தென் மாவட்டங்களில் கடந்த காலங்களில் நடந்த பல்வேறு சாதிக் கலவரங்கள் மற்றும் சாதி மோதல்களுக்கு பள்ளி மாணவர்கள் தங்களது கைகளில் கட்டி வரும் சாதி அடையாள கயிறும் முக்கிய காரணமாக இருப்பதாக சமூக ஆர்வலர்கள் நீண்ட நாட்களாகவே ஆதங்கத்துடன் சொல்லி வருகின்றனர்.
பள்ளிகளில் சாதிக் கயிறு…
அந்த வகையில், கடந்த அதிமுக ஆட்சியில், 2019 ஆம் ஆண்டு, ஜூலை 30 ஆம் தேதி மாவட்ட கல்வி அதிகாரிகள், முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு ஒரு சுற்றறிக்கையை அனுப்பினார் தமிழ்நாடு கல்வித் துறை இயக்குனர். அதில், பள்ளிக்கூடங்களுக்கு மாணவர்கள் சாதியைக் குறிக்கும் வகையில் கயிறுகளை அணிந்து வருவதை தடுக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கூறப்பட்டிருந்தது.
இந்த சுற்றிக்கை ஊடகங்களில் வெளியானதையடுத்து பாஜக தலைவர் எச். ராஜா, “கையில் கயிறு கட்டுவது. நெற்றியில் திலகமிடுவது இந்து மதநம்பிக்கை தொடர்பானது. இவைகளை பள்ளிகளில் தடை செய்வது அப்பட்டமான இந்து விரோத செயலாகும். இந்த ஆணை உடனடியாக வாபஸ் பெறப்பட வேண்டும்” என்று எதிர்ப்பு தெரிவித்தார். இந்த எதிர்ப்பை அடுத்து அப்போதைய பள்ளிக் கல்வி அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் அரசின் கவனத்துக்கு வராமல் இப்படி ஒரு சுற்றறிக்கை வெளியிடப்பட்டுவிட்டதாகவும், இந்த சுற்றறிக்கைக்கு முன்பிருந்த நிலையே தொடரும் என்று அறிவித்து விட்டார்.

நாங்குநேரி சம்பவமும் அரசின் ஒரு நபர் குழுவும்
இந்த நிலையில் தான், கடந்த 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 9 ஆம் தேதியன்று, திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் வசித்து வந்த சின்னதுரை என்ற 12 ஆம் வகுப்பு மாணவர் தனது வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தபோது, அதே பள்ளியில் படிக்கும் ஆதிக்க சாதியைச் சேர்ந்த சக வகுப்பு மாணவர்களால் வீட்டிற்குள் புகுந்து அரிவாளால் சரமாரியாக வெட்டப்பட்டார். இந்த சம்பவம், தமிழகம் முழுவதும் அதிர்ச்சியையும் பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே சாதி, இன உணர்வுகள் காரணமாக உருவாகும் வன்முறைகளைத் தவிர்க்கவும், நல்லிணக்கம் ஏற்படுத்த வழிமுறைகள் வகுக்கவும் ஓய்வுபெற்ற நீதியரசர் கே. சந்துரு தலைமையில் ஒரு நபர் குழுவை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அமைத்தார்.
பரிந்துரைகளுக்கு பாஜக எதிர்ப்பு
அந்தக் குழு , கடந்த ஜூன் மாதம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் அறிக்கை அளித்தது. அதில், கூறப்பட்ட முக்கிய பரிந்துரைகளில் ஒன்று, “பள்ளிகளில் மாணவர்களின் சாதி அடையாளத்தை வெளிப்படுத்தும் வகையில் கயிறு, பொட்டு வைக்க தடை விதிக்க வேண்டும்” என்பது. ஆனால் இதற்கு பாஜக மற்றும் சில இந்து மத அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், நீதிபதி சந்துரு குழுவின் பரிந்துரைகள் இன்னும் முழுமையாக செயல்படுத்தப்படாமலேயே உள்ளது.

கவனம் ஈர்த்த ‘கயிறு’ சிறுகதை
இதனிடையே நாங்குநேரி சம்பவத்துக்கு முன்னதாக, தலித் மாணவன் ஒருவனும் அவனது சகோதரியும் உடன் படிக்கும் ஆதிக்க சாதி மாணவர்களால் தாக்கப்பட்ட வேறொரு சம்பவம் ஒன்றும் நடந்து இருந்தது. இதையொட்டி ‘கயிறு’ என்ற தலைப்பில் ஒரு சிறுகதை எழுதி இருந்தார் எழுத்தாளர் விஷ்ணுபுரம் சரவணன்.
“செழியன் அரசுப் பள்ளியில் 7ஆம் வகுப்பு மாணவன். ஒரு நாள் பள்ளி முடிந்து, வீட்டுக்கு வருபவன், தன் கையில் கட்டியிருக்கும் மஞ்சள் கயிறை அம்மாவிடம் மகிழ்ச்சியுடன் காட்டுகிறான். அம்மா “அந்தக் கயிறு எங்கிருந்து கிடைத்தது?” என விசாரிக்கிறார். அவர்கள் தெரு கடைக்காரர், இலவசமாக மகன் கையில் கயிறு கட்டிய விபரத்தை அறிகிறார். செழியனுக்கு அதற்கான காரணம் தெரியவில்லை. மறுநாள் அவனைக் கேட்டு வரச் சொல்கிறார்.
“சும்மா அழகுக்குத் தான்!” என்கிறார் கடைகாரர். “நீல யூனிபார்முக்கு நீலக்கயிறு மேட்சாயிருக்கும்; அதைக் கேளு” என்று மகனிடம் சொல்லியனுப்புகிறார் அம்மா. “மஞ்சள் தான், நம் அடையாளம்” என்கிறார் கடைகாரர். மறுநாள் அம்மா சொன்னபடி, தன் நண்பன் அம்பேத்துக்கும், கடைகாரரிடம் மஞ்சள் கயிறு கேட்கிறான் செழியன்.
“நாம உயர்ந்த ஆளுங்க; அவன் நமக்குக் கீழ்; அவன் மஞ்சள் கயிறு கட்டக் கூடாது” என்று கடைகாரர் கோபமாகச் சத்தம் போடுகிறார். அப்போது தான், ‘இது மனிதருக்கிடையே உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்ற பேதத்தைக் கற்பிக்கும் கயிறு’ என்ற உண்மையை அறிந்து கொள்ளும் செழியன், தாங்கள் இருவரும் நண்பர்கள் என்றும், தங்களுக்குள் பேதமை இல்லை என்றும் கூறி அந்த கயிறை அறுத்து வீசி எறிகிறான்.
இள வயது மாணவர்களிடையே சாதியற்ற சமத்துவ உணர்வை ஏற்படுத்தும் நோக்கில் எழுதப்பட்ட இந்த கதை, நாங்குநேரி சம்பவம் நிகழ்ந்தபோது சமூக வலைதளத்தில் பரவலாக பகிரப்பட்டு பாராட்டுகளைப் பெற்றது.
சென்னை புத்தகக் காட்சியில் ரூ. 1 -க்கு விற்பனை
இந்த நிலையில் தான் கடந்த 27 ஆம் தேதி தொடங்கிய 48 ஆவது சென்னை புத்தகக் காட்சியில், விஷ்ணுபுரம் சரவணனின் இந்த ‘கயிறு’ கதை புத்தகம் மிக அதிக அளவில் விற்கப்படும் புத்தகமாக பேசப்பட்டு, வாசகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த புத்தகத்தின் மையக்கரு இன்றைய இளம் தலைமுறையினரிடையே மிக பரவலாக சென்று சேர வேண்டும் என்ற நோக்கத்தில் ‘சீர் வாசக வட்டம்’ இந்த கதையை சிறு புத்தகமாக (booklet) அச்சிட்டு, வெறும் 1 ரூபாய்க்கு புத்தகக் காட்சியில் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது.
மாணவர்களுக்காக வாங்கும் ஆசிரியர்கள்
இது குறித்துப் பேசிய சீர் வாசகர் வட்டம் அமைப்பாளர் தினேஷ் , “புத்தகக் காட்சிக்கு வரும் பல பார்வையாளர்கள், குறிப்பாக கண்காட்சிக்கு வரும் பள்ளி மாணவர்கள் இந்த கயிறு புத்தகத்தைக் கேட்டு ஸ்டாலுக்கு வருகிறார்கள். குறைந்த பட்சம் இந்தப் புத்தகத்தைப் படிப்பவர்களாவது சக துணையை பாரபட்சமாக நடத்துவதற்கு எதிரான செய்தியை உள்வாங்குவார்கள் என்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.
இதில் எங்களுக்கு எந்த லாபமும் இல்லை. இந்த புத்தகத்தை தனி நபர்களுக்கு 1 ரூபாய்க்கும், மொத்த ஆர்டர்களுக்கு 5 ரூபாய்க்கும் விற்கிறோம். எங்கள் ஸ்டாலில் புத்தகங்கள் வாங்குபவர்களுக்கு இது இலவசம்” என்று தெரிவித்தார்.
இப்புத்தகத்தை, புத்தக் காட்சிக்கு வரும் பள்ளி ஆசிரியர்கள் பலர் தங்களிடம் பயிலும் மாணவர்களுக்கு வழங்குவதற்காக மொத்தமாக 50, 100 என்ற எண்ணிக்கையில் வாங்கிச் செல்கின்றனர்.
ஆசிரியர்கள் மட்டுமல்ல… பெற்றோர்களும் தங்களது பிள்ளைகளுக்கு அவசியம் வாங்கிக் கொடுக்க வேண்டிய புத்தகம் இது!