Amazing Tamilnadu – Tamil News Updates

லக்கேஜ்: சென்னை விமான நிலையத்தில் இனி ‘வரிசை’ யில் நிற்க வேண்டாம்!

ழக்கமாக விமான நிலையங்களில் பயணிகள் தங்களுடன் கொண்டு வரும் சூட்கேஸ் உள்ளிட்ட லக்கேஜ்கள் பெரியதாகவோ அல்லது எடை அதிகமானதாகவோ இருந்தால், அதை சம்பந்தப்பட்ட விமான நிறுவன கவுன்டர்களில் பெயர், டிக்கெட் உள்ளிட்ட விவரங்களைப் பதிவு செய்து கொடுக்க வேண்டும். அங்கிருக்கும் ஊழியர்கள் அந்த உடமைகளை ஸ்கேனிங் சோதனைக்கு உட்படுத்தி, அதன் மீது டேக் (Tag) குகளை ஒட்டி, கன்வேயர் பெல்ட் மூலம், அதனை விமானத்தில் ஏற்ற அனுப்புவார்கள்.

இதற்கு ஒரு பயணிக்கு குறைந்தது 10 நிமிடங்கள் முதல் 15 நிமிடங்கள் வரையிலாவது ஆகும். இதனால், பயணிகள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய சூழல் உள்ளது. சமயங்களில் குறைந்த கால அவகாசத்தில் வரும்போது, சிரமமாகி விடும்.

இந்த நிலையில், சென்னை விமான நிலையத்தில் பயணிகளின் இந்த சிரமங்களைப் போக்கும் விதமாக Self Package Drop (SBD) என்ற புதிய திட்டம் செயல்பாட்டிற்கு வந்துள்ளது. சென்னை உள்நாட்டு விமான நிலையத்தின் டெர்மினல் 4 -லிருந்து புறப்படும், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், விஸ்தாரா ஏர்லைன்ஸ் விமானங்களின் பயணிகளுக்கு செயல்பாட்டிற்கு வந்துள்ளது.

இதன்படி ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், விஸ்தாரா ஏர்லைன்ஸ் விமான பயணிகள், தங்களுடைய உடமைகளை, பயணிகளே தானியங்கி இயந்திரங்கள் மூலம், ஸ்கேன் செய்து பரிசோதித்து, கண்வெயர் பெல்ட் மூலம், விமானத்தில் ஏற்றுவதற்கு அனுப்பி வைக்கலாம். இதற்காக சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில், புறப்பாடு பகுதி டெர்மினல் 4 இல்,8 பாதுகாப்பு சோதனை தானியங்கி கவுன்டர்கள் புதிதாக அமைக்கப்பட்டுள்ளன. இந்த கவுன்டர்களில், ஊழியர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். இயந்திரங்கள் மட்டும் இருக்கும்.

பயணிகள் அந்த இயந்திரத்தில் தங்களுடைய உடைமைகளை வைத்து விட்டு, தங்களின் பயண டிக்கெட்டின் பி.என்.ஆர் எண்ணை பதிவு செய்ய வேண்டும். தானியங்கி முறையில், பயணிகளுக்கு போர்டிங் பாஸ் வந்த பின்னர், பயணி அந்த போர்டிங் பாஸை அங்குள்ள மற்றொரு இயந்திரத்தில் ஸ்கேன் செய்ய வேண்டும்.

அதன்பின்னர் உடனடியாக அந்த உடைமைகளில், பாதுகாப்பு காரணங்களுக்காக, என்னென்ன பொருட்கள் எடுத்துச் செல்லக்கூடாது என்ற விவரங்கள், இயந்திரத்தின் டிஸ்ப்ளேவில் தெரியும். அதைப் பார்த்துவிட்டு பயணி, அந்த இயந்திரத்தில் உள்ள பட்டன் மூலம் ஓகே கொடுத்து, தான் எடுத்துச் செல்லும் உடைமைகளின் எண்ணிக்கை குறித்தும் பதிவு செய்ய வேண்டும். அந்த தானியங்கி இயந்திரம், பயணியின் உடமைகளின் எடையை ஸ்கிரீனில் காட்டும்.

இதை அடுத்து பயணிகள் உடைமைகளில் ஒட்டுவதற்கான டேக்குகள், இயந்திரத்தில் இருந்து வெளியே வரும். பயணி அந்த டேக்குகளை எடுத்து தங்கள் உடைமைகளில் ஒட்டுவதோடு, அதன்பின்பு உடமைகளை, அருகே உள்ள கன்வேயர் பெல்டில் வைத்துவிட்டால், பயணியின் உடைமைகள் விமானத்தில் ஏற்றுவதற்கு, தானாகவே கொண்டு செல்லப்படும்.

இந்த புதிய முறை மூலம், பயணிகள் போர்டிங் பாஸ் வாங்குவது மற்றும் தங்கள் உடமைகளை பாதுகாப்பு சோதனைகள் நடத்தி, விமானத்தில் ஏற்றுவதற்கு அனுப்பி வைப்பது போன்றவைகளுக்காக, வரிசையில் நீண்ட நேரம் காத்து நிற்க வேண்டிய அவசியம் இல்லை. வெகு சீக்கிரத்தில் அப்பணிகளை முடித்துவிட்டு, விமானங்களில் ஏறுவதற்கு தயாராகி விடலாம்.

இந்த புதிய திட்டம், இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான பயணிகளுக்கு கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து அமலில் இருந்து வரும் நிலையில், அடுத்த சில தினங்களில் ஏர் இந்தியாவும் இதனை செயல்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version