Amazing Tamilnadu – Tamil News Updates

ஆரம்பக் கல்வியின் அடுத்தகட்ட பாய்ச்சல்… தமிழகத்திற்கு பொருளாதார பலன்களை ஏற்படுத்தும் ‘காலை உணவுத் திட்டம்’!

மிழகத்தில் கல்வித்துறைக்கு அரசு அளித்து வரும் முக்கியத்தும் அனைவரும் அறிந்த ஒன்றுதான். அந்த வகையில் குழந்தைகளின் சிறப்பான எதிர்கால வாழ்வுக்கு அடித்தளமிடும் ஆரம்பக் கல்வியைப் பெறுவதில் ‘பசி’ ஒரு தடையாக இருக்கக்கூடாது என்ற நோக்கத்தில் முன்னாள் முதலமைச்சர் காமராஜர் கொண்டுவந்த மதிய உணவுத் திட்டத்தின் அடுத்த கட்ட நகர்வுதான் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினால் கொண்டுவரப்பட்ட ‘முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்’.

தமிழ்நாட்டில் உள்ள அரசு தொடக்கப் பள்ளிகள் அனைத்திலும் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் அனைத்துக் குழந்தைகளுக்கும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் 15.9.2022 அன்று தொடங்கிவைக்கப்பட்டது. இதனால், தமிழகத்தில் உள்ள 30,992 அரசுத் தொடக்கப் பள்ளிகளில் பயிலும் 18 லட்சத்து 50,000 குழந்தைகள் காலை உணவை பள்ளிகளிலேயே பசியாறி , மகிழ்ச்சியோடு பள்ளிப் பாடங்களில் கவனம் செலுத்திப் படித்து வருகிறார்கள். மேலும், இந்த திட்டத்தினால் பள்ளிக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் தெரியவந்தது.

அதிகரித்த மாணவர்கள் வருகை விகிதம்

இது தொடர்பாக ஆய்வு நடத்திய மாநில திட்டக்குழு, முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் அரசுப் பள்ளிகளில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது, காலை உணவு திட்டத்தினால் பயன் அடைந்தவர்கள் என்ன சொல்கிறார்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் என்ன சொல்கிறார்கள் என்பது குறித்த விவரங்களைத் திரட்டியது.

அதன்படி, “முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தால் மாணவர்கள் வருகை அதிகரித்துள்ளது. பள்ளிக்கு செல்ல மறுக்கும் நிலை தற்போது மாறியுள்ளது. அவர்கள் 9 மணிக்கு பள்ளிக்கூடம் செல்ல வேண்டும் என்றால், தற்போது 7.30 மணிக்கே மிகவும் ஆர்வமாக செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் தினசரி வருகை 60 சதவீதத்திலிருந்து 95 சதவீதமாக உயர்ந்துள்ளது. குழந்தைகள் காலை உணவை மிகவும் விரும்பி சாப்பிடுவதாக அவர்களின் பெற்றோர்களும், ஆசிரியர்களும் கூறி உள்ளனர்” எனக் கடந்த மார்ச் மாதம் முதலமைச்சரிடம் சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும், 2 இலட்சத்து 23,536 குழந்தைகள் பயன்

இந்த நிலையில், இந்த திட்டத்துக்குக் கிடைத்த பலனைக் கருத்தில்கொண்டு, இந்த ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில், க்ஷ்அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளுக்கும் காலை உணவுத் திட்டம் விரிவுபடுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி, காமராஜரின் பிறந்த நாளான இன்று திருவள்ளூர் மாவட்டம், கீழச்சேரி கிராமத்தில் உள்ள புனித அன்னாள் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் காலை உணவுத் திட்டத்தை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை தொடங்கி வைத்து, மாணவர்களுடன் அமர்ந்து சாப்பிட்டார். இத்திட்டத்தின் மூலம் 3,995 அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் பயிலும் 2 லட்சத்து 23,536 குழந்தைகள் பயனடைவார்கள் எனத் தெரியவந்துள்ளது.

ஆரம்பக் கல்வியின் அடுத்தகட்ட பாய்ச்சல்

இவ்வாறு அரசுத் தொடக்கப் பள்ளிகளில் பயிலும் 18 லட்சத்து 50,000 குழந்தைகள், அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் பயிலும் 2 லட்சத்து 23,536 குழந்தைகள் என மொத்தம் 20 இலட்சத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் இந்த காலை உணவுத் திட்டத்தினால் பயன்பெறுவது, குழந்தைகளைப் பள்ளிகளை நோக்கி கரம் பிடித்து அழைத்து வரும் ஆரம்பக் கல்வியின் அடுத்தகட்ட பாய்ச்சலாகவே பார்க்கப்படுகிறது.

பொருளாதாரத்திலும் நல்விளைவுகள்

இது குறித்து ப.சிதம்பரம் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில், “பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்த நாளான இன்று ‘முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்’ தமிழ்நாட்டின் ஊரகப்பகுதிகளில் உள்ள அனைத்து அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் 1 முதல் 5 வகுப்புகளில் பயிலும் மாணவ, மாணவியருக்கு விரிவுபடுத்தப்படுவதை மகிழ்ச்சியுடன் பாராட்டுகிறேன். இது மனித நேயச் செயல்திட்டம். மேலும், பொருளாதார நல்விளைவுகளை ஏற்படுத்தும் திட்டம். முதலமைச்சருக்கு நன்றி மற்றும் பாராட்டுகள்” எனத் தெரிவித்துள்ளார்.

Exit mobile version