திருவள்ளூர் மாவட்டம், கீழச்சேரி, புனித அன்னாள் தொடக்கப் பள்ளியில் ஊரகப் பகுதிகளில் உள்ள அனைத்து அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு விரிவுபடுத்தப்பட்ட முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.
பயனை விளக்கிய ஆய்வறிக்கை
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆட்சிக்கு வந்த பின்னர் தொடங்கிய பல்வேறு திட்டங்களில் 5 திட்டங்கள் மிக முக்கியமாக பார்க்கப்படுகிறது. அதில் ஒன்றுதான் இந்த ‘முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்’. முதலில் கடந்த 15.9.2022 அன்று தொடங்கப்பட்ட இந்த திட்டத்தினால், தமிழகத்தில் உள்ள 30,992 அரசுத் தொடக்கப் பள்ளிகளில் பயிலும் 18 லட்சத்து 50,000 குழந்தைகள் காலை உணவை பள்ளிகளிலேயே பசியாறி , மகிழ்ச்சியோடு பள்ளிப் பாடங்களில் கவனம் செலுத்திப் படித்து வருவதாகவும், இந்த திட்டத்தினால் பள்ளிக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் மாநில திட்டக்குழுவின் ஆய்வறிக்கை மூலம் தெரியவந்தது.
20 லட்சம் பேர் பயன்
இதனைத் தொடர்ந்தே இந்த திட்டம் தற்போது அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதனால், இப்பள்ளிகளில் பயிலும் 2 லட்சத்து 23,536 குழந்தைகள் பயனடைவார்கள். இதன் மூலம், மொத்தம் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் இந்த காலை உணவுத் திட்டத்தினால் பயன்பெறுவார்கள். இது தமிழ்நாட்டின் ஆரம்பக் கல்விக்கான அடுத்தகட்ட பாய்ச்சலாக கருதப்படுவதோடு, பொருளாதார ரீதியாகவும் இந்த திட்டம் தமிழகத்துக்கு பயனளிக்கக்கூடியது என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பாராட்டி உள்ளார்.
இத்தகைய பயனளிக்கக் கூடிய இந்த காலை உணவுத் திட்டத்தைத் தொடங்க வேண்டும் என்பதற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு தூண்டுதலாக அமைந்தது எது, கடும் நிதி நெருக்கடிக்கு மத்தியில் இந்த திட்டத்தை தொடங்க நினைத்தபோது அதிகாரிகளின் ரியாக்சன் என்னவாக இருந்தது, அதனை முதலமைச்சர் எவ்வாறு எதிர்கொண்டு திட்டத்தைச் செயல்படுத்தினார் என்பதை அவரது உரை மூலமே தெரிந்து கொள்ளலாம்.
தூண்டுதலாக அமைந்த சம்பவம்
திருவள்ளூரில் இன்று காலை உணவுத் திட்டத்தை அவர் தொடங்கி வைத்துப் பேசுகையில், “பள்ளிக்கு வரக்கூடிய குழந்தைகளுடைய பசியைப் போக்கவேண்டும் என்று முடிவு செய்து உருவாக்கிய திட்டம்தான், இந்த காலை உணவுத் திட்டம். சென்னையில், ஒரு பள்ளி விழாவிற்கு சென்றபோது, ஒரு குழந்தை, ‘இன்னும் காலை உணவு சாப்பிடவில்லை’ என்று சொன்னதை கேட்டவுடனே, ஒரு பெற்றோருக்கே உரிய பாச உணர்வுடன் நான் உருவாக்கிய திட்டம்தான், இந்த காலை உணவுத் திட்டம்.
‘அரசாங்கத்திற்கு எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை, ஒரு குழந்தை கூட பசியோட ஸ்கூல்ல தவிக்க கூடாது’ என்று இந்தத் திட்டத்தை தொடங்க உத்தரவிட்டேன்.இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால், பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளில் இந்தத் திட்டத்தைத் தொடங்கினேன். இன்றைக்கு பெருந்தலைவர் காமராசரின் பிறந்தநாளில் இந்தத் திட்டத்தை விரிவுபடுத்தியிருக்கிறேன்.
வருங்கால தலைமுறையை உருவாக்குகிற முதலீடு
குழந்தைகள்தான் தமிழ்நாட்டின் எதிர்கால சொத்து! அதனால்தான், காலை உணவுத் திட்ட ஒதுக்கீடு பற்றி, அதிகாரிகள் என்னுடன் விவாதித்தபோது, ‘அதை நிதி ஒதுக்கீடு என்று சொல்லாதீர்கள், வருங்கால தலைமுறையை உருவாக்குகிற முதலீடு என்று சொல்லுங்கள்’ என்று ஆணித்தரமாக சொன்னேன். ஆனால், இந்தத் திட்டம் மாணவ – மாணவியருக்கு தன்னம்பிக்கையை அளிக்கின்றது. பெற்றோர்களுக்கு பொருளாதாரச் சுமையை குறைக்கின்றது. பள்ளிகளுக்கு வரும் மாணவர்களுடைய எண்ணிக்கையை அதிகரிக்கின்றது. இடைநிற்றலை குறைக்கின்றது. இதுபோல, ஏராளமான நன்மைகள் காலை உணவுத் திட்டத்தால் விளைகிறது.
திராவிட மாடல் அரசையும், என்னையும் பொறுத்தவரைக்கும் நம்முடைய தமிழ்நாட்டு பசங்க படிப்பதற்கு எதுவும் தடையாக இருக்க கூடாது என்று நினைக்கிறோம். அது பசியாக இருந்தாலும் சரி, நீட் தேர்வாக இருந்தாலும் சரி, ஒன்றிய அரசின் புதிய கல்விக் கொள்கையாக இருந்தாலும் சரி, எந்த தடை வந்தாலும் அந்த தடைகளை உடைப்பதுதான் எங்களுடைய முதல் பணி!” என்றார்.