Amazing Tamilnadu – Tamil News Updates

கிண்டி அரசு மருத்துவமனை டாக்டர் மீது தாக்குதல்… நடந்தது என்ன?

கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் பணியில் இருந்த பாலாஜி ஜெகநாத் என்ற மருத்துவரை, பெண் நோயாளி ஒருவரின் மகன் கத்தியால் குத்திய சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அரசு தரப்பில் இந்த விவகாரம் தீவிரமாக எடுத்துக்கொள்ளப்பட்டுள்ள நிலையில், தாக்குதல் நடத்தியவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில், நடந்தது என்ன என்பது குறித்த தகவல்கள் தெரியவந்துள்ளன.

நடந்தது என்ன?

சென்னை, கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையின் புற்றுநோய் பிரிவின் சிறப்பு மருத்துவர் பாலாஜி ஜெகநாத். இவர், இன்று காலை 10.30 மணி அளவில் நோயாளிகளுக்கு வழக்கம் போல் மருத்துவ சிகிச்சை மற்றும் ஆலோசனைகளை அளித்துக்கொண்டிருந்தார். அப்போது மருத்துவமனைக்கு வந்த விவேக் என்பவர், மருத்துவர் பாலாஜியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். பின்னர் அந்த நபர், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் பாலாஜியை குத்தி தாக்குதல் நடத்தினார். மருத்துவர் பாலாஜியின் கழுத்து, காதின் பின்பகுதி, நெற்றி, முதுகு மற்றும் தலையில் இரண்டு இடங்களில் கத்தியால் தாக்கி உள்ளார்.

இதனால், ரத்தவெள்ளத்தில் மருத்துவர் பாலாஜி சம்பவ இடத்திலேயே சரிந்து விழுந்துள்ளார். அவரது அலறல் சத்தம் கேட்டு, அங்கிருந்த நர்ஸ் உள்ளிட்ட இதர பணியாளர்கள் ஓடிவந்தனர். இதனால், மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து, மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்திருந்தவர்கள், மருத்துவர் மீது தாக்குதல் நடத்தியவரை பிடித்தனர். பின்னர் போலீஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதையடுத்து விரைந்து வந்த கிண்டி போலீஸார், பிடிபட்ட நபரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். சம்பவத்தின் போது அவருடன் மேலும் 4 பேர் உடன் இருந்ததாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள விக்னேஷின் தாயார் பிரேமாவுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து டாக்டரிடம் அவர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அவரது மோசமான நிலைக்கு டாக்டரே காரணம் எனக் கூறி, இந்த தாக்குதலை நடத்தி உள்ளார்.

டாக்டருக்கு தீவிர சிகிச்சை

இது குறித்த தகவல் கிடைத்ததும் துணை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் உடனடியாக சம்பவம் நடந்த கிண்டி கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

மருத்துவமனையில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பு

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மா.சுப்பிரமணியன், “மருத்துவர் பாலாஜி மீது கத்தியால் குத்தி தாக்குதல் நடத்தியவர் பெருங்களத்தூரைச் சேர்ந்த விக்னேஷ் என்பதும், இந்த மருத்துவமனையில் அவரது தாயாருக்கு கொடுத்த சிகிச்சை குறித்து தவறான புரிதலின் காரணமாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. மருத்துவர் பாலாஜிக்கு அதிகமாக ரத்தம் வெளியேறியதால், உடனடியாக தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, நல்ல முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர் மயக்க நிலையில் இருந்தாலும், நன்றாக இருக்கிறார்” என்று தெரிவித்தார்.

தாக்குதல் ஏன்?

” இந்த தாக்குதல் நடத்தியதாக பிடிபட்டுள்ள நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், அந்த நபரின் தாய்க்கு இந்த மருத்துவமனையில் 6 முறை கீமோதெரபி சிகிச்சை கொடுக்கப்பட்டுள்ளது. பின்னர், நுரையீரல் பாதிப்பு இருந்ததால், தனது தாயை வீட்டுக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். கடந்த இரண்டு மூன்று தினங்களுக்கு முன்பு அவரது தாயின் உடல்நிலை மீண்டும் பாதிக்கப்பட்டதால், தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றிருக்கிறார்.

அந்த மருத்துவமனையில் என்ன கூறினார்கள் என்று தெரியவில்லை. தனியார் மருத்துவமனையில் கூறியது தொடர்பாக மருத்துவர் பாலாஜியிடம் விவாதிக்க வந்தபோதுதான், இந்த சம்பவம் நடந்துள்ளது. அவர்கள் இருவருக்குள் என்ன விவாதம் நடந்தது என்பது, தாக்குதலுக்கு உள்ளான மருத்துவர் கூறினால்தான் தெரியவரும். மருத்துவர் பாலாஜியின் அறையில்தான், அவருடைய அறையை மூடிவிட்டு இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது” என இச்சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கிண்டி கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனை இயக்குநர் எல். பார்த்தசாரதி தெரிவித்தார்.

முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு

இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதளத்தில், “மருத்துவர் பாலாஜிக்குத் தேவையான அனைத்து சிகிச்சைகளை அளித்திடவும், இச்சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்திடவும் ஆணையிட்டுள்ளேன்.

அரசு மருத்துவமனைகளை நாடி வரும் நோயாளிகளுக்கு நேரம் – காலம் பார்க்காமல் உரிய சிகிச்சை அளிப்பதில் நமது அரசு மருத்துவர்களின் தன்னலமற்ற பணி அளப்பரியது. இப்பணியின்போது அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்தல் நம் அனைவரின் கடமையாகும். இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நிகழாமல் தடுத்திடுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொள்ளும்” என்று தெரிவித்துள்ளார்.

மருத்துவர்கள் போராட்ட அறிவிப்பு

இந்த நிலையில், சென்னையில் அரசு மருத்துவர் மீது கத்தியால் குத்தி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, பாதுகாப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அரசு மருத்துவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக, தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்க மாநிலத் தலைவர் செந்தில் அறிவித்துள்ளார்.

Exit mobile version