Site icon Amazing Tamilnadu – Tamil News Updates

அரசுப் பள்ளியில் சர்ச்சை நிகழ்ச்சி… அமைச்சர் அன்பில் மகேஷுக்கு திமுக ஆதரவாளர்கள் எதிர்ப்பு… நடந்தது என்ன?

சென்னை, அசோக்நகர் அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மந்திரம் சொன்னால் பிரபஞ்ச சக்தி இறங்கும் என மூடநம்பிக்கைகளை விதைக்கும் வகையில் ஒரு நிகழ்ச்சி நடத்தப்பட்டு இருக்கிறது. இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

மகாவிஷ்ணு என்பவர் அரசு பள்ளிகளில் தன்னம்பிக்கை குறித்த பேச்சு என்ற தலைப்பில், முழுக்க முழுக்க ஆன்மிக சொற்பொழிவை நிகழ்த்தினார். கடந்த காலங்களில் செய்த பாவங்களுக்கு ஏற்ப இந்த ஜென்மம் கடவுளால் படைக்கப்பட்டிருக்கிறது என்று மாணவர்கள் மத்தியில் அவர் பேசினார். அவர் அப்படி பேசிக்கொண்டிருக்கும்போதே அங்கிருந்த ஆசிரியர் ஒருவர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். அரசுப் பள்ளியில் இதுபோன்ற ஆன்மிக நிகழ்ச்சியை, அதுவும் மாணவர்களிடையே மூடநம்பிக்கையை விதைக்கும் விதமாக முன்ஜென்மம், பாவம் புண்ணியம் போன்ற கருத்துகளைப் பேசக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்தார். ஆனால், அவருடன் மகாவிஷ்ணு வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இதைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட அரசு பள்ளிக்கு எதிராக மாணவர் அமைப்பினர் போராட்டம் நடத்தினர். இது தொடர்பான வீடியோ வைரல் ஆகி பெரும் சர்ச்சையானது. திமுக ஆதரவாளர்களே சமூக வலைதளங்களில் இதை வெகுவாக கண்டித்து பல்வேறு கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். அத்துடன் #ResignAnbilMahesh என்ற ஹேஷ்டேக்கும் X சமூகவலைதளத்தில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

மேலும், ” கடந்த காலங்களிலும் பல்வேறு அரசுப் பள்ளிகளில் இதேபோன்ற சர்ச்சைக்குரிய நிகழ்ச்சிகள் நடந்துள்ளன. கண்டனங்கள் எழும்போது மட்டும் அன்பில் மகேஷ் அது குறித்து விசாரிப்பதாகவும் நடவடிக்கை எடுப்பதாகவும் சொல்கிறார். ஆனால் எதுவுமே நடப்பதில்லை.

அரசு துறைகளில் மட்டுமல்ல; அரசுப் பள்ளிகளிலும் ஆர்எஸ்எஸ் ஆட்கள் ஊடுருவி விட்டார்கள். இதில் அமைச்சர் அன்பில் மகேஷும் இவர்களுக்கு ஆதரவாகவே நடந்துகொள்கிறார். பள்ளிக்கல்வித் துறையில் இது போல் நிறைய ஆர்எஸ்எஸ் ஊடுருவல் நடைபெற்றுக் கொண்டே தான் இருக்கிறது . இதை அன்பில் மகேஷ் எப்படி அனுமதிக்கிறார் என்று தெரியவில்லை. கட்டுப்படுத்த முடியவில்லை எனில் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யட்டும்” என ஆவேசமாக தெரிவித்துள்ளனர்.

இதனிடையே அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவும் இதே ரீதியில் தான் செயல்பட்டு வருகிறார் என்றும் அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். அண்மையில் பழனியில் நடந்த அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் சிலவற்றில், சர்ச்சைக்குரிய அம்சங்கள் இடம்பெற்றிருந்தன. குறிப்பாக ‘விழாக் காலங்களில் முருகன் திருக்கோயில்களில் மாணவ, மாணவிகளை கொண்டு கந்தசஷ்டி பாராயணம் செய்யப்படும். முருகப் பெருமானின் பெருமைகள் மற்றும் இலக்கியங்கள் குறித்து இந்து சமய அறநிலையத் துறையின் ஆளுகையின் கீழ் உள்ள திருக்கோயில்களின் சார்பில் நடத்தப்படும் கல்லூரிகளில் சிறப்பு ஆன்மிகப் பாடப்பிரிவுகளை ஏற்படுத்த அரசுக்கு பரிந்துரைக்கப்படும்’ என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதற்கு திமுக கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, திராவிடர் கழகம் போன்றவை மட்டுமல்ல, திமுகவில் உள்ளவர்களே எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

அமைச்சரை ஏற்கெனவே சந்தித்த மகாவிஷ்ணு

இந்த நிலையில், இந்த இரு நிகழ்வுகளையும் குறிப்பிட்டு, ” ஒரு பக்கம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திராவிடக் கொள்கைகளை தூக்கிப்பிடித்து, இந்த ஆட்சி ‘திராவிட மாடல் ஆட்சி’ என முழங்கி வருகிறார். மறுபுறம் அன்பில் மகேஷும், சேகர் பாபுவும் திராவிட கொள்கைகளைக் குழிதோண்டி புதைக்கும் விதமாக செயல்பட்டு வருகிறார்கள். திமுக-வுக்கு வேட்டு வைக்க வேறு யாரும் தேவையில்லை. இந்த இரண்டு அமைச்சர்களுமே போதும். முதலமைச்சர் ஸ்டாலின் முதலில் இந்த இரண்டு பேரையும் அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும்” என்றும் திமுக ஆதரவாளர்கள் ஆவேசமாக கூறுகின்றனர்.

தலைமை ஆசிரியை இடமாற்றம்

இந்த நிலையில், இந்த விவகாரம் பெரும் சர்ச்சையானதைத் தொடர்ந்து, இந்த நிலையில், அரசு பள்ளியில் ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சி நடத்தியது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை விசாரணை நடத்தி வருகிறது. மேலும் சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியரை இடமாற்றம் செய்தும் உத்தரவிட்டுள்ளது.

‘எதிர்காலத்தில் இதுபோன்று நடக்காது’

இந்த கடும் எதிர்ப்புகளைத் தொடர்ந்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், ” நான்கு நாட்களுக்குள் விசாரணை நடத்தி சம்பந்தபட்டவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த சம்பவத்துக்கு தலைமை ஆசிரியரா உயரதிகாரிகளா யார் காரணம் என்பது விசாரிக்கப்பட்டு கண்டிப்பாக நடவடிக்கை எடுப்போம். நாங்கள் எடுக்கப்போகும் நடவடிக்கை தமிழ்நாட்டில் இதுபோன்ற நிகழ்வுகள் நடக்காத வகையில் ஒரு மிகப்பெரிய பாடமாக இருக்கும். இந்த விவகாரத்தில் உங்களுக்கு இருக்கும் அதே உணர்வுதான் முதலமைச்சருக்கும், பள்ளிகல்வித்துறைக்கும் உள்ளது. என்னுடைய கட்டுப்பாட்டில் உள்ள இடத்திற்கு என் ஆசிரியர் சங்கரை அவமானப்படுத்தி பேசிய மகா விஷ்ணுவை சும்மா விடமாட்டேன்; கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

முதலமைச்சர் போட்ட உத்தரவு

மேலும், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினும் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “எதிர்காலச் சவால்களை, தன்னம்பிக்கையோடு எதிர்கொள்ளவும், அறிவாற்றலைக் கூர்மைப்படுத்திக் கொள்ளவும் தேவையான சிறப்பான கருத்துகளை ஆசிரியர்களே எடுத்துக்கூற முடியும். அதற்குத் தேவையான புத்தாக்கப் பயிற்சியை, சமூக கல்வியை – தக்க துறைசார் வல்லுநர்கள், அறிஞர் பெருமக்களைக் கொண்டு வழங்கத் தேவையான முயற்சிகளைப் பள்ளிக்கல்வித் துறை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழ்நாட்டின் எதிர்கால சந்ததியினரான நம் பள்ளிக் குழந்தைகள் அனைவரும், முற்போக்கான – அறிவியல் பூர்வமான கருத்துகளையும் வாழ்க்கை நெறிகளையும் பெற்றிடும் வகையில், மாநிலத்தில் உள்ள பள்ளிகளில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளை வரைமுறைப்படுத்துவதற்கான புதிய வழிமுறைகளை வகுத்து வெளியிட நான் ஆணையிட்டுள்ளேன். அறிவியல் வழியே முன்னேற்றத்துக்கான வழி!” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version