாக இருந்தது.5 பேரும் இறந்த பின்னர் தான் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். மருத்துவமனைக்கு அழைத்து சென்ற பின் சிகிச்சை பலனின்றி யாரும் உயிரிழக்கவில்லை.

5 பேர் உயிரிழந்தது மிகுந்த வருத்தம் தருகிறது. இதில் அரசியல் செய்ய நினைக்கக்கூடாது. சாகச நிகழ்ச்சியின்போது வெயிலின் தாக்கத்திற்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 102. விமானப்படை கேட்ட அனைத்து உதவிகளும் செய்யப்பட்டன. ஓமந்தூரார் மருத்துவமனையில் 4 பேரும் ராஜீவ் காந்தி மருத்துவமனையில் 3 பேர் மட்டுமே தற்போது சிகிச்சையில் உள்ளனர்.

குடிநீர், குடை உள்ளிட்டவற்றை எடுத்து வருமாறு ஏற்கனவே அறிவுறுத்தி இருந்தோம். தேவையான அளவு குடிநீர் வசதி, கழிப்பிடம் உள்ளிட்டவற்றை ஏற்பாடு செய்திருந்தோம். அரசு மருத்துவமனைகளில் 4000 படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன. அரசு சார்பில் மருத்துவ முகாம், மருத்துவர்கள், ஆம்புலன்ஸ் என அனைத்தும் தயார் செய்யப்பட்டிருந்தது. 7500 போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். குற்றம் கண்டுபிடிக்க வேண்டும் என்பதற்காக அரசியல் பேசுவதை தவிர்க்க வேண்டும்.

சென்னை மேயர் பிரியா

தலைமைச் செயலாளர் தலைமையில் 2 கூட்டங்கள் நடத்தி பல சேவைகள் துறையை ஒருங்கிணைத்து ஏற்பாடுகள் செய்தோம். மாநகராட்சி சார்பில் ஏற்கனவே கடைகள் அகற்றி, தடுப்புகள் அமைத்து அனைத்து துறையும் ஒருங்கிணைந்து செயலாற்றியது. அவசர மருத்துவ உதவிக்கு 40 ஆம்புலன்ஸ்கள் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. * வெயிலின் தாக்கத்தினால் தான் மயக்கம் ஏற்பட்டது. சம்பவ இடத்தில் நானும் இருந்தேன்.

Exit mobile version