Amazing Tamilnadu – Tamil News Updates

அத்திக்கடவு – அவிநாசி திட்டம் துவக்கம்… 67 ஆண்டு கால காத்திருப்புக்குப் பின்னர் நிறைவேறிய கொங்கு மக்களின் கனவு… பயன்கள் என்ன?

ரோடு, திருப்பூர், கோவை மாவட்டங்களில் 24,468 ஏக்கர் பாசன நிலங்கள் பயன்பெறும் வகையில் 1916.41 கோடி ரூபாய் செலவில் நிறைவேற்றப்பட்டுள்ள அத்திக்கடவு — அவிநாசி திட்டத்தினை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலிக் காட்சி வாயிலாகத் தொடங்கி வைத்தார். இதன் மூலம் இம்மாவட்ட மக்களின் 67 ஆண்டுக் கால நனவு பல்வேறு தடைகளைத் தாண்டி இன்று நனவாகி உள்ளது.

கடந்து வந்த பாதை…

தமிழகத்தில் 67 ஆண்டுகளுக்கு முன் உருவானது இந்த அத்திக்கடவு-அவிநாசி திட்டம். இத்திட்டத்திற்காக 1957 ஆம் ஆண்டு முதன் முதலில் அப்போதைய தமிழ்நாடு முதல்வர் காமராஜரிடம் விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். அதன் பின்னர், 1960 ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் பக்தவச்சலம் அடிக்கல் நாட்டினார்.அடிக்கல் நாட்டப்பட்டதோடு சரி.அதன் பிறகு இந்த திட்டம் அடுத்த கட்டத்திற்கு நகரவில்லை.இந்நிலையில் 1972 ஆம் ஆண்டில் அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி தலைமையிலான திமுக அரசால் கொள்கை ரீதியாக திட்டம் ஏற்கப்பட்டு, நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் ஆட்சி மாற்றத்தால் இந்த திட்டம் அடுத்த கட்டத்திற்கு செல்லாமல் கிடப்பில் போடப்பட்டது.

பின்னர் மீண்டும் திமுக ஆட்சி அமைந்த பின் 1999 ஆம் ஆண்டு அத்திக்கடவு அவினாசி சுட்டு செயல்படுத்த முதலமைச்சர் கருணாநிதி முயற்சிகள் மேற்கொண்டார். ஆட்சி மாற்றம் காரணமாக மீண்டும் இந்த திட்டம் கிளப்பில் போடப்பட்டது. இந்த நிலையில், அத்திக்கடவு – அவிநாசி திட்ட போராட்டக்குழு உருவாக்கப்பட்டு, திட்டத்தை விரைவாக நிறைவேற்ற பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

பின்னர் 2000 ஆண்டு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு ரூபாய் 350 கோடியில் திட்டத்தை நிறைவேற்றலாம் என 2000 – 2001 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

கடந்த 2001 ஆம் ஆண்டு பிப்ரவரி 8 ஆம் தேதி போராட்டக்குழு சார்பில் 12 நாள் தொடர் உண்ணாவிரத போராட்டம் முக்கியத் திருப்பத்தை ஏற்படுத்தியது. அப்போது ஆட்சியில் இருந்த மறைந்த முதல்வர் ஜெயலலிதா ரூ. 3.27 கோடி மதிப்பில் நிதி ஒதுக்கீடு செய்து, நிர்வாக ஒப்புதல் அளித்து அரசிதழில் வெளியிட்டார். தொடர்ந்து கடந்த 2019-ம் ஆண்டு பிப். 28 ஆம் தேதி திருப்பூர் மாவட்டம், அவிநாசியில் இந்த திட்டத்துக்காக முன்னாள் முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து திட்டப் பணிகள் முழுவீச்சில் தொடர்ந்தன.இதையடுத்து கொரோனோ தொற்று பரவல் காரணமாக, திட்டப் பணிகள் நிறுத்தப்பட்டன. கடந்த அதிமுக ஆட்சியில் 80 சதவீதத்துக்கும் அதிகமான பணிகள் நிறைவுற்றிருந்தன.

பின்னர், 2021-இல் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆட்சி அமைந்த பின்னர் இந்த திட்டத்தை நிறைவேற்றுவதற்கான பணிகள் மீண்டும் வேகமெடுத்து, 1,916.417 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திருத்திய நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டு பணிகள் விரைவு படுத்தப்பட்டன.

அதன் தொடர்ச்சியாகத் திட்டப் பணிகள் விரைந்து மேற்கொள்ளப்பட்டு தற்பொழுது அனைத்துப் பணிகளும் முடிவடைந்து,சோதனை ஓட்டப் பணிகள் வெற்றிகரமாக நிறைவடைந்த நிலையில், அத்திக்கடவு – அவிநாசி திட்டத்தினை முதலமைச்சர் இன்று தொடங்கி வைத்தார்.

திட்டத்தின் பயன்கள் என்ன?

மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகும் பவானி ஆறு, கேரள மாநிலத்தில் பயணித்து மீண்டும் தமிழ்நாட்டில் அத்திக்கடவு வந்து சேருகிறது. பின்னர் பில்லூர் அணை வழியாக ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணைக்கு வரும் பவானியாற்று நீர், மேலும் 75 கிலோமீட்டர் தூரம் பயணித்து காவிரி ஆற்றில் கலக்கிறது.

மழைக்காலங்களில் ஏற்படும் வெள்ளப் பெருக்கின்போது, ஆற்றில் வீணாகும் தண்ணீரை கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களின் வறட்சிப் பகுதிகளில் உள்ள 1045 குளங்களுக்கு கொண்டு செல்லும் வகையில் அத்திக்கடவு – அவினாசி திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த 1,045 குளம், குட்டைகளுக்கு தண்ணீர் கிடைக்கும். காலிங்கராயன் அணைக்கட்டுக்கு கீழே, பவானி ஆற்றில் இருந்து தண்ணீர் இறைக்கும் இத்திட்டத்தின் மூலம் மூன்று மாவட்டங்களில் உள்ள 50 லட்சம் மக்கள் முதல் பயன்பெறுவர்.

Exit mobile version