109 கிலோ மீட்டர் நீளம்… 244 பாலங்களுடன் சென்னை – கன்னியாகுமரி தொழில்தட சாலைகள் திறப்பு!

பொருளாதாரத்தின் அங்கங்களான விவசாயம், தொழில், வணிகம், சுற்றுலா போன்ற துறைகளின் மேம்பாட்டிற்கு சாலை உட்கட்டமைப்பு முக்கிய பங்கு வகிக்கிறது. மாநிலத்தில் புதிய சாலைகள் மற்றும் பாலங்கள் அமைத்தல், சாலைகள் மற்றும் பாலங்களை பராமரித்தல், கிராமப்புறங்களுக்கு இணைப்புச் சாலைகள் அமைத்தல் போன்ற முக்கியப் பணிகளை நெடுஞ்சாலைத் துறை மேற்கொண்டு வருகிறது. இதன்மூலம், தமிழ்நாடு அரசு, நெடுஞ்சாலைத் துறை வாயிலாக தரமான மற்றும் பாதுகாப்பான சாலை கட்டமைப்பினை சிறந்த முறையில் உருவாக்கி, பராமரித்து வருகிறது.

அந்த வகையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற மே 2021 முதல் தற்போது வரையில், ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 16,421 கிலோ மீட்டர் மாநில நெடுஞ்சாலைகள், மாவட்ட முக்கிய மற்றும் மாவட்ட இதர சாலைகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. 2000-க்கும் மேற்பட்ட பாலங்கள் மற்றும் சிறுபாலங்கள் கட்டப்பட்டுள்ளன. முதலமைச்சரின் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 2,130 கிலோ மீட்டர் முக்கியக் சாலைகள் அகலப்படுத்தப்பட்டு மேம்படுத்தப்பட்டுள்ளன. 5,000 கிலோ மீட்டருக்கும் அதிகமான ஊராட்சி ஒன்றியச் சாலைகள் மாவட்ட இதர சாலைகளாக மேம்படுத்தப்பட்டுள்ளன.

அதன் தொடர்ச்சியாக, சென்னை – கன்னியாகுமரி தொழில்தடத் திட்டத்தின் கீழ், ஆசிய வளர்ச்சி வங்கியின் நிதி உதவியுடன், நில எடுப்பு, பிற துறை சார்ந்த குழாய்களை மாற்றியமைத்தல் மற்றும் பராமரிப்பு செலவினம் உட்பட 1,141 கோடியே 23 லட்சம் ரூபாய் திட்ட மதிப்பீட்டில், செங்கல்பட்டு மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில், 109 கிலோ மீட்டர் நீளத்திற்கு 10 மீட்டர் சாலையாக அகலபடுத்தப்பட்டு, சாலை பாதுகாப்பு அம்சங்களுடன் தரம் உயர்த்தப்பட்ட செய்யூர் – பனையூர் இணைப்புச் சாலை உள்ளிட்ட செய்யூர் – வந்தவாசி – போளூர் சாலையை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்றையதினம் திறந்து வைத்தார்.

இத்திட்டத்தில், மருதாடு, வந்தவாசி மற்றும் சேத்துப்பட்டு ஆகிய 3 ஊர்களுக்கு புறவழிச்சாலைகள், மழைநீர் வடிகால்கள், 5 உயர்மட்ட பாலங்கள், 14 சிறு பாலங்கள், 225 குறு பாலங்கள் என மொத்த 244 பாலங்கள், சாலைப் பாதுகாப்பினை உறுதிசெய்ய தெருவிளக்குகள், கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் பொதுமக்களின் வசதிக்காக கழிப்பறை வசதிகளுடன் கூடிய பேருந்து நிறுத்தங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சாலையின் இருபுறங்களில் 47,700 மரக்கன்றுகள் நடப்பட்டு நன்கு பராமரிக்கப்படுகிறது. இத்திட்டத்தில், 7 ஆண்டுகளுக்கான செயல்திறன் அடிப்படையிலான பராமரிப்புப் பணியும் உள்ளடங்கும்.

இத்திட்டச் சாலையானது, கிழக்கு கடற்கரைச் சாலை, சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலை மற்றும் விழுப்புரம் – மங்களூரு தேசிய நெடுஞ்சாலை ஆகியவற்றை இணைக்கின்றது.

இத்திட்டத்தில் மருதாடு, வந்தவாசி மற்றும் சேத்துப்பட்டு ஆகிய 3 ஊர்களுக்கு புறவழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளதால், கனரக வாகனங்கள் போக்குவரத்து நெரிசலும், பயண நேரமும் குறையும். அத்துடன் செங்கல்பட்டு மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களிலுள்ள 67 கிராமங்களுக்கு விவசாய விளைபொருட்களை எடுத்துச் செல்லவும், அருகிலுள்ள நகர்புறங்களில் அமைந்துள்ள பள்ளி, கல்லூரி, மற்றும் மருத்துவமனை ஆகியவற்றிற்கு பொதுமக்கள் எளிதாக செல்லவும் இயலும் எனத் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

current events in israel. Wedding catering service. pope francis has died.