இந்தியாவின் சந்திராயன்-3 விஷன் 2023 சந்திரனில் அதன் வெற்றிக்கரமான பணியை நிறைவு செய்த பிறகும் புதிய கண்டு பிடிப்புகளை செய்து வருகிறது. அதன் ஒரு அம்சமாக நிலவின் தென்துருவ பகுதியில் பிரக்யான் ரோவர் தனது தரையிறங்கும் இடத்திற்கு அருகில் 160 கி.மீ. அகலத்தில் பெரிய பள்ளத்தை கண்டுபிடித்துள்ளது. பிரக்யான் ரோவரின் உயர் திறன் கொண்ட கேமராக்கள் இந்த பள்ளத்தை படம் பிடித்துள்ளது.
இதனை அகமதாபாத்தில் உள்ள இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வகத்தின் விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர். பிரக்யான் ரோவர், அதன் தரையிறங்கும் தளத்தில் தென்துருவ எய்ட்கன் படுகையில் இருந்து சுமார் 350 கி.மீ. தூரத்தில் நிலவின் மேற்பரப்பில் உள்ள மிகப் பெரிய மற்றும் பழமையான படுகையை கடந்து சென்ற போது இந்த பள்ளத்தை கண்டுபிடித்துள்ளது.
இந்த பள்ளம் தென் துருவ-எய்ட்கன் படுகையை உருவாக்குவதற்கு முன்பே உருவாகியிருக்கலாம் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். சிதைந்த நிலையில் உள்ள இந்த பள்ளம், குப்பைகளால் நிரம்பி உள்ளது. பள்ளம் கண்டுபிடிக்கப்பட்ட தென் துருவ-எய்ட்கன் படுகை கிட்டத்தட்ட 1400 மீட்டர் தாக்க குப்பைகளால் மூடப்பட்டுள்ளது. இந்த படங்கள் நிலவின் புவியியல் பரிமானத்தை பற்றிய முக்கியமான நுண்ணறிவுகளை வழங்கியுள்ளது. காலப்போக்கில் தொடர்ச்சியான பேரழிவு தாக்கங்களால் மேற்பரப்பு எவ்வாறு வடிவமைக்கப்பட்டது என்பதை இந்த படம் வெளிச்சம் போட்டு காட்டுகிறது.
இந்த புதிய கண்டுபிடிப்பு மூலம், விஞ்ஞானிகள் சந்திரனில் புதைக்கப்பட்ட பொருட்களை ஆய்வு செய்வதற்கான அரிய வாய்ப்பை பிரக்யான் ரோவர் வழங்கியுள்ளது. இந்த பள்ளத்தில் இருந்து சேகரிக்கும் பழங்கால தகவல்கள் மூலம் நிலவின் ஆரம்ப கால வரலாறு மற்றும் அதன் தனித்துவமான உருவாக்கம் பற்றி விஞ்ஞானிகள் புதிய தகவல்களைத் தெரிந்துகொள்ள முடியும். இதன் மூலம் நிலவு குறித்து இதுவரை இருந்த நமது புரிதலை மாற்றியமைக்க முடியும் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
இந்த பள்ளத்தை ஆய்வு செய்வதன் மூலம் சந்திரனின் ஆரம்ப கட்டம் அதன் செயல்முறைகளை பற்றி தெரிந்து கொள்ள உதவும். மேலும், இது எதிர்காலத்தில் சந்திர பயணம் மற்றும் விண்வெளி ஆய்வு முயற்சிகளுக்கு பல முக்கிய தகவல்களை தரலாம் என்று விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.