சென்னை, அசோக்நகர் அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மந்திரம் சொன்னால் பிரபஞ்ச சக்தி இறங்கும் என மூடநம்பிக்கைகளை விதைக்கும் வகையில் மகாவிஷ்ணு என்பவர் நடத்திய நிகழ்ச்சி தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
அத்துடன், நிகழ்ச்சியின்போது மகா விஷ்ணுவின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்த பார்வையற்ற மாற்றுத்திறனாளி ஆசிரியரையும் மகா விஷ்ணு மரியாதை குறைவாக பேசியதற்கும் கண்டனங்கள் எழுந்தன. மேலும், இதுபோன்ற நிகழ்வுகளுக்கு எப்படி அனுமதி வழங்கப்பட்டது என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு எதிராகவும் சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்தன.
இதனையடுத்து இவ்விவகாரத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலையிட்டு, உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்ட நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், ” நான்கு நாட்களுக்குள் விசாரணை நடத்தி சம்பந்தபட்டவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த சம்பவத்துக்கு தலைமை ஆசிரியரா உயரதிகாரிகளா யார் காரணம் என்பது விசாரிக்கப்பட்டு கண்டிப்பாக நடவடிக்கை எடுப்போம்.
நாங்கள் எடுக்கப்போகும் நடவடிக்கை தமிழ்நாட்டில் இதுபோன்ற நிகழ்வுகள் நடக்காத வகையில் ஒரு மிகப்பெரிய பாடமாக இருக்கும். இந்த விவகாரத்தில் உங்களுக்கு இருக்கும் அதே உணர்வுதான் முதலமைச்சருக்கும், பள்ளிகல்வித்துறைக்கும் உள்ளது. என்னுடைய கட்டுப்பாட்டில் உள்ள இடத்திற்கு என் ஆசிரியர் சங்கரை அவமானப்படுத்தி பேசிய மகா விஷ்ணுவை சும்மா விடமாட்டேன்; கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
அதனைத் தொடர்ந்து, மேற்கூறிய நிகழ்ச்சி நடந்த அதே சென்னை அசோக் நகர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் “கல்வியே சமத்துவம் மலரச் செய்யும் மிகப்பெரிய ஆயுதம்” எனும் தலைப்பில் பொதுத் தேர்வு குறித்தான விழிப்புணர்வுக் கருத்துரைக் கூட்டத்தை அமைச்சர் அன்பில் மகேஷ் தொடங்கி வைத்தார்.
“கல்வியால் மாணவர்களுக்கு பகுத்தறியும் சிந்தனைத்திறன் ஏற்பட வேண்டும்” என்ற தந்தை பெரியாரின் கொள்கைகளை துறைசார் அலுவலர்களும், ஆசிரியப் பெருமக்களும், மாணவச் செல்வங்களும் பின்பற்ற வேண்டும் என எடுத்துரைத்தார். மேலும் நிகழ்ச்சியில், அறிவியல் ரீதியான கருத்துகளை மாணவிகளுக்கு கவிஞர் முத்துநிலவன் எடுத்துரைத்தார்.
இந்த நிலையில், அரசு பள்ளிகளில் தனியார் நிகழ்ச்சிகளை நடத்த அனுமதிக்க கூடாது என பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் அறிவுறுத்தியுள்ளார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலக கூட்டத்தில் அவர் இதனை தெரிவித்துள்ளார். அதன்படி, அரசு பள்ளிகளில் சொற்பொழிவு உட்பட எந்த வகையிலும் வெளியாட்கள் நிகழ்ச்சி நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
அரசுப் பள்ளி வளாகத்திற்குள், இனி அரசு சாரா அமைப்புகளின் நிகழ்வுகளுக்கு தடை விதிக்கப்படுகிறது என்றும், மீறினால், பள்ளி தலைமை ஆசிரியருடன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரும் பணி இடைநீக்கம் செய்யப்படுவார்கள் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அரசு பள்ளி ஆசிரியர்களே மாணவர்களை ஊக்கப்படுத்தலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, மகா விஷ்ணு மீது நடவடிக்கை எடுக்கக் கோரி போராட்டம் நடத்திய மாற்றுத்திறனாளி அமைப்பினர், பார்வை மாற்றுத்திறனாளியான ஆசிரியர் சங்கரை அவமதித்ததாக மகா விஷ்ணு மீது சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் சங்கத்தினர் புகார் அளித்துள்ளனர்.