காவிரி நதி நீர் பிரச்னையில் கர்நாடகாவில் எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் காட்டப்படும் பிடிவாதம், தமிழ்நாட்டுக்கு தீராத தலைவலியாகவே உள்ளது. அந்த வகையில், இந்த ஆண்டும் கர்நாடகா வழக்கம்போல் தமிழகத்துக்கு உண்டான காவிரி நீரைத் தர அடம்பிடிக்கும் நிலையில், இந்த விவகாரம் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது.
கர்நாடகாவின் பிடிவாதம்
டெல்லியில் கடந்த 11 ஆம் தேதி நடந்த காவிரி ஒழுங்காற்று குழு கூட்டத்தில், “ஜூலை 31-ம் தேதிக்குள் தமிழகத்துக்கு 1 டிஎம்சி காவிரி நீரை கர்நாடக அரசு திறக்க வேண்டும்” எனப் பரிந்துரை செய்யப்பட்டது. ஆனால், இந்த பரிந்துரையை ஏற்க கர்நாடகா அரசு மறுத்து வந்தது.
இதுகுறித்து நேற்று முன்தினம் நடைபெற்ற கர்நாடக மாநில அனைத்து கட்சி கூட்டத்தில் பேசிய முதலமமைச்சர் சித்தராமையா, ” கிருஷ்ணராஜசாகர், கபினி உள்ளிட்ட 4 அணைகளும் 63 சதவீதம் மட்டுமே நிறைந்துள்ளன. ஆனாலும், காவிரி ஒழுங்காற்று குழுவின் பரிந்துரையை நிராகரிக்க முடியாது. தினமும் வினாடிக்கு 11,500 கனஅடி நீர் திறக்க உத்தரவிடப்பட்ட நிலையில், நாங்கள் 8,000 கனஅடி நீரை திறக்க முடிவு செய்துள்ளோம்” எனத் தெரிவித்தார்.
தமிழக அனைத்துக் கட்சிக் கூட்டம்
ஆனால் இதனை ஏற்க தமிழக அரசு மறுத்த நிலையில், இது குறித்து ஆலோசிப்பதற்காக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டியது. அதன்படி இன்று காலை சென்னை தலைமை செயலகத்தில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது.
நிறைவேற்றப்பட்ட 3 தீர்மானங்கள்
தொடர்ந்து கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட கருத்துகளின் அடிப்படையில், ஒருமனதாக எடுக்கப்பட்ட 3 தீர்மானங்களையும் மு.க. ஸ்டாலின் வாசித்தார்.
காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு தற்போது ஆணையிட்டுள்ளவாறு தமிழ்நாட்டிற்கு காவிரி நீரைத் தர முடியாது என்று மறுத்துள்ள கர்நாடக அரசிற்கு இந்த அனைத்து சட்டமன்றக் கட்சிக் கூட்டம் தனது கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.
தமிழ்நாட்டிற்குக் காவிரி நீரை உடனடியாக விடுவித்திட கர்நாடக அரசுக்கு ஆணையிடுமாறு காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தினை இந்த அனைத்து சட்டமன்றக் கட்சிக் கூட்டம் வலியுறுத்துகிறது.
தேவைப்படின், உச்சநீதிமன்றத்தை நாடி, அனைத்து சட்டபூர்வமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள இக்கூட்டம் ஒருமனதாக தீர்மானிக்கிறது என 3 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்தத் தீர்மானங்களின் அடிப்படையில் தேவைப்படும் அனைத்து நடவடிக்கைகளையும் முழுமூச்சோடு மேற்கொண்டு, காவிரி டெல்டா விவசாயிகளின் உரிமைகளை தமது அரசு நிலைநாட்டும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.
கைகொடுத்த இயற்கை
இந்த நிலையில், இந்த பிரச்னையைத் தீர்க்க இயற்கையே உதவும் வகையில், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. கிருஷ்ணராஜசாகர், கபினி, ஹேமாவதி, ஹாரங்கி ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. கர்நாடகாவின் கபினி அணையில் இருந்து நேற்று வினாடிக்கு 20,000 கன அடி, கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து 2,250 கன அடி என தமிழகத்துக்கு வினாடிக்கு 22,000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளதால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கர்நாடகாவில் திறக்கப்பட்ட நீர் தமிழக எல்லை வந்தடையும் பொழுது நீர்வரத்து படிப்படியாக உயர்ந்து 10,000 கன அடிக்கு மேல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், நேற்று இரவு ஒகேனக்கல்லை தண்ணீர் வந்தடைந்த நிலையில், அங்குள்ள அருவிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. இந்த நிலையில், தமிழகத்திற்கான நீர் பங்கீட்டை வழங்காமல், மழையால் உபரி நீரை கர்நாடகா திறப்பதாக விவசாயிகள் ஆதங்கம் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே தமிழகத்தில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டம் குறித்து பெங்களூருவில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய, கர்நாடக துணை முதல்வர் டிகே சிவகுமார், “கடவுள் அனுமதித்தால் நம் பிரச்னைகள் தீர்க்கப்பட்டு விடும் என்று நினைக்கிறேன்” என்றார்.
இன்னும் எத்தனை காலத்துக்கு தான், தமிழகத்தை காவிரி வெள்ளத்தின் வடிகாலாகவே கர்நாடகா பார்க்கும் என்று தெரியவில்லை.