சாலை விபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தனியார் மருத்துவமனையிலும் பணமில்லா சிகிச்சை அளிக்கும் திட்டத்தை (Cashless Treatment of Road Accident Victims Scheme) நாடு முழுவதும் அமல்படுத்துவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பணமில்லா சிகிச்சை திட்டத்தை அறிவிப்பதில் தாமதம் செய்ததற்காக மத்திய அரசை உச்ச நீதிமன்றம் சமீபத்தில் கடுமையாக விமர்சித்தது. ஏப்ரல் 9 அன்று, நீதிபதிகள் அபய் எஸ். ஓகா மற்றும் உஜ்ஜல் பூயான் அமர்வு, மோட்டார் வாகன சட்டத்தின் பிரிவு 162(2) இன் கீழ் “கோல்டன் அவர்” சிகிச்சை திட்டத்தை அமல்படுத்துவதற்கான விதிகள் மற்றும் கட்டமைப்பு இல்லாததை சுட்டிக்காட்டி, மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகத்தின் செயலாளரை ஏப்ரல் 28 அன்று நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என்றும், இல்லையெனில் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்து இருந்தது.
மே 5 முதல் அமல்
இந்த நிலையில் தான், மத்திய அரசு மேற்கூறிய திட்டத்தை அமல்படுத்துவதாக அறிவித்துள்ளது. இந்த திட்டத்தின்படி, ஒரு விபத்தில் காயமடைந்த ஒரு நபருக்கு தனியார் மருத்துவமனைகள் உட்பட அதிகபட்சமாக 1.5 லட்சம் ரூபாய் வரை சிகிச்சை பெற முடியும். மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் வெளியிட்ட அரசிதழ் அறிவிப்பின்படி, இந்த திட்டம் மே 5 முதல் அமலுக்கு வந்துள்ளது.
இந்த அறிவிப்பின்படி, மோட்டார் வாகனம் மூலம் ஏற்படும் சாலை விபத்தில் பாதிக்கப்படும் எந்தவொரு நபரும், எந்த சாலையில் விபத்து நடந்தாலும், இந்த திட்டத்தின் விதிமுறைகளின்படி பணமில்லா சிகிச்சை பெற உரிமை உண்டு. இந்த திட்டத்தை தேசிய சுகாதார ஆணையம் (NHA) செயல்படுத்தும் முகவராக இருக்கும். இதற்காக, காவல்துறை, மருத்துவமனைகள், மாநில சுகாதார முகமைகள் ஆகியவற்றுடன் இணைந்து பணியாற்றும்.
ரூ.1.5 லட்சம் வரை பணமில்லா சிகிச்சை
இத்திட்டத்தின் கீழ், விபத்து நடந்த நாளிலிருந்து அதிகபட்சம் ஏழு நாட்களுக்கு, ஒரு பாதிக்கப்பட்டவருக்கு 1.5 லட்சம் ரூபாய் வரை பணமில்லா சிகிச்சை வழங்கப்படும். இதற்காக அரசு தரப்பில் நியமிக்கப்பட்ட மருத்துவமனைகளில் சிகிச்சை பெறலாம். அரசு தரப்பில் நியமிக்கப்படாத மருத்துவமனைகளில், உடல்நலத்தை உறுதிப்படுத்தும் அளவிற்கு மட்டுமே சிகிச்சை அளிக்கப்படும் என அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கான வழிகாட்டுதல்களை அரசு தனியாக வெளியிடும்.
மாநில சாலை பாதுகாப்பு கவுன்சில், ஒவ்வொரு மாநிலம் அல்லது யூனியன் பிரதேசத்திற்கும் இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கான மைய அமைப்பாக இருக்கும். இது, தேசிய சுகாதார ஆணையத்துடன் இணைந்து, மருத்துவமனைகளை பதிவு செய்வது, பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பது, மருத்துவமனைகளுக்கு பணம் செலுத்துவது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளும். மேலும், இந்த திட்டத்தை கண்காணிக்க மத்திய அரசு ஒரு வழிகாட்டு குழுவை அமைக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னதாக, 2024 மார்ச் 14 அன்று, சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் (MoRTH) ஒரு சோதனை திட்டத்தை தொடங்கியது. இதன் வெற்றியைத் தொடர்ந்து, நாடு முழுவதும் இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான சாலை விபத்துகள் நடைபெறுகின்றன, இதில் பலர் உயிரிழக்கின்றனர் அல்லது பலத்த காயமடைகின்றனர். சரியான நேரத்தில் சிகிச்சை கிடைக்காததால், பல உயிர்களை இழக்கும் சூழல் உள்ளது. இந்த பணமில்லா சிகிச்சை திட்டம், அவசர காலத்தில் உயிர்களை காப்பாற்றுவதற்கு மிகவும் உதவியாக இருக்கும்.
தமிழ்நாடு முன்னோடி
ஏற்கெனவே தமிழ்நாட்டில், சாலை விபத்தினால் சாலை விபத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதல் 48 மணி நேரத்திற்கான அவசர மருத்துவ சிகிச்சை செலவைத் தமிழக அரசே மேற்கொள்ளும் வகையில் “இன்னுயிர் காப்போம்-நம்மைக் காக்கும் 48” திட்டம் கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கப்பட்டு அமலில் இருந்து வருகிறது.
இத்திட்டத்திற்கென அங்கீகரிக்கப்பட்ட 201 அரசு மருத்துவமனைகள் மற்றும் 408 தனியார் மருத்துவமனைகள் என மொத்தம் 609 மருத்துவமனைகள் உரிய தகுதியின் அடிப்படையில் இணைக்கப்பட்டு, மருத்துவ சிகிச்சைகள் வழங்கிட வழிவகை செய்யப்பட்டுள்ளது.