இந்தியா – பாகிஸ்தான் எல்லைப் பதற்றம்: ஏடிஎம்-கள் மூடலா… உண்மை என்ன?

எல்லை பகுதிகளில் பாகிஸ்தானின் அத்துமீறிய தாக்குதல்களுக்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்து வருகிறது. இதனால், ஜம்மு – காஷ்மீர் உட்பட எல்லை பகுதிகளில் பதற்றம் நிலவி வருகிறது.
இந்த நிலையில், சமூக ஊடகங்களில், குறிப்பாக வாட்ஸ்அப் மூலம் ஏடிஎம்கள் 2-3 நாட்களுக்கு மூடப்படும் எனத் தகவல் பரப்பப்பட்டு வருகிறது. இந்தச் செய்தி முற்றிலும் தவறானது என மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது.
ஏடிஎம்கள் வழக்கம் போல் இயங்கும் எனவும், பொதுமக்கள் புரளிகளைப் பகிர வேண்டாம் எனவும் அரசு அறிவுறுத்தியுள்ளது. இதுபோன்ற போலி செய்திகள் மக்களிடையே பீதியை ஏற்படுத்தி, வங்கிகளில் நீண்ட வரிசைகளை உருவாக்கி, வங்கிகளின் இயல்பு பணிகளை பாதிக்கலாம். எனவே, இதுபோன்ற தகவல்களைப் பகிர்வதற்கு முன், வங்கிகளிடம் நேரடியாக உறுதிப்படுத்துவது அவசியம்.
இந்தியாவின் பத்திரிகை தகவல் பணியகம் (பிஐபி), பாகிஸ்தானில் இருந்து பரவும் பல்வேறு போலி செய்திகளை அம்பலப்படுத்தியுள்ளது. மே 8 இரவு 10 மணி முதல் மே 9 காலை 6.30 மணி வரை, குறைந்தது எட்டு வைரல் வீடியோக்கள் மற்றும் பதிவுகள் உண்மைப் பரிசோதனை செய்யப்பட்டன. இவற்றில், பஞ்சாபின் ஜலந்தரில் ட்ரோன் தாக்குதல் நடந்ததாகக் கூறப்பட்ட ஒரு வீடியோ, உண்மையில் ஒரு பண்ணை தீப்பிடித்து எரிந்த காட்சியாக இருந்தது.
இது இந்தியாவின் வான்வழி நடவடிக்கைக்கு முன்பே பதிவு செய்யப்பட்டது. மற்றொரு பதிவு, “20 ராஜ் பட்டாலியன்” என்ற பிரிவு, பாகிஸ்தான் தாக்குதலில் அழிக்கப்பட்டதாகக் கூறியது. ஆனால், இந்திய ராணுவத்தில் அப்படியொரு பிரிவே இல்லை என அரசு தெளிவுபடுத்தி உள்ளது.
மேலும், 2020 பெய்ரூட் வெடிப்பு காட்சிகளை, பாகிஸ்தான் வான்வழி தாக்குதல் என சிலர் தவறாகப் பரப்பினர். ராஜோரியில் ராணுவப் படை மீது தற்கொலைத் தாக்குதல் நடந்ததாகவும், தவறான வீடியோவுடன் வதந்திகள் பரவின. இவை அனைத்தும் பாகிஸ்தானில் இருந்து இயக்கப்படும் சமூக ஊடகக் கணக்குகளால், இந்தியாவுக்கு எதிரான கதையாடல் முயற்சியாகக் கருதப்படுகிறது.
பாகிஸ்தானின் தோல்வியடைந்த வான்வழி தாக்குதல்கள் மற்றும் அந்த நாட்டு ராணுவத்துக்கும் பயங்கரவாத அமைப்புகளுக்கும் இடையேயான இணைப்பு அம்பலமானதால், இதுபோன்ற புரளிகள் மூலம் மக்களை குழப்ப அந்த நாடு முயல்கிறது.
பொதுமக்கள் இதுபோன்ற தகவல்களைப் பரப்புவதற்கு முன், உண்மையை அறிந்து கொள்ள அரசு அறிவுறுத்தி உள்ளது. சமூக ஊடகங்களில் பரவும் செய்திகளை அப்படியே நம்பாமல், அவற்றை அரசு அமைப்புகள் அல்லது வங்கிகள் மூலம் உறுதிப்படுத்துவது முக்கியம். இதன்மூலம், பீதியையும் குழப்பத்தையும் தவிர்க்க முடியும் என்றும், பொதுமக்களின் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.